Sunday, April 14

பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?’ லூஸ்-டாக் வேண்டாம்”..

பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?’
லூஸ்-டாக் வேண்டாம்”.. ஸ்டாலின் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்- பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக தலைமை எச்சரிக்கை? இளங்கோவன் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் செயல்படும் விதம் திமுக மேலிடத்தை அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாக தெரியுது. இதுபோன்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தி மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கக் கூடாதுன்னு கட்சி மேலிடம் அவருக்கு எச்சரிக்கை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்குது.  திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ்.இளங்கோவன், அளித்துள்ள ஒரு பேட்டி இதை உறுதி படுத்துற மாதிரி இருக்குது.  தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் பிற அமைச்சர்களை விடவும், எப்போதும் செய்திகளில் அடிபடக் கூடிய அமைச்சர் பெயர்ன்னா நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர்தான். மெத்த படித்தவர், பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருங்கிறதுனாலேயே நாட்டிலேயே இவர் அளவுக்கு தகுதியான நிதியமைச்சர் இல்லைங்கிற ரீதியில் ஆரம்பத்தில் அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தது. தேசிய ஊடகங்கள் கூட இதில் விதி விலக்கு இல்லை. ஆனா சமீப காலமா, ட்விட்டரில் பிடிஆர் வெளியிடும் ட்வீட்டுகள் தொடர்பாகத்தான் அவரைப் பத்தி பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கிட்டே இருக்குது.. அது வானதி சீனிவாசனோ, அண்ணாமலையோ, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ.. யாராக இருந்தாலும் சரி, காரசாரமாக விட்டு விளாசுவது போல பதில் சொல்வதை வாடிக்கையாக வைச்சிருக்காரு பிடிஆர். இவரோட இந்த காரசாரமான பதில்கள்லாம் நெளிவு சுளிவு அரசியலுக்கு ஒத்துவராதுங்கிற முணுமுனுப்பு திமுக சீனியர்களிடம் ரொம்ப நாட்களாகவே இருக்குதாம். ஏன்னா அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லைன்னு சொல்லுவாங்க. பிடிஆர் சொல்லும் பதிலடிகள், நிரந்தர எதிரிகளை உருவாக்கிவிடுமேங்கிற அச்சம் சிலருக்கு இருக்குதாம். இணையதளத்தில் வரவேற்பு இருந்தாலும், மனதில் பட்டதை அப்படியே சொல்றது பிடிஆர் வழக்கம். ஜக்கி வாசுதேவில் ஆரம்பித்து இப்போது, ஜிஎஸ்டி கூட்டம் வரை எந்த விஷயத்தையும் விட்டு வைப்பதில்லை பிடிஆர். இவரது இந்த பதிலடிக்கு, இணையதளத்தில் உள்ள சில நெட்டிசன்கள், ஆஹோ, ஓஹோன்னு புகழ்ந்து, அவருக்கு ஊக்கம் அளிக்கிறாங்க. ஆனால் யதார்த்த அரசியல் என்பது வேறு. இதைப் பத்திதான் திமுக சீனியர்கள் கவலைப்படுறதா சொல்றாங்க.. இதப்பத்தி முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் அவங்க கொண்டு போயிருக்காங்க..  இந்த நிலையில்தான், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்கலை. இதற்கு வேறு, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் தனது பேட்டியின்போது, “ஜிஎஸ்டி கூட்டம் பற்றி ரொம்ப லேட்டாக சொல்லிட்டாங்க. முன்கூட்டியே நிறைய கமிட்மென்ட் கொடுத்துட்டேன். இப்போ கூட ஒரு வளைகாப்புக்கு போக வேண்டியிருக்குதுன்னு” பதிலளிச்சிட்டாரு பிடிஆர். அவர் வளைகாப்புன்னு சொன்னாரே தவிர அரசு சார்பில் நடைபெறும் சமுதாய வளைகாப்பு விழான்னு அப்போ சொல்லலை. வளைகாப்புக்கு போவதுதான் முக்கியம், ஜிஎஸ்டி முக்கியமில்லைங்கிற தொனி அவரது பேட்டியில் இருந்ததாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. சில எதிர்க்கட்சி நெட்டிசன்கள், ஒருபடி மேலே போய், கொளுந்தியார் வீட்டு வளைகாப்புக்கு பிடிஆர் போகிறார்ன்னு போலி செய்திகளை பரப்பி விட்டுட்டாங்க. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது போன்ற முக்கிய விஷயங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசப்பட்டது. அதில் பிடிஆர் பங்கேற்காததும், அதற்கு அவர் கூறிய காரணமும், எளிதாக மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளால் நெகட்டிவாக பிரச்சாரம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. இது திமுக இமேஜுக்கு விழுந்த அடின்னு தான் சொல்லணும். இந்த நிலையில்தான், திமுக தலைமை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு இனிமேல் இப்படி லூஸ் டாக் விட வேண்டாம்னு எச்சரிக்கை விடப்பட்டிருக்காம். இதத்தான் டிகேஎஸ் இளங்கோவன் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில . பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றிருக்கணும். ஆனால், அவர் ஏன் கலந்துகொள்ளலைன்னு எனக்கு தெரியலை ரொம்பவே ஓபனாக பிடிஆர் முடிவு தன்னிச்சையானது என்ற அர்த்தத்தில் பேட்டியளிச்சிருந்தாரு இளங்கோவன். தலைமையின் அனுமதி இல்லாமல் இப்படி இளங்கோவன் பேட்டியளிச்சிருக்க மாட்டாருங்கிறது திமுக வட்டார தகவல். உறுதியான மற்றும் இறுதியான எச்சரிக்கை பிடிஆருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதற்கான சிக்னல்தான் இளங்கோவன் பேட்டிங்கிறாங்க.
இந்த பரபரப்பான இன்னமும் அடங்கல அதுக்குள்ள அடுத்த விஷயத்துக்கு போய்ட்டாரு.டி கே எஸ் இளங்கோவனை முட்டாள் கிழவன்னு ….. திமுக-வின் மூத்த தலைவரையே சகட்டுமேனிக்கு வசைபாடியிருக்கிறாரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்..!

திமுக எம்.பி.-யும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.எஸ். இளங்கோவனை, முட்டாள் கிழம், 2 கிலோ மீன் வாங்க தகுதியில்லாதவன்ங்கிற ரீதியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசைபாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அமைச்சர்களில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் பழனிவேல் தியாகராஜன். தொடக்க காலங்களில் ஆகா, ஓஹோன்னு புகழப்பட்ட அவரது டுவிட்டுகள் தற்போது சொந்தக் கட்சியினரே முகம் சுழிக்கும் அளவுக்கு மாறியுள்ளது.கடந்த வாரம் லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடைசி நேரத்தில் கூட்டம் குறித்து தகவல் வந்ததாகவும், 3 விமானங்கள் மாறிச் செல்ல வேண்டும் என்பதோடு, முன்னரே வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உறுதியளித்ததால் போக முடியலைன்னு சொல்லியிருந்தாரு. கொழுந்தியாவின் மகள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்ததால் ஜி.எஸ்.டி. கூட்டத்திற்கு போக முடியலைன்னு அமைச்சர் பிடிஆர் சொன்னதாக நெட்டிசன்கள் கொளுத்திப்போட இந்த விவகாரம் சர்ச்சையானது.

நெட்டிசன்களின் கருத்துகளை புறம்தள்ளிவிட்டு வேலையை பார்க்காமல், அதனை மேற்கோள் காட்டிய அனைவரையும் சகட்டு மேனிக்கு வசைபாடி வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்தநிலையில் தான் திமுக எம்.பி.-யும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.எஸ். இளங்கோவன், ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பழனிவேல் தியாகராஜன் குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டிருக்க வேண்டும், எதிர்க்கட்சி விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் பணியில் கவனம் செலுத்த பழனிவேல் தியாகாரஜனுக்கு அறிவுரை வழங்குவோம் என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருந்தார். ஆனால் அதற்கு பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பதிலடி பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முட்டாள் கிழம், 2 கிலோ மீன் வாங்க கூட விபரம் அறியாதவர், கட்சியின் இரண்டு தலைமைகளாலும் ஓரங்கட்டப்பட்டவர்ன்னு இளங்கோவனை கடும் சொற்களால் வறுத்தெடுத்திருக்கிறார் பழனிவேல் தியாகராஜன். அவரது கருத்துக்கு சொந்தக் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவிக்கவே அந்த பதிவை பின்னர் நீக்கிவிட்டார்.இனிமே வரும் நாட்கள்ல பிடிஆர் தனது ஆவேசத்தை குறைத்துக் கொண்டு, துறை சார்ந்த விஷயங்களை மட்டுமே பேச வாய்ப்பு இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் சொல்லுது. ம்.. பொறுத்திருந்து பார்ப்போம்!

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *