ஆதார் அட்டை, தற்போதைய நிலையில் அனைவருக்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில், ஆதார் அட்டையில் உள்ள முகவரியே, முகவரி சான்று ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சொந்த வீட்டில் வசிப்பவர்கள் எனில், அவர்கள் முகவரி மாற்றம் அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கோ, ஒவ்வொரு வீடும் மாறும் போதும், ஆதார் அட்டையில் எவ்வாறு முகவரியை மாற்றுவது என்று விழிபிதுங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இந்த தகவல் அமையும் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை… வாடகை வீட்டில் வசிப்பவர்கள், ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு மாறும்போது, அவர்களது முகவரி மாற்றம் பெறும். ஆதார் அட்டை, பல்வேறு இடங்களில் முகவரி சான்று ஆகவும் பயன்படுத்தப்பட்டு வருவதால், தற்போது வசிக்கும் இடத்தின் முகவரியை, ஆதார் அட்டையில் மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
UIDAI அமைப்பு, முகவரி மாற்றத்திற்கு 44 வகையான ஆவணங்களை அங்கீகரித்துள்ளது. வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரமும் இதில் அடக்கம் என்பதால், வாடகை வீடுகளில் வசிப்பவர்களும், வாடகை ஒப்பந்த பத்திரத்ததை ஆவணமாக பயன்படுத்தி இனி எளிதாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்தை மேற்கொள்ளலாம்.
ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்ய…யாருடைய ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டுமோ, அவரது பெயரில், வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் இருக்க வேண்டும்.வேறு பெயர்களில் இருந்தால், கடிதம் சரிபார்ப்பு சேவையை அவர்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் பல பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும், அதனை ஒரே பிடிஎப் பைலாக மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரங்களை, பக்கம் பக்கமாக ஜேபிசி பைலாக UIDAI இணையதளத்தில் பதிவேற்றினால், அது நிராகரிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம்.
ஆதார் சேவை மையத்தில் ஆப்லைன் மூலம் முகவரி மாற்றம் செய்ய…வீட்டு வாடகை ஒப்பந்த ஒரிஜினல் பத்திரத்தை, ஆதார் சேவை மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அவர்கள் ஸ்கேன் செய்துகொண்டு உங்களிடமே அதை திருப்பி தந்துவிடுவர்.வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் ஜெராக்ஸ் காப்பி, அங்கு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.