Sunday, April 14

துரத்தும் தோல்விகள்: பரிகார பூஜைக்குத் தயாராகும் சசிகலா?

முக்கியமான அரசியல் சக்தியாக விளங்கிவந்த சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இறங்குமுகம்தான்.

 

ஹைலைட்ஸ்:

  • சசிகலாவின் கோரிக்கையை ரஜினிகாந்த் ஏற்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
  • குடும்பத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்று சசிகலா தன் உறவினர்களிடம் கூறியிருக்கிறார் என்று தெரிகிறது.
  • தை மாதத்திற்குப் பிறகு பரிகார பூஜைகள் நடத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
‘ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறது’ என்பார்களே! கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவின் நிழலாக இருந்து தமிழக அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இவர் செயல்பட்டுவந்ததை நாடு நன்கறியும். சசிகலாவின் ஒரு நிமிடப் பார்வைக்காக அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் எனப் பலரும் நாள் கணக்கில் காத்திருந்த காலங்கள் உண்டு. ஆனால் என்றைக்கு ஜெயலலிதா இறந்தாரோ அன்றுமுதல் இவருக்கு இறங்குமுகம்தான்.சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைவாசம், எடப்பாடியின் துரோகம், குடும்பத்தினரின் குத்து வெட்டு, தினகரனின் தனி ராஜாங்கம் என அடுத்தடுத்து பிரச்சனைகள்தான் சசிகலாவைத் துரத்துகின்றன. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு, தொண்டர்களுடன் சந்திப்பு எனப் பெரும் நம்பிக்கையுடன் அவர் எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. இதனால் நொந்துபோன அவர் பலரிடமும் ஆலோசனை கேட்டிருக்கிறார்.

அப்போதுதான் பாஜகவில் தாமரை இலைத் தண்ணீராக ஒட்டிக்கொண்டிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியை சந்தித்துப் பேசுமாறு சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது. இதன் பிறகுதான் அவர் ரஜினியை சந்தித்தார். வழக்கமான சம்பிரதாய நல விசாரிப்புகளுக்கு பிறகு மெள்ள விஷயத்தை ஆரம்பித்திருக்கிறார் சசி. ஆனால் ரஜினியோ “எனக்கு எல்லாக் கட்சிகளிலும் நண்பர்கள் இருப்பது உண்மைதான். அதுபோலத்தான் பாஜகவிலும் இருக்கிறார்கள். ஆனால் நான் அரசியலுக்கு குட்பை சொல்லி நீண்ட நாட்களாகிவிட்டன. எனவே அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் இப்போது ஈடுபடுவது சரியாக இருக்காது’’ எனத் தெளிவாகச் சொல்லிவிட்டதாகக் கேள்வி. தொங்கிப்போன முகத்துடன் வீடு திரும்பியிருக்கிறார் சசிகலா.

குடும்பத்தில் கலந்தாலோசனை

அடுத்த கட்டமாக என்ன செய்வது எனத் தனது இளம் தலைமுறை உறவினர்களான இளவரசி, ஜெயா டிவி விவேக் ஆகியோருடன் சசிகலா ஆலோசனை செய்திருப்பதாக சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது தனது மனக் குமுறல்களையெல்லாம் அவர் கொட்டியிருக்கிறார். “வாழ்க்கையில் என்னை மாதிரி ஏற்ற இறக்கங்களை பார்த்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. நான் போகும் இடங்களிலும் ஒற்றுமையா இருக்க வேண்டுமென்று கட்சிக்காரர்களிடம் சொல்லி வருகிறேன். ஆனால் நம்ம குடும்ப நிலையை நினைத்தால் ரொம்ப கவலையா இருக்குது. முன்னாடி என் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு நின்னவங்க இப்போ ஆளுக்கொரு பாதையில் போறாங்க. அரசியல் தொடர்பாகவும் எதிர்பார்க்கிறது நடக்க மாட்டேங்குது” என நீண்ட நேரம் தனது ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறாராம் சசிகலா.

இதில் விவேக் பட்டும் படாமலும் கருத்துக்களைச் சொல்ல, இளவரசி மட்டும், “எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கக் கூடாது. ஏதாவது தோஷத் தடைகள் இருக்குமானால் பரிகார பூஜைகள் செய்யலாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’’ எனத் தெம்பூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

இளவரசியின் கருத்தை சசிகலா ஏற்றுக்கொள்ள, அவரது தரப்பினர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்த கேரளாவின் உன்னிகிருஷ்ண பணிக்கரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர். “இப்போதைக்கு நேரம் சரியில்லைதான். வரும் தை மாதத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று பரிகார பூஜைகள் செய்தால் எல்லாம் சரியாகிவிடும். அதுவரை பொறுத்திருக்கச் சொல்லுங்கள்’’ என அவர் கூறியிருப்பதாகத் தகவல்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற நம்பிக்கையில் சசிகலா இருக்க, அவரது நெருங்கிய வட்டமோ பெரும் பொருட்செலவிலான அந்தப் பரிகார பூஜைகளுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதுபோன்ற பரிகார பூஜைகளில் இந்திய, தமிழக அரசியல்வாதிகள் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் சசிகலாவின் பூஜைத் திட்டம் பற்றித் தனியாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், சசிகலாவாக இருந்தாலும் தினகரனாக இருந்தாலும் எத்தகைய அரசியலை முன்வைக்கப்போகிறார் என்பதுதான் மக்கள் நோக்கில் முக்கியமானது.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *