அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம் ? ஏழு லட்சம் மனுக்கள் தேக்கம் ?

அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டத்தில், ஏழு லட்சம் மனுக்கள், அதிகாரிகள் முடிவுக்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 2018 நவம்பர், 3ல் முடிந்தது.இதில், பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, தொழில்நுட்ப அனுமதி வழங்க வேண்டியது, நகர் மற்றும் ஊரமைப்பு துறையின் பணி.இதன்பின், தொழில்நுட்ப அனுமதி அடிப்படையில், வளர்ச்சி கட்டணங்களை வசூலித்து, வரன்முறை உத்தரவை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும். தொழில்நுட்ப அனுமதி வழங்குவதில், ஆரம்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. கள ஆய்வுக்கு செல்லும் நிலையில் உள்ள அலுவலர்களுக்கே, இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது.இருப்பினும், வரன்முறை மனுக்கள் மீதான முடிவுகளை எடுப்பதில், டி.டி.சி.பி., அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தில், தனி மனைகள், உட்பிரிவு மனைகள், லே – அவுட்கள் என, மொத்தம், 7.97 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.விண்ணப்ப பதிவு கட்டணமாக, 40 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், 16 ஆயிரத்து, 828 லே – அவுட்கள் மட்டுமே, வரன்முறை படுத்தப்பட்டு உள்ளன.மீதமுள்ள, லே – அவுட்களுக்கு உட்பட்ட, ஏழு லட்சம் மனைகளின் விண்ணப்பதாரர்களுக்கு, இறுதி உத்தரவு வழங்கப்படவில்லை என, கூறப்படுகிறது.
தரகர்கள்
இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:மனைப்பிரிவு வரன்முறையில் விண்ணப்பித்தவர்கள், சம்பந்தப்பட்ட, டி.டி.சி.பி., அலுவலகங்களுக்கு நேரில் சென்றால், உரிய பதில் கிடைப்பதில்லை. தரகர்கள் வாயிலாக சென்றால் மட்டுமே, சம்பந்தப்பட்ட விண்ணப்பம், தேடி எடுத்து பரிசீலிக்கப்படுகிறது.இதற்கு, பல்வேறு நிலை அதிகாரிகளை, ‘கவனித்தால்’ மட்டுமே, தொழில்நுட்ப அனுமதி கிடைக்கும்.இதன் பின், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்றால், அங்கும், பல்வேறு நிலை அதிகாரிகளை, ‘கவனிக்க’ வேண்டிய சூழல் நிலவுகிறது.அமைச்சர், உயர் அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி, பணம் வசூலிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்ட புகார்களும், கிடப்பில் போடப்படுகின்றன. விண்ணப்பங்களின் நிலவரம் ரகசியமாக்கப்படுவது, மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.