இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி யின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பொது துறை நிறுவனங்களில் ‘பொன் முட்டையிடும் வாத்தாக’ திகழ்கிறது எல்.ஐ.சி நிறுவனம். இக்கட்டான தருணங்களில் அரசின் நிதி தேவைகளை பூர்த்தி செய்து, மிக சிறந்த நிறுவனமாகவும் எல்.ஐ.சி திகழ்ந்து வருகிறது. பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா போன்ற அரசின் நிர்வாகத்தில் உள்ள பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தத்தளித்து கொண்டிருக்க, இதற்கு விதிவிலக்காக தனியார்த்துறை போட்டியை முறியடித்து தலைநிமிர்ந்து நிற்கிறது எல்.ஐ.சி.நிறுவனம். இந்நிலையில் எல்.ஐ.சி யின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு, அதன் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை, நிறுவன பணியாளர்கள் மற்றும் பாலிசிதாரர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழலில் கோடிக்கணக்கான பாலிசிதாரர்களின் நம்பிக்கையை அரசு காப்பாற்ற வேண்டுமெனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு தீட்டும் பல்வேறு திட்டங்களுக்கு எல்.ஐ.சி நிறுவனம் தொடர்ந்து கோடிக்கணக்கில் நிதி கொடுத்து வருகிறது. இதனிடையே, எல்.ஐ.சியால் அரசு பல நன்மைகளை அடைத்து வரும் நிலையில், அதனுள்ளே தனியார் நிறுவனம் வந்துவிட்டால், சூழ்நிலை மாறும் என எல்.ஐ.சி ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கினறனர். பங்குகளை வாங்கி, உள்ளே வரும் தனியார் நிறுவனம், லாப நோக்கில் மட்டுமே சிந்திப்பார்கள் என்பதால், எல்.ஐ.சியின் சமநிலை தகர்க்கப்படும் என்ற எச்சரிக்கையையும் ஊழியர்கள் விடுத்துள்ளனர். இதுபோன்ற சந்தேகங்களுக்கு அரசு விளக்கமளிக்க வேண்டுமென்பதே, எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களின் வேண்டுகோளாகும்.