Sunday, April 14

நல்ல காலம் பொறக்குது ! உடன்பிறப்புகளுக்கு நல்ல காலம் பொறக்குது !!

தமிழக அரசுக்கு அதிகப்படியான வருமானம் வருதுன்னா அது டாஸ்மாக் கடைகள்ல  விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் மூலம் மட்டும்தான். அதாவது ஆண்டு ஒன்றுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வர்றதாலத்தான், எண்ணற்ற இலவசங்களை மக்களுக்கு எந்தவொரு ஆளும்கட்சியாலும் வாரி வழங்க முடியுது. மதுபானங்கள் விற்பனை மூலம் நேரடியாக அரசுக்கு வருமானம் கிடைத்து வருவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம், டாஸ்மாக் மதுபானக் கடைகளையொட்டி இயங்கும் பார்கள் மூலம் (மது அருந்தும் இடம்) அரசுக்கும், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் பணமழை கொட்டுது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு மாநில அரசு நிறுவனம். தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகித உரிமையாளர். இந்நிறுவனம் அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதன் இயக்குநர் குழுமத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்திய ஆட்சிப் பணி அதாவது ஐ ஏ எஸ் அதிகாரிகள். இதன் தலைமை அலுவலகம் சென்னை, எழும்பூரில் உள்ள 
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஐந்து நிர்வாக மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை,  கோவை, மதுரை,  திருச்சி மற்றும் சேலம் ஆகிய இந்த ஐந்து மண்டலங்களும் மண்டலமேலாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வருது.இவை மேலும் 33 வருவாய் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மாவட்ட மேலாளரின் கீழ் இயங்கி வருது.

2010 ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்குத் தமிழகம் முழுவதும் 6500 மதுக்கடைகளும், 41 சேமிப்புக் கிடங்குகளும் இருந்தது. இந்நிறுவனத்தில் மொத்தம் 36,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் உரிமைகளும் (எட்டு மணி நேர வேலைநாள், ஊதியத்துடன் விடுமுறைகள் போன்றவை) இவர்களுக்குக் தரப்படவில்லை; மேலும் இவர்களுக்குத் தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது. மிகைநேர வேலைக் கூலி அதாவது ஓவர் டைம் சம்பளம் கூட நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின்னரே வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுக் கடைகளுக்குத் தனிப் பெயர்கள் எதுவும் கிடையாது; முன்பு ”டாஸ்மாக் கடை” என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டதுடன் அவ்வாறே அழைக்கப்பட்டன. பின்னர் இது கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்” என்கிற பெயர்ப்பலகைக்கு மாற்றப்பட்டது. இக்கடைகளில் அதிகமான கடைகளில் மது அருந்த தனி இடவசதி (பார்) செய்து தரப்பட்டுள்ளது. இந்த மது அருந்தும் இடம் மற்றும் சிறு உணவக வசதிகளைச் செய்து அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமை தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உரிமை ஆண்டுதோறும் தனி ஏலம் மூலம் விடப்படுகிறது. இக்கடைகள் பொதுமக்களால் “வைன் ஷாப்” என்று பரவலாக வழங்கப்பட்டாலும் பிற மதுவகைகளும் இங்கு விற்கப்படுகின்றன.அரசு மதுக்கடைகளைக் கையகப்படுத்தியபின் டாஸ்மாக்கின் வருவாய் ஆண்டுதோறும் 20 சதவிகித அளவில் அதிகரித்து வந்துள்ளது. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 1983 ஆம் ஆண்டில் இதன் மொத்த வருமானம் 183 கோடி ரூபாயாக இருந்தது.ஆனா இன்னைக்கு ஒரு நாளைக்கு 183 கோடிக்கு சர்வசாதாரணமா விற்பனையாகுது. சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கு முந்தைய நிதியாண்டில் (2002-03) இதன் மொத்த வருவாய் 3500 கோடி. இதில் அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் 2,828. கோடி. மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்த பின் 2003-04 நிதியாண்டிற்கான வரி வருவாய் 3,639 கோடியாக உயர்ந்தது. இதில் சுங்கவரியும், விற்பனை வரியும் தலா 50 சதவிகிதம். நிர்வாகச் செலவுகளையும், பணியாளர் ஊதியத்தொகையையும் கழித்த பின்னர், எஞ்சியுள்ள வரிவருமானம் . முழுக்க அரசுக்கு லாபமே. ஏன்னா அரசே மொத்த விற்பனையாளராகவும், சில்லறை விற்பனையாளராகவும் இருக்கிறதால, இரு விலைகளுக்கும் உள்ள வித்தியாசம் அரசின் கைக்கே வந்து சேருது. அடுத்த நான்கு நிதியாண்டுகளில் வரி வருமானம் முறையே 4872, 6087, 7300 மற்றும் 8822 கோடி ரூபாய்களாக இருந்தது. 2005-06 ஆம் நிதியாண்டில் 23 ஆண்டுகளாக நிலைத்து வந்த மது விற்பனை வருமான சாதனை முறியடிக்கப்பட்டது. 2008-09 நிதியாண்டில் 10,601. கோடியாக உயர்ந்து, 10,000 கோடி இலக்கு எட்டப்பட்டது. 2009-10 மற்றும் 2010-11 நிதியாண்டுகளில் வருமானம் முறையே 12,491 மற்றும் 14,965 கோடிகளாக இருந்தது. மது விற்பனையில் 80 சதவிகிதம் விஸ்கி, பிராந்தி, ரம், வோத்கா போன்ற “ஹாட்” மது வகைகளும், மிச்சமுள்ள 20 சதவிகதத்தை பீர்களும் பிடித்துள்ளன. வரி வருமானத்தைத் தவிர, பார் உரிமங்களை ஆண்டுதோறும் தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலமும் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் குடிநுகர்வும், அவ்வப்போது நிகழும் மது விலையேற்றமும் இச்சீரான வருமான வளர்ச்சிக்குக் காரணங்களாகக் கருதப்படுது.

முந்தைய அதிமுக ஆட்சியில், மதுபான பார்களை முறையாக ஏலம் விடாததால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருந்தாலும், அதிமுக நிர்வாகிகளை சந்தோஷப்படுத்தும் வகையில் தெருவுக்கு தெரு, கடைகளைத் திறந்துகொள்ள அனுமதித்ததும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகு இரவு நேரங்களில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய அனுமதித்ததும், முந்தைய அதிமுக ஆட்சிக்கு பொதுமக்களிடம் பெரியளவில் கெட்டப் பெயரை வாங்கித் தந்தது. மேலும், சந்துக்களில் கடை நடத்தி வந்த அதிமுக நிர்வாகிகளுக்கும் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறுகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்னையும் பெரியளவில் ஏற்பட்டது.இது காவல்துறைக்கு பெரிய தலைவலியாக இருந்தது.ஆனாலும் என்ன செய்வது அரசாங்கத்திற்கு சொந்தமான கடையாச்சே !

தற்போதைய திமுக ஆட்சியில், டாஸ்மாக் மதுபான விற்பனையை சட்டத்திற்குட்பட்டு முறையாக அமல்படுத்த வேண்டும், சந்துக்கடை போன்ற எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் அதிமுக நிர்வாகிகள் ஈடுபடுவதை அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால், டாஸ்மாக் துறையை தன்வசம் வைத்திருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகிவிட்டதாக, டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கிறாங்க.. அமைச்சர் செந்தில்பாலாஜி என்ன பண்ணப் போறார்னா !

தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் இருக்குது. இந்த கடைகளில் நாள்தோறும் விற்பனையாகும் விவரங்களை அறிக்கையாக கேட்டிருக்காரு, அமைச்சர் செந்தில்பாலாஜி. அதேபோல, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்காலத்தில் பார்கள் எப்படி ஏலம் விடப்பட்டது, அதன் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு ? உண்மையிலேயே எவ்வளவு வருமானம் கிடைச்சிருக்கணும் ? போன்ற விவரங்களையும் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறாராம். அமைச்சரின் அதிரடியான உத்தரவைக் கேட்டு, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றி வரும் இரண்டு அதிகாரிகள் அதிர்ச்சியாயிருக்காங்க..

ஏன்னா கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த இரண்டு அதிகாரிகள் வைத்தது தான் சட்டமாக இருந்ததாம். இவர்கள் சொல்வதைத்தான் அமைச்சர்கள் கேட்டு வந்தார்கள். அரசுக்கு வரும் வருமானத்தை அமைச்சர்களுக்கும் ஆளும்கட்சிக்கும் மடை மாற்றி விடும் வகையில் ஆலோசனைகளை கூறுவதுதான் இந்த இரண்டு அதிகாரிகளின் முழுநேர பணியாம். ஆட்சியாளர்களுக்கு சட்டவிரோமாக பணம் வரும் வழியை காட்டும் இந்த இரண்டு அதிகாரிகளும், அமைச்சர், உயர் அதிகாரிகளின் நிழலில், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பல கோடி ரூபாயை சுருட்டியிருக்கிறார்கள். இப்படி டாஸ்மாக் கடைகள் மூலம் கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை லஞ்சமாக மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் சென்றிருக்கிறது என்ற தகவலை கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிர்ச்சியாகிவிட்டார்.அப்படியே முதலமைச்சர் ஸ்டாலினிடமும் சொல்லியிருக்கிறார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் பார்கள் ஏலம் விட்டதில் நடந்த முறைகேடுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, மதுபான பார்கள் ஏலம் விடுவதில் பழைய நடைமுறையை மாற்றிவிட்டு, ஒரு ரூபாய் கூட யாருக்கும் லஞ்சமாக போகாமல், ஒட்டுமொத்த பணமும், அரசு கஜானாவுக்கு வர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியின் போது, அப்போதைய அமைச்சர் பி.தங்கமணியின் உத்தரவைக் கேட்டு, டாஸ்மாக் பார்களுக்கு முழுமையான ஏலம் நடத்தப்படவில்லை.

ஒரு மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தால், 50, 60 கடைகளுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏலம் நடத்தப்பட்டது. மற்ற இடங்களில் உள்ள கடைகளில் எல்லாம், அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளே ஏலமே எடுக்காமல் சட்டவிரோதமாக பார்களை திறந்து நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதனால், அரசுக்கு வருமானமாகக் கிடைக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய், அதிமுக.வினருக்கு சென்றுவிட்டது. இப்படி அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தும் ஏல முறையை கைவிட்டுவிட்டு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளின் விற்பனைக்கு ஏற்ப, குறிப்பிட்ட ஒருதொகையை நிர்ணயித்து கட்டணமாக வசூலிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தீர்மானித்துவிட்டார்.
உதாரணத்திற்கு சொல்லணும்னா மாநகராட்சிப் பகுதியில் ஒரு கடையில் ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்படுதுன்னா , அந்த தொகையை அடிப்படையாக வைத்து, அதற்கு ஏற்ப ஏல உரிமைக்கட்டணத்தை நிர்ணயிக்கணும்னு சொல்லியிருக்காராம் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இதனால அரசுக்கு நேரடியாக ஏலத்தொகை கிடைத்துவிடும் இதனால அரசுக்கு கூடுதல் வருமானம் கெடச்சிடும் அதேசமயம் ஆளும்கட்சியைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகளுக்கும் நிரந்தர வருமானம் கிடைக்கும் திட்டமாக இது இருக்கும். மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் திமுக நிர்வாகிகளுக்கு பார் மூலம் வருமானம் கிடைக்கும். ஓராண்டிற்கு 5 ஆயிரம் பேர் என்றால், ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் திமுக நிர்வாகிகள், பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றம் கிடைக்க இது வழிவகுக்கும்னு சொல்றாங்க..

அதற்கு மேலாக, குடிமகன்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கும் போது பாரின் உரிமையாளர்கள், அங்கு விற்கப்படும் திண்பன்டங்களையும் நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முன்வருவார்கள். இப்படி அரசுக்கு கூடுதல் வருமானம், கட்சி நிர்வாகிகளுக்கு நிரந்தர வருமானம், குடிமகன்களுக்கு நியாய விலைல சைட் டிஷ்ஷும் கிடைக்கிற மாதிரியான பல நன்மைகளை செய்யும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டம் போட்டிருக்காராம்.
அமைச்சரின் இந்த திட்டம் டாஸ்டாக் நிர்வாகத்தில பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதுள்ளதாம் . எப்படியோஅரசுக்கு கூடுதல் வருமானம் வர்றதோட குடிமகன்கள் சந்தோஷமா இருந்தா சரிதான்.

 

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *