அகத்தியா –விமர்சனம் !

சினிமாவில் கலை இயக்குநராக விரும்பும் அகத்தியன் (ஜீவா) பாண்டிச்சேரியில் தனது முதல் பட வாய்ப்புக்காகக் கடன் வாங்கி ஒரு பங்களாவை ரெடி செய்கிறார். ஷூட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ஒரு பியானோ அவர்களிடம் கிடைக்கிறது. அதை வாசிக்கத் தொடங்க, சில அமானுஷ்ய நிகழ்வுகளால் படப்பிடிப்பு நின்று போகிறது. இதனால் உடைந்த அகத்தியன், சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் செல்கிறார்.

அங்கே பங்களாவை ஸ்கேரி ஹவுஸாக மாற்றி, காசு சம்பாதிக்கலாம் என்ற ஐடியாவை நாயகி (ராஷி கண்ணா) கொடுக்க, மீண்டும் பாண்டிச்சேரிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார்கள். இம்முறை அந்த பங்களாவில் ஒரு பழைய பிலிம் ரோல் ஒன்று கிடைக்கிறது. அதில் சித்தார்த்தன் (அர்ஜுன்) என்கிற சித்த மருத்துவர், 1940-ல் நடந்த கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அந்த கதையில் நடந்தது என்ன, நிகழ்காலத்தில் நடக்கும் அமானுஷ்யங்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கலந்து கட்டிக் கொடுத்திருப்பதே ‘அகத்தியா’ படத்தின் கதை.

பாடலாசிரியர் பா விஜயின் எழுத்தில் படத்தின் கதை வித்தியாசமாக அமைந்துள்ளது. வித்தியாசமான கலவையை முன்வைக்கிறார். பேயாட்டம் நிறைந்த வீடுகள், காலனித்துவ வில்லன்கள், மற்றும் மந்திரமயமான மருந்துகள். சில இடங்களில் படம் குழப்பத்தையே கொடுத்தாலும் திரைக்கதை அதை பெரிதாக பாதிக்காமல் பார்த்து கொள்கிறது. எப்போதும் போல ஜீவா நடிப்பில் அசத்தினாலும் முதன்முறையாக அர்ஜூன் பல ஆண்டுகள் கழித்து மாந்திரீக படத்துக்குள் வந்துள்ளார். ராஷி கண்ணாவுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. அதனால் ஓகே ரகம்தான்.  இப்படத்தில் மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது வி எப் எக்ஸ் காட்சிகள் தான். எந்த இடத்திலும் குளறுபடி இல்லாமல் சரியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எடிட்டிங்கில் படம் சில இடங்களில் சொதப்பலை ஏற்படுத்தி ரசிகர்களை கடுப்பாக்கவும் தவறவில்லை.

வில்லனாக எட்வர்ட் சோனென்ப்ளிக், சர்வாதிகாரிக்கான தோரணையுடன் மிரட்டுகிறார். சில இடங்களில் அதீதமாகத் தெரியும் அந்த வில்லத்தனம் நம்மைச் சோதிக்கும் முயற்சி. வாய்ஸ் வால்யூமைக் குறைத்து, காமெடியையும் குறைத்திருக்கிறார் ஷாரா. காமெடி என்கிற பெயரில் நம் பொறுமையைச் சோதிக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. இதுபோக ராதாரவி, நிழல்கள் ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், ரோகிணி, சார்லி எனப் பலர் எமோஷன், காமெடி என ஆளுக்கொரு தொகுதியாகப் பிரித்துப் பங்காற்றியிருக்கின்றனர்.