கோனே நிறுவனம் 450 கோடி முதலீட்டில் சென்னையில் தனது மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது!

மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் தயாரிப்பில் உலகில் முன்னணியில் உள்ள, கோனே கார்பரேஷனின் முழு உரிமம் உள்ள துணை நிறுவனமான, ’கோனே எலிவேட்டர் இந்தியா நிறுவனம்’ தனது உலகத் தரத்திலான மின்தூக்கிகளுக்கான தொழிற்சாலையை சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் கட்டமைத்து, அதைத் திறந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலையை மேதகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெச்.இ.பெக்காஹாவிஸ்டா, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கோனே நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்டிஹெர்லின்,கோனே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹென்ரிக்எர்னூர்த்,கோனே கார்பொரேஷன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மற்றும் ஆஸ்திரேலியா செயல் துணைத்தலைவர் ஆக்செல்பெர்க்லிங், கோனே இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமித்கோஸ்ஸெயின் உள்ளிட்ட பலர் இந்தநிகழ்ச்சியில் பங்கேற்று முன்னிலை வகித்தனர். தேவைக்கு ஏற்ற அளவிலான உற்பத்தித்திறனுடன், 450 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தொழிற்சாலையில்,600-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புப் பெறுவார்கள்.

’கோனேஇந்தியா’ நிறுவனம், தனது புதிய தொழிற்சாலையின் மூலமாக நாட்டின் விரைவாக மாறி வரும் நகர்மயமாக்கலுடன் இணைந்து பயணிக்க முழுவீச்சில் தயார் ஆகியுள்ளது. 50 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்தூக்கி உற்பத்தித் தொழிற்சாலை இந்தப் பகுதியிலேயே மிகப் பெரியது ஆகும். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட செயல்பாட்டு யுக்திகளையே தனது பிரதான நோக்கமாக கொண்டிருக்கும் கோனே இந்தியா நிறுவனம், அதிநவீன மற்றும் மிகச் சிறந்த தரத்திலான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு குறுகிய காலத்தில் வழங்குவதற்காகவே அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு இந்தத் தொழிற்சாலையை வடிவமைத்துள்ளது. இந்தப் புதிய தொழிற்சாலையானது இந்தியச் சந்தையில் தனது முழுக்கவனத்தை செலுத்தும் அதே நேரத்தில் அண்டை நாடுகளான நேபாளம்,பூடான்,வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் கோனே இங்கு உற்பத்தியாகும் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும்.

நிகழ்ச்சியில் பங்கேற்று தொழிற்சாலையைத் தொடங்கி வைத்துப் பேசிய மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால்புரோஹித், “கோனே இந்தியா நிறுவனத்தின் புதிய உலகத்தரத்திலான மின்தூக்கி உற்பத்தித்
தொழிற்சாலையின் தொடக்க விழாவுக்காக நான் இங்கிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பிராந்தியத்திலேயே மிகப் பெரிய மின்தூக்கி உற்பத்தித் தொழிற்சாலையை கட்டமைப்பதற்காக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பள்ளிப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவை கோனே நிறுவனம் தேர்வு செய்திருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதிநவீன தொழில்நுட்ப தீர்வுகளையும் , வேலைவாய்ப்புகளையும் நம்நாட்டிற்கு வழங்கும் கோனே கார்பொரேஷன் நிறுவனத்தின் இந்த முதலீட்டை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.” என்றார்.

ஃபின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெச்.இ.பெக்காஹாவிஸ்டோ இந்த நிகழ்ச்சியில் தமது கருத்துகளைத் தெரிவித்துப் பேசுகையில், “இந்த மதிப்புமிகு நிகழ்ச்சியில் நானும் ஒரு அங்கமாக பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவும் ஃபின்லாந்தும் அருமையான நட்புறவுடன், வலுவான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இருநாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இந்தியா உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. இந்த வலுவான பொருளாதார வளர்ச்சியில் ஃபின்லாந்து நிறுவனங்கள் சிறந்த பங்களிப்பை உற்சாகத்துடன் வழங்கி வருகின்றன. ஃபின்லாந்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது வலுவான செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், “நாட்டில் தொழில் வளம் மிகுந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக, முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை பணியாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பிடும் போது,மற்ற எல்லா மாநிலங்களையும் விட அதிகளவிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மிகச்சிறந்த அமைவிடம், வர்த்தகம் புரிவதற்கு ஏற்ற சூழல்,அதி நவீன உள்கட்டமைப்பு வசதிகள்,நேர்மறையான சிறந்த அரசு நிர்வாகம், நல்ல சுற்றுச்சூழல் ஆகிய பல அம்சங்கள் தமிழகத்தில் ஒருங்கே அமைந்துள்ளதால் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள அதிகம் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. கோனே நிறுவனம் ,இந்த அதிநவீன மேம்பட்ட தொழில் நுட்பங்களுடனான தொழிற்சாலையை தமிழகத்தில் அமைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இதன் மூலம் தமிழகப் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதன் நோக்கம் மற்றும் பின்னணி குறித்து கருத்துத் தெரிவித்த கோனே கார்பொரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹென்ரிக்எர்னூர்த், “இந்தியாவில் இந்தஅதிநவீன தொழிற்சாலையை தொடங்குவதில் நாங்கள் பெரிய மகிழ்ச்சி அடைகிறோம். இந்த அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் விரிவாக்கப்பட்ட தொழிற்சாலை எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். அத்துடன் இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும் மின்தூக்கி தேவையின் வளர்ச்சிக்கு ஏற்ப தேவையை எதிர்கொள்ள இது உதவும். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எங்களது வெற்றி உத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.