Sunday, April 14

 அதிமுக பொதுச் செயலாளராகும் சசிகலா ?

 அதிமுக பொதுச் செயலாளராகும் சசிகலா ? முடிவுக்கு வருகிறது ஒற்றை தலைமை..இபிஎஸ் விட்டுக் கொடுப்பாரா ?

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அன்று அவர் தலைமையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்த கட்சி, இன்று ஒற்றைத் தலைமைக்காக போராடி வருது.  ஜெயலலிதா இருந்தவரை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகளின் குரல்கள் எப்படியிருக்கும் என்பது கூட பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டசபையில் அவர்கள் பேசும் போது குரல்களை கேட்பதோடு சரி! மற்ற நேரங்களில் எல்லாமே ஜெயலலிதாதான். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவை பொதுச் செயலாளராக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போக வேண்டியதாயிடுச்சி..  அதிமுகவில் தலைமையே இல்லை.. செல்லூர் ராஜூ சொன்ன மறுநாளே.. சசிகலா பேச்சை கவனிச்சீங்களா? இதையடுத்து அதிமுகவில் அடிமட்ட நிர்வாகிகள் வரை எல்லாரும் வீதிக்கு வந்து பேச ஆரம்பிச்சிட்டாங்க.. சசிகலா, தினகரன் கட்சிக்குள் வராமல் இருக்க பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை சேர்த்தனர். இதில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகிச்சிட்டு வர்றாங்க.. இவங்க இரண்டு பேரும் அதிமுகவுக்கு இரட்டை தலைமைகளாகிவிட்டனர். அன்றிலிருந்தே லேசாக புகைந்து கொண்டு வந்த பிரச்சினை இன்னைக்கு கொழுந்துவிட்டு எரியுது. நிறைய விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸுக்கு தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமியும் செஞ்சுகிட்டு வர்றாங்க.. சில அறிக்கைகளை கூட இருவரும் தனித்தனியே வெளியிட்டிருக்காங்க.. சில காலத்திற்கு முன்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு வந்தது. காரணம் இரு தலைவர்கள் இருப்பதால் இரு கோஷ்டிகளாக பிரிந்து அதிமுகவினர் செயல்பட்டு வந்தனர். கட்சி பதவிகள்,
வேட்பாளர்கள் தேர்வு இவையெல்லாம் பெறுவதற்கு இரு தலைமையின் ஆதரவாளர்களுக்குள்ளேயே போட்டிகள் இருந்தது. இந்த மாதிரி இரண்டு குழுக்களாக பிரிந்து கிடந்ததால் பொதுவான நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற ஒரு புள்ளியில் அதிமுக இயங்க வேணும்னு கோரிக்கை வைச்சாங்க.  இந்த நிலையில் நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டியிட்டுஅதிமுக ஜெயிச்சா எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடும்னு அதிமுக தலைமை நினைச்சது. காரணம் இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் மக்கள் தங்களை ஆதரிப்பாங்கன்னு நெனைச்சாங்க.ஆனா அவங்க நெனைப்புல மக்கள் மண்ணள்ளிப் போட்டுட்டாங்க. நகர்ப்புற தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைஞ்சதால் கட்சியில் முக்கிய முடிவை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தொண்டர்கள் வேறு கட்சிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக இரட்டை தலைமைக்கு அழுத்தங்கள் வருவதாகவும் தெரிகிறது. உதாரணமாக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல ஜெயிச்சா நிறைய அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்குத் தாவிட்டாங்க.இதோ சிவகாசியில் வெற்றி பெற்று வந்த 11 கவுன்சிலர்களில் 10 பேர் திமுக பக்கம் சென்றுள்ளனர். இதே போல தமிழகத்தின் பல பகுதிகளில் வெற்றி பெற்று வந்த அதிமுகவினர் திமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள்! திமுகவும், பாஜகவும் அதிமுகவை ஆனவரை பிய்த்து தின்று வருகின்றனர். இதை தடுக்கும், வேகமும், விவேகமும் இன்று யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை.இந்த சூழல்ல சிறையில் இருக்கும் ஜெயக்குமாரைப் பார்க்க ஓபிஎஸ்ஸை கூட்டிக்கிட்டு போகாம எடப்பாடி பழனிச்சாமி மட்டும் போயிருந்தார். அது போல் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் ஓபிஎஸ்ஸை தனியே விட்டுட்டு எடப்பாடி பழனிச்சாமி போயிருந்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ போன்ற மூத்த நிர்வாகிகள் ஒற்றை தலைமையப் பத்தி பேசியிருந்தாங்க.  கட்சி கரையாமல் இருக்க ஒற்றை தலைமையின் கீழ் கட்சியை ஒருங்கிணைக்கணும்ங்கிற குரல் ஓங்கியுள்ளது. அந்த ஒற்றை தலைமைதானாக இருக்கணும்னு எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸும் நினைக்கிறாங்க. இரண்டு பேரோட தலைமையுமே வேண்டாம்ங்கிறது நடுநிலையாக இருக்கும் தொண்டர்களின் கருத்து. இரட்டை தலைமையின் கீழ் இருக்கும்போது இரு தலைமையின் ஆதரவாளர்களே பலனடைந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருது. 

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்க்க முடியவில்லை!

மத்திய அரசு பணியிடங்களில் மண்ணின் மைந்தர்களுக்கான வாய்ப்பு அடியோடு பறிபோவதை எதிர்க்க முடியவில்லை! திட்டமிட்ட வட இந்திய குடியேற்றங்கள் நடப்பதை எதிர்க்க முடியவில்லை. சென்னையில் 9 வார்டுகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடம் வந்துள்ளது. சென்னை மட்டுமல்ல, கோவை, திருப்பூர், மதுரை போன்ற பல மாநகராட்சிகளில் அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளது பாஜக!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிருப்தி வேட்பாளர்களை அள்ளிக் கொண்டு போய் தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்த பாஜகவை எதிர்த்து முணுமுணுக்க கூட முடியவில்லை.

நீட் தேர்வை எதிர்க்க முடியவில்லை. எத்தனை தடுமாற்றங்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் சுயநலத்தை சிறிதளவும் விட்டுத் தரமுடியவில்லை.பொதுச் சொத்தை சூறையாடிச் சேர்த்த செல்வங்களை பாதுகாக்கும் தற்காப்பு அரசியலைத் தவிர, இன்று வேறு எதையும் அதிமுக தலைவர்கள் செய்யவில்லை.

சேர்த்து வைத்திருக்கும் அளப்பரிய செல்வத்தை கூட தேர்தலின் போது கட்சிக்கார வேட்பாளர்கள் செலவுக்கு தர மனம் ஒப்பவில்லை! இதில், அதிகபட்ச கஞ்சத்தனத்தை காட்டுபவர் ஒபிஎஸ் என்கிறார்கள்!

இல்லாத எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி எத்தனை நாள் கட்சி நடத்துவீர்கள்? உங்களுக்கான ஒரு தனி மரியாதையை ஏன் மக்களிடம் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை?

ஒபிஎஸ் திமுக தலைமையை சரிகட்டி சமரச அரசியலை சாமார்த்தியமாக ஆரம்பத்தில் இருந்தே கைகொள்கிறார்! அதனால், நிலஅபகரிப்பு மற்றும் புளியந்தோப்பு அடுக்குமாடி தரமற்ற கட்டுமானம்…உள்ளிட்ட பலவற்றை குறித்த பயமில்லை அவருக்கு!

எடப்பாடி திமுகவிற்கு எதிரான அரசியலை ஆரம்பத்தில் இருந்தே வேகமாகச் செய்தார்! ஆனால்,கொட நாடு கொலை,கொள்ளை விவகாரங்களில் தான் தப்ப முடியாது என்பதால் தானும் தற்போது ‘காம்பரமைஸ்’ அரசியலை கைகொண்டு திமுகவை சமாளிப்பதாக செய்திகள் வருகின்றன!

எடப்பாடியின் அடிப்படை பலவீனம் அவருக்கு மனிதர்களை  நேசிக்க தெரியலை. அடிமை அரசியல், அதிகார அரசியல் என்ற இரண்டு உச்சங்களில் மட்டுமே சஞ்சரிக்கிறார்! அறிவுள்ளோரை அடையாளம் கண்டு அருகில் வைத்துக் கொள்ளுவதோ, அன்பான விசுவாசிகளை அரவணைத்து கைவிடாமல் வைத்துக் கொள்வதோ அவர் அறியாதது! ஆனால், ஒற்றைத் தலைமைக்கான ஓயாத உந்துதலில் பக்கத்தில் பாசமாக வைத்துக் கொள்ள வேண்டிய பன்னீர் செல்வத்தை பகையாளியாக்கிக் கொண்டார்! புண்பட்ட பன்னீர் செல்வம் சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கிறார். சசிகலாவைக் காட்டி எடப்பாடிக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறார்.இது எல்லாத்துக்கும் பொதுவானவராக சசிகலா தலைமையின் கீழ் அதிமுக இயங்கினால்தான் சரியாக இருக்கும்ங்கிறது பெரும்பாலான தொண்டர்களின் கருத்தா இருக்குது. ஆனால் சசிகலா அதிமுகவில் வருவதற்கு ஓபிஎஸ்ஸுக்கு விருப்பம் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி விடுவாராங்கிற கேள்வி வருது. ஒரு வேளை கட்சி உடையாமல் இருக்க சசிகலா தலைமையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றால் என்ன தவறு என்ற கேள்வியும் வருது. சசிகலாவை அதிமுகவுக்கு கொண்டு வரக் கூடாதுன்னா அதுக்கு சசிகலாவுக்கு எதிரானவர்கள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதாவது ஓபிஎஸ்ஸின் கீழ் அதிமுக என்ற நிலை ஏற்பட வேண்டும். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிப்பாராங்கிறது தெரியலை. யார் அந்த ஒற்றை தலைமை? இதுதான் இப்ப மில்லியன் டாலர் கேள்வி திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அந்த வகையில் அண்மையில் நகர்ப்புற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து பேசிய அமைச்சர் பெரியசாமி, காலபோக்கில் திமுகவில் அதிமுக ஐக்கியமாகிடும்னு பேசியிருந்தார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துச்சி. இரு தலைமைகளுக்குள் இருக்கும் பிரச்சினையால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டி காப்பாற்றிய அதிமுக தேஞ்சிடக் கூடாதுங்கிறதே தொண்டர்களின் விருப்பமாக இருக்குது. அதனால அதிமுகவுக்கு தலைமையேற்பது எடப்பாடி பழனிச்சாமியா, ஓ பன்னீர் செல்வமா இல்லை சசிகலாவா என்பது இனிதான் தெரியவரும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுகவின் இரு அணிகளும் இணைஞ்சது நம்ம எல்லாருக்கும் தெரியும். இரட்டை இலை சின்னமும் கிடைச்சது. இப்போ சசிகலாவின் வருகையால் அதிமுக மீண்டும் பிளவுப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுது. அது போல் இரண்டாக பிரிந்தால் இரட்டை இலை மீண்டும் முடக்கப்படலாம். அப்போ சசிகலா அணி, ஈபிஎஸ் அணியில் யாராவது பெரும்பான்மையை நிரூபித்து இரட்டை இலையை பெறுவார்களா அல்லது இரு அணிகளும் ஒண்ணா சேர்ந்து ஒருங்கிணைந்த அதிமுகவா ஆகுமாங்கிறத பொறுத்திருந்துதான் பார்க்கணும்.சசிகலா தலைமைக்கு வந்தால் இந்த இரட்டைத் தலைமையை போலவே பாஜகவிற்கு பாதம் தாங்கி அரசியலை மட்டுமே செய்வார். காரணம், அவர் மீதும், டி.டி.வி.தினகரன் மீதும் உள்ள வழக்குகள் அப்படி! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதிமுகவை காப்பாற்றி கரை சேர்ப்பதற்கான தகுதி வாய்ந்த தலைமை ஒருவரையும் பார்க்க முடியவில்லை. தகுதி வாய்ந்த யாருக்குமே இடமில்லாமல் கட்சியை அடிமைகளின் கூடாரமாக கட்டமைத்தது கண் அயர்ந்து போன ஜெயலலிதா தான் அனைத்திற்கும் காரணம்!

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *