Saturday, April 13

பிடிஆரின் பதவி பறிப்பு ? அதிர்ச்சியில் உடன்பிறப்புகள் ?

கட்சிப்பதவியிலிருந்து பி.டி.ஆர் . பழனிவேல் தியாகராஜன் …விடுவிக்கப்படுகிறார். முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவு . எடுத்திருக்கிறார். ? திமுக ஐடி விங் பணியிலிருந்து பிடிஆர் முழுவதுமாக விடுவிக்கப்பட்டு அவரை நிதித்துறையில் முழு கவனம் செலுத்த தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

 திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருது. கொரோனா பரவலைக் வேகமாக கட்டுக்குள் கொண்டு வந்தது, நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தியது ஆகியவை அரசுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்ததாகச் சொல்கிறார்கள்.. அத்துடன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

இவை எல்லாவற்றையும்விட ஸ்டாலின் சரியான ஆள்களை சரியான இடத்தில் நியமித்து வேலை வாங்குகிறார் என்ற பேச்சை பரவலாக கேட்க முடிகிறது. அந்த வகையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பழனிவேல் தியாகராஜன் பம்பரமாக சுழன்று வருகிறார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிடிஆரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறிவருவதாக கோட்டையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி கூட்டத் தொடரில் பிடிஆர் முன்வைத்த கேள்விகளால் வட மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் அமைச்சர்களும் தமிழ்நாட்டை திரும்பி  பார்க்கின்றனர்  .அமைச்சர்களாக இருப்பவர்கள் தொலைக்காட்சியில் தனிப்பட்ட முறையில் நேர்காணல் அளிப்பார்கள். பெரும்பாலும் நான்கைந்து பேர் பங்குபெறும் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார்கள். பிடிஆருக்கு இந்த பேதமெல்லாம் இல்லை. தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார். தமிழ் இணைய உலகில் சமீபகாலத்தில் கவனம் பெற்று வரும் கிளப் ஹவுஸிலும் பிடிஆரின் குரலை பொது மக்கள் கேட்கலாம், அவருடன் உரையாடலாம்.

இது ஒருபுறமிருக்க சில சர்ச்சைக்குரிய விவாதங்களை எதிர் தரப்பினர் அவிழ்த்துவிட்டு அவரை கார்னர் செய்யும் முயற்சியும் சமீபத்தில் நடைபெற்றது.அதாவது ஹெச் ராஜா குறித்து அவர் பதிலளித்த விதத்தைக் குறிப்பிட்டு ஸ்டாலினிடம் எடுத்து சொன்னதாகவும் அதனால் அவரின் செயல்பாடுகளால் முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும் சில ஊடகங்கள் எழுதின. ஆனால் அப்படியான பேச்சுகள் எழவே இல்லை என்று அடித்து சொல்கின்றனர் திமுக உயர்மட்ட வட்டாரத்தில்.

ஆனால் கட்சிப் பதவியிலிருந்து பிடிஆரை விடுவிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன. திமுகவின் ஐடி விங்கை கட்டி எழுப்பியவர் பழனிவேல் தியாகராஜன் தான். அவரது வழிகாட்டுதல் படியே ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணி செயல்பட்டது. ஆனால் நிதி அமைச்சரான பின்பு முழு நேரமும் துறை ரீதியான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுவருகிறார் பிடிஆர்.

பட்ஜெட் தயாரிப்பிலும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் ஐடி விங்கை சரியாக வழிநடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறுகிறார்கள். வழிகாட்டுதல் இல்லாததால் திமுக உடன்பிறப்புகள் சிலரது சமூகவலைதள செயல்பாடு முகம் சுழிக்கவைக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. கடந்த சில நாள்களாக திமுக ஈழ விடுதலைக்கும், பிரபாகரனுக்கும் எதிரான கட்சி என்ற தோற்றத்தை சிலரது பதிவுகள் மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் உருவாக்குவதாக திமுக அபிமானிகளே கூறுகின்றனர்.

இதனால் தேர்தல் சமயத்தில் ஒரே அணியில் நின்று திமுகவை ஆதரித்த பெரியாரிய, தமிழ் அமைப்புகள் விலகி நிற்கும் சூழலை சமூக வலைதளங்கள் மூலமாக சில திமுக உடன்பிறப்புகள் செய்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பிடிஆர் முழு நேரமாக ஐடி விங்கை கவனிக்கும் போது இந்தப் பிரச்சினை எழவில்லை.இந்நிலையில் திமுக ஐடி விங் பணியிலிருந்து பிடிஆர் முழுவதுமாக விடுவிக்கப்பட்டு அவரை நிதித்துறையில் முழு கவனம் செலுத்த தலைமை முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். ஐடி விங்கிற்கு வேறு நிர்வாகியை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

தமிழ்நாடு நிதிச் சுமையில் தவித்து வரும் நிலையில் பிடிஆரின் பணி இன்றியமையாதது. எனவே வேறு எந்த கவனச் சிதறலும் இல்லாமல் அவர் அரசுப் பணியில் இன்னும் சுதந்திரமாக செயல்பட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் திமுக முக்கிய நிர்வாகிகள்.திமுக ஐடி லிங்கை யார் வழி நடத்தப் போகிறார்கள் என்பது கொஞ்ச நாளில் தெரிந்து விடும்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *