தமிழக மின்வாரியத்தில் 7,000 கோடி ரூபாய் நஷ்டம்?: மின் கட்டணம் உயருமா?

தமிழக மின்சாரவாரியத்தில் ரூ7 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், காரணங்களைக்காட்டித்தான் புதிய இணைப்புக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல வகைகளில் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளன.தமிழகத்தில் 2 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. மேலும், கடைகள்(வணிகம்)-35 லட்சம், தொழிற்சாலைகள் 7 லட்சம்; விவசாயம் 21 லட்சம், குடிசைகள்-11 லட்சம் என 2.90 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன. இவ்வாறு மின்சாரத்தை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் செலுத்தும் கட்டணம், மானியம் போன்றவற்றின் வாயிலாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல், வாரியத்திற்கு ஆண்டுதோறும் வருவாய் கிடைக்கிறது.மற்றொருபுறம் ஊழியர்களுக்கு சம்பளம், எரிபொருள், கடனுக்கான வட்டி உள்ளிட்டவைக்கு செலவு செய்யப்படுகிறது. அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களிடமிருந்து சந்தையை விட அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது, நிலக்கரி, உபகரணங்கள் வாங்கியதால் 2014-15ம் ஆண்டில் வாரியத்திற்கு 12 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டின. அதன் தொடர்ச்சியாக மின்வாரியத்தின் தலைவராக சாய்குமார் பொறுப்பேற்றார். அவர் அதிக விலை கொடுப்பதை முற்றிலுமாக நிறுத்தினார். இதனால் லாபம் ஈட்டும் நிலைக்கு வாரியம் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மின்சார வாரியத்தில் மீண்டும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பளம் போடுவதற்கு கூட நிதி இல்லாமல், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 2017 செப்டம்பர் வரை உள்ள கால கட்டங்களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இதுபோன்ற பிரச்னைகளை காரணம் காட்டி, மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, கருத்துக்கேட்புக்கூட்டமும் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற ெபாதுமக்கள், சமூகநல அமைப்புகள் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் எனத்தெரிவித்தனர்.ஆனால் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. இது பொதுமக்களை பாதிக்கச்செய்துள்ளது. மேலும் மற்றகட்டணங்களையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் கட்டணங்களை உயர்த்தாமல், வாரியத்தில் உள்ள பிரச்னைகளை சரிசெய்தாலே லாபத்தில் இயங்க வைக்க முடியும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:எண்ணூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டு பல வருடங்கள் ஆகின்றது. செயல்படாத இந்த நிலையத்திற்கு வாங்காத நிலக்கரியை கொண்டு சேர்த்ததாகவும்,அதனை ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு கையாண்டதாகவும் கூறி ஒப்பந்ததாரருக்கு சர்ஜீஸ் சார்ஜூடன் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.இதனால் 2017ம் ஆண்டுசெப்டம்பர் வரை சுமார் ரூ.22.53 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு பின்னர் இழப்பு தெரியக்கூடாது என்பதற்காக தணிக்கை குறிப்பு வெளியிடப்படக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவு போடப்பட்டதால், வெளியிடப்படவில்லை.எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு 2017 செப்டம்பர் வரை அதிகமாக நிலக்கரி கையாண்டதற்காக வழங்கிய தொகையால், ரூ.11 கோடி மின் பகிர்மானக் கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதேபோல் ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த சரத்தின்படி பழுதான உதிரிபாகங்களின் மதிப்பு ரூ.25,000க்கு குறைவாக இருக்குமானால் அதனை ஒப்பந்ததாரர், அவரது சொந்த செலவினில் வாங்கி பண்டக சாலை கணக்கில் ஏற்றியபின் ஒப்பந்த காலத்திற்குள் மாற்றிக்கொள்ள வேண்டும். பழுதான உதிரிபாகங்களின் மதிப்பு ரூ.25,000க்கு அதிகமாக இருக்குமானால், அதனையும் ஒப்பந்ததாரர் செலவினில் வாங்கி பண்டக சாலை கணக்கில் ஏற்றியபின் மாற்றிக்கொண்டு, அதன்பின்னர் அத்தொகையை உரிய பண்டகசாலை அலுவலரின் சான்றிதழையும், பொருள்கள் வாங்கியமைக்கான ரசீதையும் கொடுத்து வாரியத்திடமிருந்து ஈடுசெய்துக்கொள்ள வேண்டும்.

ஒப்பந்ததாரரின் கணக்குப்படி ரூ.25,000 கீழ் மதிப்புக்கொண்ட பொருள்களின் மதிப்பு ரூ.3,67,86,959 எனவும், ரூ.25,000க்கு மேல்மதிப்பு கொண்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.1,00,92,917 என தொகையும் ஈடுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்தளவாட, உதிரி பாகங்கள் பண்டக சாலையின் கணக்கில் வரவே இல்லை. இந்த பண்டக சாலை கணக்கில் வராத, கேட் பாஸ் புக்கிங் வராத சாமான்களை எப்படி வாங்கியிருக்க முடியும். இதன்மூலம் 4.67 கோடி சுவாகா செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கும்ேபாது 24.78 லட்சம் வாட் வரியாகவும், ரூ.16.76 ேகாடி சேவை வரியாகவும், ரூ.16.76 கோடி சேவை வரியாகவும், ரூ.6.98 லட்சம் எக்சைஸ் டூட்டியாகவும் செலுத்தப்பட்டுள்ளதாக கூறி எவ்வித ஆதாரமும் இல்லாமலே, அதுவும் ஒப்பந்ததாரருக்கு ஈடு செய்து வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒப்பந்ததாரரால் அன்றாடம் உண்மையிலேயே கையாளப்படும் நிலக்கரியின் அளவிற்கு பணப்பட்டுவாடா செய்யும்படி ஒப்பந்த சரத்து போடாமல், அனல் மின்நிலையங்களின் மொத்த நிலக்கரி தேவைக்குமான நிலக்கரியை தினமும் கையாண்டதாக கொண்டு பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் சரத்து உள்ளதால், முழுக்கொள்ளவுக்கான நிலக்கரியையும் கையாண்டதாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் வருடத்தில் ஒருநாள் கூட முழு கொள்ளளவை எட்டுவதில்லை என்பதுடன் வருடத்திற்கு 42 நாட்கள் மின்நிலையம் இயங்குவதேயில்லை என்பதால் 42 நாள்களுக்கு நிலக்கரி தேவை பூஜ்ஜியம் ஆகும். இதனால் வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ரயிலில் வந்த நிலக்கரியை குறித்த நேரத்திற்குள் இறக்காமல் இருந்த காரணத்தினால் அபராத வாடகை கட்டணமாக சுமார் ரூ.135.17 கோடியை மின்வாரியம் ரயில்வே நிர்வாகத்திற்கு செலுத்தியுள்ளது. ஆனால் ஒப்பந்த சரத்தில் நிலக்கரியை இறக்குவதற்கோ அல்லது கையாளவோ ஏற்படும் காலதாமதத்திற்கான தண்டத்தொகை ஏதாவது ரயில்வே நிர்வாகத்தால் விதிக்கப்பட்டால், அந்த கட்டணத்தை ஒப்பந்ததாரர்தான் செலுத்திட வேண்டும்.

ஒவ்வொரு அனல்மின்நிலையமும் பராமரிப்பு பணிக்காக ஆண்டுக்கு 42 நாட்கள் மூடப்பட்டிருக்கும். ஆனால் இந்த நாட்களில் கூட நிலக்கரியை, அனல்மின்நிலையங்களுக்கு ரயிலில் கொண்டு சென்றதாகவும், நிலையத்திற்குள்ளே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தியதாகவும், நிலக்கரி திறந்தவெளியில் கிடப்பதால் அனல் காற்றின் காரணமாக அது தானாகவே பற்றி எரியத்தொடங்கிவிடும் என்பதால், அதன்மீது தண்ணீரை பீச்சி கொண்டே இருந்ததாக பில் தயார் செய்து, ஆண்டுதோறும் சில நூறு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களால், மின்சார வாரியத்தில், தற்போது ரூ.6,500 கோடிக்கு மேல் நஷ்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
எல்லா அரசு துறையைச் சார்ந்த நிறுவனங்களிலும், அந்தந்த துறையை சார்ந்த வல்லுனர்களைக் கொண்ட ஒரு உள்தணிக்கை பிரிவு செயல்படும்.

இந்தப் பிரிவின் பணியானது, ‘அந்த துறையில் நடைபெற்றுள்ள தேவையற்ற மற்றும் தவிர்க்க வேண்டிய செலவினங்களை உடனுக்குடன் கண்டறிந்து அதனை தவிர்க்க அறிவுறுத்தும். அந்ததுறையில் ஒப்பந்த புள்ளிகள் மூலம் நடைபெரும் வேலைகளில் உள்ள முறைகேடுகள் சுட்டிக்காட்டப்படும்’. இதுவே இத்துறையின் தலையாய கடமையாகும். எந்தவொரு அரசு மற்றும் அரசு சார்ந்த துறையிலும் உட்தணிக்கைப்பிரிவானது தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும், யாருடைய நிர்ப்பந்தத்திற்கும் அடிபணியாமலும், ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாகவும் செயல்படாமல் தான் இருக்கும். ஆனால் தமிழ்நாடு மின்வாரியம், அப்படிசெயல்படவில்லை. இதனால் விரைவில் ஏராளமான பிரச்னைகள் ஏற்படப்போகிறது. மின்வாரியத்தில் இந்தநிலை தொடர்ந்தால் மின்கட்டணத்தை இருமடங்காக உயர்த்தினாலும், லாபகரமாக இயக்கிட முடியாது. பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் மின்விநியோகம் சென்றுவிடும். அப்போது நுகர்வோர் அதிக அளவு கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். இதனால் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த முறைகேடுகள் 2017 செப்டம்பர் வரை நடைபெற்றுள்ளன. தற்போது மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து முறையான விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது,நிலக்கரி, உபகரணங்கள் வாங்கியதால் 2014-15ம் ஆண்டில் வாரியத்திற்கு 12 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பல முறைகேடுகள் 2017 செப்டம்பர் வரை நடைபெற்றுள்ளன. தற்போது மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும்.

Related posts:

கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் ? அபிக்யா ஆனந்த் கணிப்பு.!
தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரோட்டரி கிளப் நிதியுதவி!
பிணங்களுடனும், பிணங்களுக்கு நடுவிலும் அகோரிகள் ஏன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?
எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தமிழ்நாடு கிராம வங்கியுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
சூரிய மின்சக்தி நடமாடும் ஆட்டோ வீடு !
தமிழக அரசு- மின்வாரியத்தில் மட்டும் ரூ.11,679 கோடி நட்டம்: அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி.!!
'கொரோனா' பரிசோதனை இலவசம்' ! உச்ச நீதிமன்றம் உத்தரவு !!
"தமிழகத்தில் சொத்து வரி உயர்வு ரத்து ! உள்ளாட்சி தேர்தல் பயமா?