களஆய்வு இன்றி கட்டட அனுமதி ! அறிவித்தது அரசு!

கள ஆய்வு இன்றி, 1,200 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை, நகராட்சி நிர்வாகத் துறை பிறப்பித்துள்ளது.தமிழகத்தில், அனைத்து உள்ளாட்சிகளுக்கான, பொதுவான கட்டட விதிகள், பிப்ரவரி, 4ல் அறிவிக்கப் பட்டன.இதன் அடிப்படையில், 2,500 சதுர அடிக்கு மேற்படாத மனைகளில், 1,200 சதுர அடி வரை குடியிருப்பு கட்டுவதற்கு, கள ஆய்வு இன்றி, உடனடி ஒப்புதல் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.இதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகத் துறை, ஆகஸ்ட், 21ல் பிறப்பித்தது. அதன் அடிப்படையில், கட்டட அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை, நகராட்சி நிர்வாகத் துறை உருவாக்கி உள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கை:● விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறை, ஒப்புதல் வழங்கும் நடைமுறை என, மூன்று பிரிவுகள், இதில் இடம் பெற்றுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 10 வகை ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்● நில உரிமை தொடர்பாக, பத்திர நகல், சர்வே வரைபடம், வில்லங்க சான்று, முன் பத்திரம், பட்டா, நில உரிமை குறித்த வழக்கறிஞரின் கருத்துரு போன்ற ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்● மனுதாரரின் புகைப்படம், காலி நில புகைப்படம், காலி மனை வரி செலுத்திய ஆவணம் ஆகியவை, விண்ணப்பத்துடன் இருப்பது கட்டாயம். உள்ளாட்சியால் அனுமதிக்கப்பட்ட பட்டியலை சேர்ந்த பொறியாளர் வாயிலாகவே, விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்● பதிவு கட்டணமாக, உள்ளாட்சி அமைப்புக்கு, 500 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள், 10 நாட்களுக்கு பின், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும். இதன் பின் கட்டணம் செலுத்த வருவோர், புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்●விண்ணப்பம், இணைப்பு ஆவணங்களை, மூன்று நாட்களுக்குள் ஆய்வு செய்து, மேலதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இதன் பின், நகரமைப்பு அலுவலர் அல்லது ஆணையர், மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும்● இவ்வாறு ஒப்புதல் வழங்கும் முன், சம்பந்தப்பட்ட பகுதியில் கட்டுமான வேலை துவங்கப்பட்டு இருந்தால், கட்டட அனுமதி ரத்து செய்யப்படும். தவறான ஆவணங்கள், தகவல்கள் அளித்தது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்● இந்த நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை, ஒவ்வொரு மாதமும், 5ம் தேதிக்குள், நகராட்சி மண்டல இயக்குனர்கள், மாநகராட்சி ஆணையர்கள், துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.