ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில்’மான்குர்த்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. !

ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில் அன்ச்செயின்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் மும்பையை பின்னணியாக கொண்ட விறுவிறுப்பான திரைப்படம் ‘மான்குர்த்’ வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

பல்வேறு விருதுகளை பெற்ற குறும்படங்களை இயக்கியுள்ள பிரவீன் கிரி, இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா முதன்மை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றிலும் பணியாற்றி இருக்கிறார்.

அவரது ‘மான்குர்த்’ திரைப்படம் மும்பையின் பரபரப்பான வீதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இரண்டு சாதாரண சிறுபான்மையினர் ஒரு அசாதாரண அரசியல் விளையாட்டில் அவர்களுக்கே தெரியாமல் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இடைத்தேர்தலை முன்னிட்டு ஒரு அரசியல் கட்சி செய்யும் சதியில் முகமதும் அவரது மகள் நிஷாவும் பலிகடா ஆகிறார்கள். என்ன செய்வது என்று அவர்கள் தவிக்கும் நிலையில், நல்லெண்ணம் கொண்ட தலைவர் ஒருவர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். வஞ்சகர்கள் வலையில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதை பரபரப்பாக சொல்லும் வகையில் ‘மான்குர்ட்’ உருவாகி உள்ளது.

மதங்களை தாண்டிய மனிதநேயத்தை பேசும் இப்படத்திற்கு ஹரிஷ் ராஹித்யா இசையமைத்துள்ளார், விஷ்வா ஒளிப்பதிவு செய்துள்ளார், ப்ரியன் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்க, ரிகேஷ் குமார் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ‘மேதகு’ புகழ் ராஜா, சௌந்தர்யா மனோகரன், சையத் பாஷா மற்றும் அல்கா சக்சேனா ஆகியோர் நடித்துள்ளனர். பாரதி கோலப்பன், எம்.ராஜா மற்றும் அம்மு பைரவி ஆகியோர் முக்கிய பங்களித்துள்ளனர். பன்முகத்தன்மை மிக்க ‘மான்குர்த்’ கதையில் தமிழ், இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழியினர் நடித்துள்ள நிலையில் பன்மொழித் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.

திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்களிப்போடு சுயாதீன திரைப்படமாக தயாராகியுள்ள ‘மான்குர்த்’, உலகெங்கும் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடபட இருக்கிறது.