Saturday, April 13

மோடிக்கு எதிராக ராகுல்காந்தி ? அடுத்த பிரதமர் யார்? காய் நகர்த்தும் பிரசாந்த் கிஷோர் !

மோடிக்கு எதிராக ராகுல்காந்தி ? அடுத்த பிரதமர் யார்? காய் நகர்த்தும் பிரசாந்த் கிஷோர் !

காங்கிரஸ் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் 2024 மக்களவைத் தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2013ஆம் ஆண்டு மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரப் பணிகள் தொடங்கியபோதே பிரசாந்த் கிஷோர் என்ற பெயரும் நாடு முழுவதும் பிரபலமானது. மோடி என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் நிறுவனம் அதன்பின்னர் மோடிக்கு எதிராக அரசியல் செய்யும் பல கட்சிகளுக்காகவும் பணியாற்றியது. அதில் வெற்றியும் பெற்றுவருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், அமரீந்தர் சிங், ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முதலமைச்சர்களுக்காக பணியாற்றியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

மோடியை ஆட்சிக்கு கொண்டு வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியிலிருக்கும் மோடியை அரியணையிலிருந்து இறக்கும் வேலையை பார்க்கத் தொடங்கியுள்ளார் என பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர் சரத் பவாரை சில முறை சந்தித்து நீண்டநேரம் விவாதித்தார். அதன்பின் சரத்பவார் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இதனால் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்க பிரசாந்த் கிஷோர் முயற்சிக்கிறாரா என்ற விவாதம் தேசிய அளவில் எழுந்தது. அந்த மாதிரி ஒரு அணி அமையும் பட்சத்தில் அது தேர்தலில் மீண்டும் பாஜகவுக்கே சாதகமாக முடியும் என்றும் இதனால் மறைமுகமாக பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்கு பணியாற்றுவது போல் ஆகிவிடும் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் அவரும் ஐபேக்கிலிருந்து விலகுவதாகவும் அவரது குழுவினர் அந்த பணிகளை தொடர்வார்கள்னு சொல்லிட்டாரு.

இந்நிலையில் தற்போது டெல்லியிலிருந்து உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோர் 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் என்பதே அந்த தகவல். இதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி நடைபெற்றதாகவும், அதற்காகவே பிரசாந்த் கிஷோர் சரத் பவாரை சந்தித்ததும், சரத் பவார் மற்ற கட்சி பிரதிநிதிகளை சந்தித்ததும் நடைபெற்றது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

2014 ல் ஆட்சிக்கு வந்த பாஜகவானது, ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை கட்டமைப்போம்’ என்றது! ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு சவடால் பேச்சாகத் தான் தெரிந்தது. ஆனால், தான் சொன்னபடியே அந்த இலக்கை நோக்கி பாஜக பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, அதற்கு காங்கிரசே பாதை போட்டுக் கொடுக்கிறது..என்பது தான் அதிசயமாக இருக்குது!

அரசியலில் வெற்றி, தோல்விகள் வரலாம்! ஆனால், தோல்விகள் மட்டுமே தொடர்கதையாக அனுமதிக்கக் கூடாது!

காங்கிரஸ் ஆட்சி செய்த ஒவ்வொரு மாநிலங்களிலும் இன்றைக்கு பாஜக ஆட்சி நடக்குது! இது எப்படி பாஜகவுக்கு சாத்தியமாச்சு.

2016 முதல் தன் அரசியல் சதுரங்க ஆட்டத்தை துவக்கியது பாஜக! அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள  60 இடங்களில் 42 இடம் பெற்று ஜெயித்தது காங்கிரஸ்! பாஜக வெறும் 11 இடங்களை மட்டுமே பெற்றது. ஆனால், குதிரை பேர அரசியல் நடத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூண்டோடு விலைக்கு வாங்கி பாஜக ஆட்சியை பிடித்தது.

கோவாவில் ஒரு தனிபெரும் கட்சியாக இருந்தது காங்கிரஸ்! 2017 தேர்தல்ல  மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களை வென்றது காங்கிரஸ்! ஆனால், வெறும் 13 இடங்களை மட்டுமே ஜெயிச்ச பாஜக ஆட்சியை பிடித்தது! எப்படி ?

மணிப்பூரில் காங்கிரஸ் 27 இடங்களை வென்றது. பாஜக 21 இடங்களை மட்டுமே வென்றது! காங்கிரஸில் இருந்து ஒன்பது எம்.எல்.ஏக்களை தூக்கியது பாஜக.ஆட்சியை பிடித்தது!

சிக்கிமில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெற முடியாத நிலையில் இருந்த பாஜகவிற்கு இன்று 12 எம்.எல்.ஏக்கள்!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது! கமல்நாத் தலைமையில் சிறப்பானதொரு ஆட்சியும் நடந்தது. காங்கிரஸின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ஜோதிராதித்திய சிந்தியா 26 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவிற்கு தாவினார்! ஆட்சி கவிழ்ந்தது!

கேரளாவில் காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் மாறி,மாறி ஆட்சிக்கு வருவது தான் வாடிக்கையாக இருந்தது. ஆனால், இந்த முறை கம்யூனிஸ்டுகள் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட்டனர். பாஜகவைப் போல கொல்லைபப்புற வழியாக வரல, நேர்மையான முறையில் தேர்தலை சந்தித்து தான் வந்தது! காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் போனதற்கு அங்கு காங்கிரஸுக்குள் ஒற்றுமை இல்லாதது தான் காரணம்! கேரளாவில் ரமேஷ் சென்னிதாலாகாங்கிரஸ் என்றும்,உம்மண்சாண்டி காங்கிரஸ் என்றும் இரு பெரும் அணியாக பிளவுபட்டு நிற்குது! இந்த அணிகள் ஒன்றுக்கொன்று குழிபறித்துக் கொள்வதிலேயே மொத்த அரசியலும் முடிந்துவிடுகிறது. இதனால் தான் அங்கு பி.சி.சாக்கோ, விஜயன் தாமஸ் போன்ற தலைவர்கள் வெளியேறிவிட்டனர்!‘’ராகுல்காந்தியை வெற்றிபெறச் செய்த வயநாடு தொகுதியில் மீண்டும் அவர் நின்றால் வெற்றி பெறுவாரா..?’’ ங்கிற சந்தேகம் வரும் அளவுக்கு மிகப் பெரும் கோஷ்டி பூசல் இருந்து வருது. சமிபத்தில் கூட அங்குள்ள செல்வாக்கான நான்கு காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறிட்டாங்க! என்ன காரணம் ? காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கலை.

உத்திரபிரதேசத்தின் மிக முக்கிய காங்கிரஸ் தலவரான ஜதின் பிரசாத் பாஜக பக்கம் தாவியுள்ளார்! இந்த நாட்டிலேயே படுமோசமான ஒரு காட்டாட்சியை நடத்தி வரும் யோகி ஆதித்திய நாத்தை ஜதின்பிரசாத் ஏற்க முடிகிறதென்றால், அவர்  சந்தேகமில்லாமல் கொள்கை உறுதியற்ற, பதவி வெறிபிடித்த தலைவர் தான்! அவரைப் போன்றவர்களை காங்கிரஸ் உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தியதற்கு வெட்கப்பட வேண்டும். அப்படியானால், கொள்கை உறுதியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பொறுப்பு தருவதில் காங்கிரஸ் உள்ளபடியே பலவீனமாக உள்ளது என்று தானே அர்த்தம்!

காங்கிரஸின் மாபெரும் இளைய தளபதியாக கருதப்பட்ட – மரியாதைக்குரிய பல பதவிகளை காங்கிரஸால் பெற்று அடையாளம் பெற்ற – ஜோதிராதித்திய சிந்தியா அவசரப்பட்டு பாஜகவிற்கு தாவினார். இதோ இன்று வரை எந்த முக்கியத்துவமும் பெற முடியாமல் ஓரம் கட்டப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும் இப்படித் தான் அவசரப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு பாஜகவில் முன்கூட்டியே ராஜ்மாதா வசுந்தராஜே செக் வைத்தார்! ’’பாஜகவில் பழம் தின்று கொட்டை போட்ட நாங்கள் எல்லாம் இருக்க, நீ இங்கு வந்தால் முதல்வர் பதவி பெறலாம் என நினைக்காதே..’’என உணர்த்தினார்! பாதிதூரம் பயணப்பட்ட சச்சின் பைலட் காங்கிரஸை விட்டால் நமக்கு எங்கும் இந்த கெளரவம் கிடைக்காது என திரும்பி வந்தார்!

சச்சின் பைலட், ஜதின் பிரசாத், ஜோதிராதித்திய சிந்தியா,ஜி.கே.வாசன் இவர்கள் எல்லாம் படிப்படியாக கட்சிக்கு பாடுபட்டு அடி நிலையில் இருந்து தங்கள் உழைப்பால், திறமையால் உயர்ந்தவர்கள் அல்ல! தங்கள் தகப்பன்மார்களை வைத்து, காங்கிரஸில் அதிமுக்கியத்துவம் அடைந்தவர்கள்! அப்படி அவர்களுக்கு வாரிசு அடைப்படையில் முக்கியத்துவம் கொடுத்ததற்கான விலையைத் தான் காங்கிரஸ் இன்று பெற்றுக் கொண்டுள்ளது.

புதுச்சேரியில் என்ன நிலைமை! அது பல ஆண்டுகாலமாக காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்த இடமாகும்.

அங்கு சென்ற தேர்தலில் கூட நோட்டாவுடன் போட்டி போடும் நிலைமையில் இருந்தது பாஜக! ஆனால், இன்று அங்கு பாஜகவிற்கு ஒன்பது எம்.எல்.ஏக்கள். காங்கிரசுக்கு தற்போது இரண்டு இடங்கள் தான்! இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது..? மேலிடத்து ஆதரவுடன் நாராயணசாமி முதல்வராக திணிக்கப்பட்டது தான் காங்கிரஸ் அங்கு காணாமல் போனதற்கான முக்கிய காரணம்! அந்தந்த இடங்களில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் யாரோ.., கடும் உழைப்பாளிகள் யாரோ அவர்களை புறக்கணித்து டெல்லி தலைமை தனக்கான ஒருவரை திணித்து கட்சிக்குள் ஜனநாயகத்தை காவு கொடுக்கும் போது கட்சி அங்கு காணாமல் போகிறது!

இப்போதும் கூட தமிழகத்தில் என்ன நடந்தது..? காங்கிரஸ் 18 இடங்களை வென்றது. ‘’காங்கிரசின் சட்டமன்ற தலைவர்களை அதன் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கட்டுமே..’’ என அனுமதித்ததா டெல்லி தலைமை! யாருமே எதிர்பார்காத – எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாத – ஒருவரை சட்டமன்ற தலைவராக டெல்லி திணித்தது. இது போன்ற கட்சிக்குள் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காத போக்குகளால் கட்சிக்கு நீண்டகாலமாக உழைப்பவர்கள் பெரும் மனசோர்வுக்கு தான் உள்ளாவார்கள்! இது பெரும் பின்னடைவைத் தான் உருவாக்கும்.

வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு முக்கியத்துவம் வழங்குவது, ஜாதி பின்னணியைக் கொண்டு பதவிகள் தருவது, உழைப்பு, அறிவாற்றல், கட்சிக் கொள்கையில் பிடிப்பு, மக்கள் செல்வாக்கு ஆகிய அளவுகோலை புறக்கணித்து, கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகள் தரப்படுவது..ஆகிய தவறுகளை தொடர்ந்து செய்து வருகிறது காங்கிரஸ்! அதன் தலைமைக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் போன்றவர்களுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே தான் போகுது. ‘’காங்கிரஸிற்குள் ஒரு மேஜர் சர்ஜரி தேவைப்படுதுன்னு” வீரப்ப மொய்லி சொல்லியது சத்தியமான வார்த்தையாகும்!

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பல மாநிலங்களில் தனது பிடியை நழுவவிடும் நிலையில் 2024 தேர்தலில் எதிர்கட்சிகள் அனைத்தையும் அரவணைத்து கூட்டணிக்குள் கொண்டு வந்து அதை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பிராந்திய கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தியல் பின்புலத்திலிருந்து வரும்நிலையில், அறியப்பட்ட தலைவர்கள் பலர் ஒரே குடையின் கீழ் வரும் பட்சத்தில் தொய்வில்லாமல் கூட்டணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. நாடு முழுவதும் பல மாநில முதலமைச்சர்களுடன் நட்பு பாராட்டும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸுக்கு இந்த விஷயத்தில் உதவியாக இருப்பார் என கூறப்படுது.ஆனால் ஏற்கனவே ஒருமுறை மோடிக்கு எதிராக பல கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி பேசுனாங்க. அந்த கூட்டத்தில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தினார் ஸ்டாலின்.யாரும் அதற்கு ஆதரவு தெரிவிக்கலை.ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியே ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்.இந்த நிலையில பிரசாந்த் கிஷோரின் திட்டம் வெற்றி பெறுமா அல்லது ஆரம்பத்திலேயே புஸ்வானமா போய்டுமாங்கிறத பொறுத்திருந்து தான் பார்க்கணும்

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *