நாட்டின் 10 பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு 4 பெரிய பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்படும் என்ற அதிரடி அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மூலம் வேலையிழப்பு ஏற்படும் என சில தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுவது போல நடக்காது, மாறாக அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நிதித்துறைச் செயலாளர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
வங்கிகளின் அளவு அதிகரிக்கும் போது அதன் வர்த்தகத்தின் அளவும் அதிகமாகும், இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஆட்குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய ராஜீவ் குமார், கடந்த காலங்களில் பாரத வங்கி (sbi), பாங்க் ஆஃப் பரோடா போன்ற இணைப்பு நடவடிக்கைகளை உதாரணமாக பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு அழைத்துச் செல்லும். மிகவும் தெளிவான, பயனுள்ள ஒரு வங்கி அமைப்பிற்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். 2017ல் 27ஆக இருந்த பொதுதுறை வங்கிகளின் எண்ணிக்கை 2019ல் 12ஆக குறைந்துள்ளது.
எதிர்காலத்தில் 3 வகையான வங்கிகளே செயல்பாட்டில் இருக்கும். அவை
1. வலிமையான தேசிய இருப்புடன் சர்வதேச அளவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகள்
2. தேசிய இருப்புடன் கூடிய பொத்துறை வங்கிகள்
3. மாநில இருப்புடன் கூடிய பொத்துறை வங்கிகள்
இணைப்பு நடவடிக்கைக்கு பின்னதாக பொதுத்துறை வங்கிகளால் முதலீடு மேற்கொள்ள இயலும், செலவீனத்தை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை அதிகரிக்க இயலும். அதே போல இணைப்பு நடவடிக்கையானது 2ம் மற்றும் 3ம் தர நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு பலனளிக்கக் கூடிய வகையில் இருக்கும்.
சிறிய வங்கிகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு பணிமாறுதல் வாய்ப்புகள் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டு இருப்பதால் வடக்கில் இருந்து தெற்கிற்கு ஊழியர்கள் பணிமாறிக் கொள்ளலாம்.ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அரசு உடனடியாக தலையிட்டு நிவாரணம் ஏற்படுத்தித் தரும் என்று நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறினார்.