அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே என்ற தாய்.. உம் என்று சொன்ன சுஜித்.. மீட்பு குழு உற்சாகம்.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்திடம் அவரது தாய் மேரி பேசினார். அதற்கு சிறுவனும் பதில் சொல்லியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் உள்ள சுமார் 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில், சுஜித் என்ற 2 வயது சிறுவன் இன்று மாலை 5.40 மணி அளவில் எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டார்.இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரவு 12.50 மணியளவில் கிடைத்த தகவல்படி, குழந்தை 7 மணி நேரத்துக்கும் மேலாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருப்பதால் சோர்வடைந்து இருக்கிறது என்று தெரியவந்தது.
எனவே சுஜித்திற்கு உற்சாகமூட்டும் வகையில், சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை வைத்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றனர் அதிகாரிகள். சுஜித் தாய் மேரி, “அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே” என்று கூறியதற்கு “உம்” என்று சுஜித் பதிலளித்துள்ளார். எனவே, சுஜித் மயக்க நிலைக்கு செல்லவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.சுஜித்தை மீட்க மணிகண்டன் குழு நடத்திய முயற்சியில் பின்னடைவு.. இருப்பினும் இவ்வளவு ஆழத்தில், இருக்கும்போது மண்ணில் உள்ள ஈரப்பதம் காரணமாக குழந்தையின் உடலில் வெப்ப நிலை குறைந்து கொண்டே செல்லும். இதற்கு மனரீதியாகவும் தைரியம் தேவை என்பதால் குழந்தையின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.ஆரம்பத்தில், மேரியால் நிகழ்விடத்திற்கு வரமுடியவில்லை. ஏறத்தாழ மயங்கிய நிலையில் வீட்டில் படுத்துவிட்டார். ஒருவழியாக உறவினர்கள் அவரை தேற்றி, நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்றனர். எப்படியும் பத்திரமாக மீட்டு விடுவோம் என்று மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.