உலோகக் கழிவுகள் இனியும் வேஸ்ட் இல்லை..! அதிலிருந்து கான்க்ரீட் தயாரிக்கலாம் !!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கழிவு உலோகங்களைக் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு கான்கிரீட் தயாரித்து, அதில் பல்வேறு கட்டுமான வடிவங்களை காட்சிக்கு வைத்து அசத்தி உள்ளது, தனியார் கட்டுமான நிறுவனம்.சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இரும்பு, காப்பர், அலுமினியம், ஈயம் உள்ளிட்ட உலோகக் கழிவுகளைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று சென்னையைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் கான்கிரீட் தொழில்சார் நிறுவனம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்து காண்பித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.சென்னையில் நடந்து முடிந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்தான் இந்த டெமோவை அது காட்டியது. சென்னையைச் சேர்ந்த இந்த கட்டுமான நிறுவனம் தங்களது பிரத்யேகத் தயாரிப்பு ரசாயனத்தின் மூலம் உலோகக் கழிவுகளைக் கொண்டு கான்கிரீட் தயாரித்து வருகிறது.

இது வெளி நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இதன் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும், இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு வெகுவாகக் குறையும் என்பதால் இதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.உலோகக் கழிவுகளின் கட்டுமானம் என்பது வெகு சுலபமாகப் பயன்படுத்த கூடியது. காலையில் கட்டினால், மாலையில் பயன்படுத்தலாம். இதனால் இதில் தரமில்லை என்று அர்த்தமில்லை. மிக மிகத் தரமானது, உலோகங்கள் எப்போதும் மிக எளிதாகக் கடினமாகக் கூடியவை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எனவே இது மேன்மையான தரத்தில் இருக்கும் என்பதை விளக்கி சொல்லத் தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.கட்டுமானங்களில் விதம் விதமான வகைகளை இன்று நாம் பார்த்து வருகிறோம். அதில் ஒரு மாற்றம்தான் இந்த உலோகக் கழிவு கான்க்ரீட். தற்போது எம் சாண்ட் மணல் வந்து விட்டது. இது பிரபலமும் ஆகி விட்டது. அதேபோல இந்த உலோகக் கழிவு கான்க்ரீட்டும் பிரபலமாகும் என இந்த நிறுவனம் நம்புகிறது.

கட்டுமான பொறியியல் துறையில் பல்வேறு மாற்றங்கள் உலக அளவில் நிறைய நடந்து வருகின்றன. ஆனால் தமிழகத்திற்கு இந்த நவீனங்கள் இன்னும் எட்டிக் கூட பார்க்கவில்லை. இந்த நிலையில் இதுபோன்ற உலோகக் கழிவு கான்க்ரீட் திட்டமானது சுற்றுச்சூழல் சீர்கேட்டை வெகுவாக குறைத்து சுற்றுச்சூழல் மேம்பட வழி வகுக்கும் என நம்பலாம்.