ஜி.எஸ்.டி.தாக்கல் செய்யாதவர்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் ?

சரக்கு மற்றும் சேவை வரி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும், அவர்களது வங்கி கணக்கு முடக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது, நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை தான் இது. ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், ஒருவர் மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில், 20 சதவீதம் பேர் கணக்கை தாக்கல் செய்வதில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜி.எஸ்.டி., வருமான வசூலை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்வதில் போதாமைகள் இருக்கிற காரணத்தால், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம், ஒரு வசதியை வழங்குகிறது. இதன்படி, கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு, கெடு தேதிக்குப் பின், ‘மெயில்’ அல்லது குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும்.அடுத்த, ஐந்து நாட்களுக்குப் பின், 15 நாட்களுக்குள் வருமானத்தை தாக்கல் செய்யுமாறு அல்லது பணம் செலுத்துமாறு கூறி, ஓர் அறிவிப்பு கொடுக்கப்படும்.

இந்த அறிவிப்பு வெளியான, 15 நாட்களுக்குள், வருமான கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், தகுதியான அதிகாரியால், கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் வரி கணக்கு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். வழங்கப்படும் கெடுவுக்குள், ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், நிறுவனத்தின் பதிவை ரத்து செய்வது, வங்கி கணக்கை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் தான். இருப்பினும், தற்போதைய மந்தநிலை, நிதித் தட்டுப்பாடு ஆகிய காரணங்களால், பலர் நிறுவனங்களை நடத்தவே சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நிறுவனத்தின் பதிவை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள், பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என்றும் ஒரு தரப்பினர் எச்சரிக்கை செய்கின்றனர்.