சிறிய கடைகள், உணவகங்கள் போன்றவை, ‘வைபை’ இணைப்பு சேவைக்கான, சில்லரை விற்பனையில் ஈடுபடுவதை அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.இது குறித்து, தொலை தொடர்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முன், ‘டெலிபோன் பூத்’ வைத்து நடத்தி வந்ததை போல, இப்போது வைபை இணைப்பை, சில்லரை விற்பனைக்கு வழங்குவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. முதலில் தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான, ‘டிராய்’ அமைப்பு தான், இத்தகைய வைபை சேவையை வழங்க, ‘பப்ளிக் டேட்டா ஆபீஸ்’ எனும், வர்த்தக மாதிரியை முன்மொழிந்தது. இதற்கு தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், அரசு இத்தகைய வைபை சில்லரை விற்பனையின் மூலம், விரைவில் நாட்டை டிஜிட்டல் மயமாக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளது.
தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் எதிர்ப்பு குறித்து, டிராய் தலைவர், ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது: தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, புதிய போட்டியாளர்கள் உருவாகுவர் என்பது தவறான அனுமானம். அவர்களது, ‘பிக்ஸ்ட் லைன்’ இணைப்பு வைத்திருப்பவர்கள், இனி அவர்களது சில்லரை விற்பனையாளர்களாக மாறுவர் என்பதை பார்க்கத் தவறிவிட்டனர். விரைவில் இச்சேவை வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.