Sunday, April 14

கனிமொழிக்கு எதிராகக் கம்பு சுற்றும் கீதா ஜீவன் !

கனிமொழிக்கு எதிராகக் கம்பு சுற்றும் கீதா ஜீவன்

தூத்துக்குடி எம்.பி கனிமொழிக்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் இடையிலான திரைமறைவு மோதல் இப்போது வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

ஹைலைட்ஸ்:

  • பொது நிகழ்ச்சிகளில் தன்னைவிடக் கனிமொழிக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவது குறித்து கீதா ஜீவனுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திதான் மோதலின் முதற்கட்டமாகக் கூறப்படுகிறது.
  • மறைந்த தலைவரின் மகள், இப்போதைய தலைவரின் சகோதரி என்பதால் இயற்கையாகவே முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது என்கிறார்கள் கனிமொழிக்கு நெருக்கமானவர்கள்.
  • விஷயம் மேலிடத்திற்குச் செல்ல, தூத்துக்குடி விவகாரம் பற்றி முழு அளவிலான விவரங்களைத் திரட்டித் தருமாறு உளவுத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குமரி மாவட்டத்தில் மனோ தங்கராஜ்- சுரேஷ் ராஜன், நெல்லை மாவட்டத்தில் அப்பாவு- ஆவுடையப்பன் என தென்மாவட்ட திமுக, கோஷ்டிபூசலில் சிக்கித் திணறும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி எம்.பி கனிமொழிக்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் இடையிலான திரைமறைவு மோதல் இப்போது வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியிருப்பதாக உள்ளூர் உ.பி.க்கள் கவலையுடன் கூறுகின்றனர்.கருணாநிதியின் ‘முரட்டு பக்தன்’ என்று அழைக்கப்பட்ட பெரியசாமியின் மகளான கீதா ஜீவனுக்கும், கனிமொழிக்கும் இடையே ஆரம்பகாலத்தில் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருந்தது. உள்ளூர் அரசியல் எதிரி அனிதா ராதாகிருஷ்ணன் குடைச்சல் கொடுத்தபோதெல்லாம் கீதாவுக்குக் கனிமொழிதான் பக்கபலமாக இருந்தார். இருவரும் சேர்ந்தேதான் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சரான தன்னைவிடக் கனிமொழிக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவது குறித்து கீதா ஜீவனுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திதான் மோதலின் முதற்கட்டமாகக் கூறப்படுகிறது.

இது பற்றி கீதா ஜீவன் தரப்பில் விசாரித்தபோது, “காதுகுத்து நிகழ்ச்சியிலிருந்து அரசு விழாக்கள்வரை எல்லாவற்றிலும் கனிமொழிதான் ஆதிக்கம் செலுத்துகிறார். அமைச்சரான கீதா ஜீவன் ஓப்புக்குத்தான் பங்கேற்கிறார். அதுபோலவே தூத்துக்குடி மாநகராட்சியிலும் மாவட்டத்திலும் தன்னைக் கேட்காமல் எதுவும் செய்யக் கூடாது என கனிமொழி வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறார். இதனால் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி கீழ்மட்ட அதிகாரிகள்வரை கீதா ஜீவனைக் கொஞ்சமும் கண்டுகொள்வதில்லை. வெறும் டம்மி பீசாக இருப்பதில் கீதா ஜீவனுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. அதனால் தனது அதிருப்தியை உரிய நபர்கள் மூலம் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்” என்றார்கள்.

கீதா ஜீவனின் அதிருப்தி பற்றி கனிமொழி ஆதரவாளர்களிடம் கேட்டபோது, “யாரையும் மட்டம் தட்டும் பழக்கமோ, தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் வழக்கமோ கனிமொழியிடம் கொஞ்சமும் கிடையாது. இது நாட்டிற்கே தெரியும். மறைந்த தலைவரின் மகள், இப்போதைய தலைவரின் சகோதரி என்பதால் இயற்கையாகவே முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. இதற்கு கனிமொழி என்ன செய்ய முடியும்? தங்களைத் தவிர வேறு யாரும் தூத்துக்குடியில் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் கீதா ஜீவன் தரப்பினர் குறியாக இருக்கின்றனர். அதுபோக காண்டிராக்ட் விவகாரங்களில் கனிமொழி கொஞ்சம் ஸ்டிரிக்ட் ஆக இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் இல்லாததையும், பொல்லாததையும் கிளப்பிவிடுகிறார்கள்” என விளக்கமளித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி தொடர்பான ஒரு காண்டிராக்ட் விவகாரத்தில் ஆரம்பத்திலேயே ஒரு பெருந்தொகையை கீதா ஜீவன் தரப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் காண்டிராக்ட் எடுத்த நபர் கனிமொழியிடம் பேசி பைசா செலவில்லாமல் காரியத்தை முடிக்க, கொந்தளித்துப் போனதாம் கீதா ஜீவன் தரப்பு. இப்படி இரண்டு மூன்று விஷயங்களில் கனிமொழியின் தலையீட்டால் கீதா ஜீவன் தரப்புக்குக் கிடைக்க வேண்டியது ’கட்’ ஆகிவிட்டது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இதனால் இனியும் பொறுப்பதில்லை என்கிற முடிவோடு ஆட்சித் தலைமைக்கு மிக நெருக்கமான உறவுக்காரரைச் சந்தித்துத் தனது ஆதங்கத்தையெல்லாம் கொட்டியிருக்கிறார் கீதா ஜீவன். “இப்படி டம்மியா இருப்பதற்கு பதில் அமைச்சர் பதவியிலிருந்து எடுத்துவிடச் சொல்லுங்கள்” என அவர் குமுறியதாகவும் கேள்வி. விஷயம் மேலிடத்திற்குச் செல்ல, தூத்துக்குடி விவகாரம் பற்றி முழு அளவிலான விவரங்களைத் திரட்டித் தருமாறு உளவுத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் புகைச்சல் அப்படியே அடங்கிவிடுமா அல்லது பெருநெருப்பாக வளருமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *