டெஸ்லாவுக்கு போட்டியாக சீன மின்சார கார்கள்!

சீனாவை சேர்ந்த கீலி ஆட்டோமொபைல் நிறுவனம் வாகனத் தயாரிப்பில் பிரபலமாக விளங்குகிறது. ஸ்வீடனை சேர்ந்த வால்வோ வாகனத் தயாரிப்பு நிறுவனமும் தற்போது கீலி நிறுவனத்தின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மின்சார கார் தயாரிப்புக்காக புதிய நிறுவனத்தை துவங்கி இருக்கிறது.ஜியோமெட்ரி என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த நிறுவனத்தின் கீழ் புதிய மின்சார கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் 2025ம் ஆண்டிற்குள் 10 மின்சார கார்களை இந்த நிறுவனத்தின் கீழ் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், முதல் மின்சார கார் மாடலை ஜியோமெட்ரி என்ற பெயரிலேயே அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஜியோமெட்ரி மின்சார கார்கள் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோமெட்ரி மின்சார காரின் முக்கிய சிறப்பம்சமே அதன் ரேஞ்ச்தான். ஆம். இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். இந்த கார் அமெரிக்க டாலர் மதிப்பில் 31,250 முதல் 37,200 விலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.இந்த காரின் டிசைன் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் இருக்கும். பகல்நேர விளக்குகள், அழகான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் டிசைன் அமைப்பு, வலிவமையான ஷோல்டர் லைன், வசீகரிக்கும் அலாய் வீல்கள் ஜியோமெட்ரி காரின் முக்கிய டிசைன் அம்சங்கள்.
இந்த காரில் கருப்பு- பீஜ் வண்ண டியூவல் டோன் இன்டீரியர் தீம் கொடடுக்கப்பட்டுள்ளது. பெரிய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஜியோமெட்ரி காரில் 51.9 kWh திறன் கொண்ட பேட்டரி பன்படுத்தப்பட இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் 61.9 kWh பேட்டரி இடம்பெறுகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 410 கிமீ முதல் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும்.இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 8.8 வினாடிகளில் எட்டிவிடும். குயிக் சார்ஜர் மூலமாக அரை மணிநேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் ஏற்றமுடியும்.ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், முன்கூட்டியே பாதசாரிகளை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த காரில் 360 டிகிரி கேமராவும் உள்ளது.

இந்த காருக்கு ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. சீனா தவிர்த்து சிங்கப்பூர், நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இதுவரை 27,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டவுடன் ஜியோமெட்ரி மின்சார கார்களை எதிர்பார்க்கலாம். இந்த காரை தொடர்ந்து அடுத்தடுத்து 9 மின்சார கார்களை 5 ஆண்டு காலத்திற்குள் வரிசை கட்ட முடிவு செய்துள்ளது கீலி ஆட்டோ நிறுவனம்.