‘கொம்பு வச்ச சிங்கம்டா’

சாதியில்லை, சாமியில்லை என்று சொல்லி ஊருக்குள் புரட்சி பேசும் ஆறு நண்பர்களுக்குள் பிரச்சினை வெடித்து அவர்கள் பிரிந்ததால் உருவானது தான் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. படத்தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் ஊரே கொண்டாடி, மரியாதை செய்யும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார் இயக்குனர் மகேந்திரன். இவரது ஒரே மகன் சசிகுமார் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். இதனால் ஊருக்குள் இருக்கும் பல பேரின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. அந்த நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கோஷ்டிகள் மோதுகின்றன. அதில் மாமனாருக்காக சசிகுமாரும் எதிர்க்கோஷ்டிக்கு 3 நண்பர்களுமாகப் பிரிந்து தேர்தல் வேலை செய்கிறார்கள்.அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. இந்தக் கொலை வழக்கில் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள். நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது.

இந்தப் பிரச்சினை ஊதி ஊதிப் பெரிதாக்கப்படும் நிலையில் எப்படி அணைக்கப்படுகிறது, கொலையானது யார், கொலைக்கான பின்னணி என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது கொம்பு வச்ச சிங்கம்டா கதை.

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் சசிகுமாருடன் களம் இறங்கியுள்ளார். அவர் திரும்பி வந்ததில் மகிழ்ச்சிதான். ஆனால், விரும்பும் அளவுக்குப் படம் இல்லாமல் ஏமாற்றத்தை மட்டுமே அளிப்பதுதான் சோகம்.

படத்தின் சமூகக் கருத்தைப் பரவலாக்கம் செய்வதற்கு சசிகுமார் சரியாகப் பயன்பட்டிருக்கிறார். திகைப்பு, உற்சாகம், வெட்கம் என எந்த உணர்வையும் கண்டறிய முடியாத அளவுக்கு பொத்தாம்பொதுவாக முகத்தை வைத்துக் கொள்கிறார். இன்னமும் நடிக்க வரவில்லை.காதல் காட்சிகளில் செயற்கையாகத்தான் தெரிகிறார். பற்றி எரியும் பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து செயல்படும் வேகத்தில் மட்டும் வழக்கமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

மடோனா செபாஸ்டியன் பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டுள்ளார். ஒரே ஒரு முக்கியக் காட்சியில் மட்டும் நடித்திருக்கிறார். நல்லவரா, கெட்டவரா என்று இனம் கண்டுகொள்ள முடியாத அளவுக்குத் திறமையான நடிப்பால் இந்தர் குமாரும், ஹரீஷ் பெராடியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

மென்மையான தன்மையில் இயக்குநர் மகேந்திரனின் நடிப்பு அருமை. சூரியின் காமெடி சுத்தமாக வொர்க் அவுட் ஆகவில்லை. குலப்புள்ளி லீலா, தீபா ராமானுஜம், பிரியங்கா, சென்றாயன், சங்கிலி முருகன், அருள்தாஸ், அபி சரவணன் எனப் பலர் வீணடிக்கப்பட்டிருக்காங்க.சமூகக் கருத்துள்ள படத்தில் சமுத்திரக்கனி வந்து போகிறார்? அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கதையை எப்படி, எங்கிருந்து தொடங்குவது என்ற பீடிகைக்காக மு.ராமசாமி வந்து போகிறார்.

கரூரின் புவியியலை என்.கே.ஏகாம்பரம் கேமராவுக்குள் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் பொருத்தமாக இல்லை. டான் போஸ்கோ எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தி, நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

‘சுந்தரபாண்டியன்’படத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருந்ததால் அப்படத்தின் திரைக்கதை கட்டமைப்பையே இயக்குநர் இப்படத்திலும் பயன்படுத்தியுள்ளார். சசிகுமார் குடும்பம், காதல், நண்பர்கள், கொலைச் சம்பவத்துக்குப் பிறகு திரைக்கதையின் திசை மாறும் விதம் ஆகிய அம்சங்கள் இப்படத்திலும் உள்ளன.

படத்தின் நோக்கத்தைக் குறை சொல்லமுடியாது. ஆனால், நோக்கம் மட்டுமே போதுமா? 13 வயதுச் சிறுமிக்கு முத்தம் கொடுக்கும் சக மாணவன்தான் ஹீரோ. அவர் முத்தம் கொடுத்தவுடன் அச்சிறுமி பருவம் அடைந்துவிடுகிறாள். அதனால் அவர்களுடனே அந்தக் காதல் வளர்வதாகக் காட்டுவதெல்லாம் இந்தக் காலத்துக்கு பொருந்துற மாதிரியாவா இருக்குது..

‘பொம்பளைன்னா காஃபில எவ்ளோ சர்க்கரை இருக்கணும், அரிசியில எவ்ளோ உப்பு போடணும்னு மட்டும் பாருங்க. அரசியல் பேசாதே, எல்லா பொம்பளைங்களுக்கும்தான் சொல்றேன்’ என்று ஒரு கதாபாத்திரம் பேசுகிறது. இவ்வளவு பிற்போக்குத்தனங்களுடன் வசனம் அமைப்பதும், குழந்தைகளைக் கையாளும் விதத்தில் பொறுப்புடன் செயல்படாததும் வருத்தத்தை வரவழைக்கிறது.

‘பீஸ் இருந்தாதான் பிரியாணிக்கு மரியாதை, பிரச்சினை இருந்தாதான் லவ்வுக்கு மரியாதை’ என்று வாட்ஸ் அப் ஃபார்வர்டு மெசேஜ்களையே வசனங்களாகப் பயன்படுத்தியிருப்பதிலும் போதாமை எட்டிப் பார்க்கிறது. ஒரே ஒரு ட்விஸ்ட்டை நம்பி இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஒட்டுமொத்தப் படத்தையும் எடுத்துள்ளார். கடைசில சொந்த அப்பாதான் இந்த கொலைக்கு காரணம்னு சசிகுமார் கண்டுபிடிக்கிறார்.மகனுக்கு தெரிஞ்சதுனால மகேந்திரன் கழுத்தை அறுத்துகிட்டு செத்துப் போறார் ஆனால், அது படத்தைக் காப்பாற்றவில்லை என்பதுதான் சோகமான உண்மை.