Sunday, April 14

 

கோடநாடு வழக்கு: சயானிடம் நடந்த மறுவிசாரணை அறிக்கை இன்று உதகை கோர்ட்டில் தாக்கல்-சிக்குவது எடப்பாடியா?

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிக்கி உயிர் தப்பிய சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் நடத்தப்பட்ட மறு விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கோடநாடு விவகாரத்தில் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை தொடர்புபடுத்தி சயான் வாக்குமூலம் தந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானதால் நாளைய விசாரணை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கோடநாடு எஸ்டேட் பங்களா. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக கோடநாடு பங்களாவுக்கு தோழி சசிகலாவுடன் செல்வது வழக்கம். இந்த கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஏராளமான ஆவணங்கள், பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வரும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2017-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டனை, உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இதனால் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் பங்களாவை மையமாக வைத்து நிகழ்ந்த அத்தனை சம்பவங்களும் திகில் சினிமாக்களை மிஞ்சியவை. கோடநாட்டில் கொலை-கொள்ளை 2017-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி கோடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலர் ஓம் பக்தூர், 10-ம் எண் கேட்டில் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவருடன் பணிபுரிந்த கிருஷ்ண பகதூர் காயங்களுடன் மயங்கி கிடந்தார். அப்போது கோடநாடு பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலாவின் அறைகளில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கொள்ளையாடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சயன் என்பவரை தேடியது போலீஸ். மேலும் இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜூக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மர்ம மரணங்கள் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி சேலம் அருகே மர்மமான முறையில் நிகழ்ந்த வாகன விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் பலியானார். அதேநாளில் போலீசார் தேடி வந்த சயான், அவரது மனைவி விணுப்பிரியா, மகள் நீலி ஆகியோர் சென்ற கார் கேரளாவின் பாலக்காடு அருகே விபத்துக்குள்ளானது. டேங்கர் லாரி ஒன்று சயான் குடும்பத்தினர் சென்ற கார் மீது மோதியது. இதில் சயான் மட்டுமே உயிர் தப்பினார். அவரது மனைவி, மகள் இருவரும் உயிரிழந்தனர். பின்னர் இந்த வழக்கில் அடுத்தடுத்து வாளையாறு மனோஜ், டீபு, ஜித்தன் ஜாய், ஜம்ஷோர் அலி, உதயகுமார், சந்தோஷ் சாமி, சதீஷன், பிஜின் குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் வாளையாறு மனோஜூக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்பட்டது. மற்ற அனைவரும் ஜாமீனில் அடுத்தடுத்து வெளியே வந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மரண சம்பவம் கொடநாடு பங்களா விவகாரத்தில் நிகழ்ந்தது. அதாவது கோடநாடு பங்களாவில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் எங்கே என்கிற கேள்விகள் விஸ்வரூபமாய் வெடித்திருந்தது. இந்த நிலையில் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கணினி பிரிவில் பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 2017-ம் ஆண்டு ஜூன் 3-ல் தினேஷ்குமார், வயிற்றுவலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. பின்னர் இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் போலீசாரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஏதோ மிக முக்கியமான ஒரு மர்மம் புதைந்து கிடப்பது என்பது வெளிப்படையாக தெரியவே செய்தது. டெல்லியில் கோடநாடு பூகம்பம் 2 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ல் மீண்டும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு பரபரப்பை கிளப்பியது. தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லி செய்தியாளர்களிடம் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டார். அப்போது கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் வாளையாறு மனோஜ் இருவரும் செய்தியாளர்களிடம் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக விவரித்தனர். அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலில்தான் இந்த சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டதாக பரபரப்பு தகவல்களை சயானும் மனோஜும் கூறினர். ஆனால் அதிமுக இதனை திட்டவட்டமாக மறுத்தது. இதன் பின்னர் கோடநாடு விவகாரம் அரசியல் பிரச்சனையாக விஸ்வரூபமெடுத்தது. மறுவிசாரணை சட்டசபை தேர்தலில் திமுகவின் பிரதான பிரசாரங்களில் வாக்குறுதிகளில் ஒன்றாக கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு மாறியது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கோடநாடு விவகாரம் முழுமையாக விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என திமுக வாக்குறுதி தந்தது. சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சியையும் கைப்பற்ற, முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி உதகை நீதிமன்றத்தில், கோடநாடு வழக்கு தொடர்பாக சயானிடம் கூடுதல் விசாரணை நடத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதனடிப்படையில் சயானை விசாரணைக்கு ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 17-ந் தேதி சயானிடம் உதகை எஸ்.பி. ஆஷித் ராவத் கிடுக்கிடுப்பிடி விசாரணையை நடத்தினார். இந்த விசாரணையின் போது மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை- கொள்ளை சம்பவத்தில் தொடர்பிருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. தவறு செய்தவர்களுக்கு தண்டனை.. கோடநாடு வழக்கில் யாரும் தப்ப முடியாது-

இன்று விசாரணை அறிக்கை தாக்கல் பின்னர் சட்டசபையில் கடந்த 18-ந் தேதி பேசிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு விவகாரம் உள்ளிட்ட திமுகவின் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மறுநாள் சட்டசபையில் பேசினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து சட்டசபையில் எப்படி பேசமுடியும் என கொந்தளித்தார் எடப்பாடி பழனிசாமி. அதே ஜோரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து இது தொடர்பாகவும் மனு கொடுத்தனர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள். இந்நிலையில் கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரனை விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சயான் மற்றும் மர்மமான முறையில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணை அறிக்கை நாளை உதகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த விசாரணை அறிக்கை தாக்கலுக்குப் பின்னர் அரசியலில் பெரும் புயல் கிளம்பும் என்பது எதிர்பார்ப்பு.

 

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *