ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இனி அதிரடி சலுகைகள் தொடருமா?

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக முறை பிரபலமாகி இருக்கிறது. இந்த வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் ஈடுபட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் களம் இறங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதே நேரத்தில் உள்நாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. ஆனால், உள்நாட்டு நிறுவனங்கள் போட்டி போட முடியாத அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதாவது சில குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமே விற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்கின்றன.

எனவே அந்த நிறுவனத்தில் மட்டுமே குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் சில பொருட்களுக்கு இஷ்டத்துக்கு விலை வைக்கிறார்கள். மேலும் உற்பத்தி நிறுவனங்களையும் தங்களுக்கு மட்டுமே அந்த பொருளை தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.இதுபோன்ற காரணங்களால் உள்ளூர் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களுக்கு எதிராக இந்திய ஆன்லைன் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் மத்திய வர்த்தக அமைச்சகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.புகாரை விசாரித்த மத்திய வர்த்தக அமைச்சகம், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி எந்த ஒரு நிறுவனமும் தனது உற்பத்தி பொருளில் 25 சதவிகிதத்தை மட்டுமே ஆன்லைனில் விற்க வேண்டும். மற்றவற்றை வெளிச்சந்தைக்கு விட வேண்டும்.

குறிப்பிட்ட பொருள் இந்த ஆன்லைன் நிறுவனத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்று விளம்பரம் செய்ய கூடாது. அதுபோன்ற நிலையையும் உருவாக்க கூடாது. எந்த ஒரு தயாரிப்பாக இருந்தாலும் எல்லா ஆன்லைன் நிறுவனங்களிலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.