Sunday, April 14

திமுக+தேமுதிக+பாமக+நாம்தமிழர்?..கூட்டணிக்கான அச்சாரமா?

மெகா கூட்டணிக்கு அஸ்திவாரம் போடும் திமுக ! வரப் போற உள்ளாட்சி மற்றும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியே வித்தியாசமாக இருக்க போவதாகவும், அந்த கூட்டணி, கண்டிப்பாக அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் இருக்கும்னு பரபரப்பான பேச்சு ஓடிகிட்டிருக்குது.நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை திமுக, அபார வெற்றியை பெறவில்லை.. அதேபோல அதிமுக மோசமான தோல்வியையும் பெறவில்லை..

அடுத்தடுத்து உள்ளாட்சி தேர்தல், எம்பி தேர்தல்கள் இனி,  நடைபெற உள்ள நிலையில், இந்த 2 கட்சிகளும் தங்கள் பலத்தை எப்படி பெருக்கி கொள்ள போகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக ஸ்டாலின் வைத்துள்ள முதல் குறியே எடப்பாடி பழனிசாமிதான்.. மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் அரசியலை “ராஜதந்திரம்” என்பார்கள்.. ஆளுமையுடன், அனுபவமும், நுணுக்கங்களையும் கையாண்டதாலேயே ராஜதந்திரியாகவே இருந்தார் மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள். இப்போது அதுபோலவே ஒரு மூவ் எடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமி யைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கிட்டத்தட்ட கேபினட் பதவி போன்றது.. அதிகாரம் மிக்கது.. தற்போதைய நிலையிலும், பலம் பொருந்திய எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தை தவிடுபொடியாக்கி, அதன்மூலம் அவரது செல்வாக்கையும் குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம் ஸ்டாலின். இதற்காகவே ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் தந்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை கண்டுகொள்ளாமல் இருப்பது என்ற வியூகத்தை கையில் எடுத்திருக்கிறாராம்.   அதாவது அதிமுக தலைமைகளுக்குள் மேலும் மோதல் போக்கு ஏற்பட்டால், அது திமுகவை மேலும் பலப்படுத்தும் என்று கணக்கு போடுகிறாராம். இன்னொரு பக்கம், ஊழல் புகாரில் சிக்கிய மாஜி அமைச்சர்கள் லிஸ்ட் ரெடியாகி கொண்டிருக்கிறது..இதில் காம்ப்ரமைஸ் ஆவார் என்கிற பேச்சுக்கே இடமில்லையாம் இதில் புகார்கள் நிரூபணமாகும் பட்சத்தில், அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும் திட்டமும் திமுக மேலிடத்துக்கு இருக்குது…

இதற்கு அடுத்தபடியாக கூட்டணி விஷயத்திலும் முழு கவனத்தையும் ஸ்டாலின் செலுத்தத் தொடங்கிட்டாரு.நடந்து  முடிந்த தேர்தலில் திமுகவுக்கு பெரிதும் பலம் தந்தது கூட்டணிகள்.தான். ஆனால் காங்கிரஸ் தவிர, அவ்வளவாக வாக்கு வங்கியை சில கட்சிகள் பெற்றிருக்கவில்லை.. இந்த முறை வாக்கு வங்கியை ஓரளவு பெற்றுள்ள கட்சிகளை தங்களுடன் இணைத்து கொண்டால் மாஸ் வெற்றியை எளிதாக பெற முடியும் என்று திமுக நம்புகிறது.  அதில் முதல் நபராக இருப்பவர் சீமான்தான்.. நடந்து முடிந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.85 சதவீத வாக்குகளுடன் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றிருப்பது, திமுகவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது… 2016 தேர்தலில் 4 லட்சம் ஓட்டுகளை வாங்கிய இந்த கட்சிதான், 2019 எம்பி தேர்தலில் சுமார் 17 லட்சம் ஓட்டுகளை பெற்றது… இதுவே 2016-ல் ஒரு சதவீதமாக இருந்த ஓட்டு விகிதமானது 2019-ல் 4 சதவீதமாக அதிகரித்தது…  இந்த முறை, 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுகளுக்கும் அதிகமாக நாம் தமிழர் பெற்றிருப்பது, திமுக வட்டாரத்தை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

ஆனால் இந்தமுறை, 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி யாருமே எதிர்பாராத வகையில், 30,41,974 (6.85%) வாக்குகள் பெற்று தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் அரசியல் வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழ்ந்துவருகிறது. இந்தத் தேர்தலில், மாற்று அணிகளில் மற்ற இரு அணிகளின் மீதிருந்த அளவுக்கு எதிர்பார்ப்போ, மீடியா வெளிச்சமோ நாம் தமிழர் கட்சியின் மீது இல்லை. ஆனாலும், 30 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் போட்டியிட்ட 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 183 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்தான் மூன்றாமிடம். தவிர, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு தொகுதியிலும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை முன்று தொகுதிகளிலும், இருபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை 19 தொகுதிகளிலும், பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை 36 தொகுதிகளிலும், பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை 103 தொகுதிகளிலும், 6 -9 ஆயிரம் வாக்குகளை 68 தொகுதிகளிலும் பெற்றிருக்கிறது. ஐந்தாயிரத்துக்கு குறைவான வாக்குகளை வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே பெற்றிருக்கிறது.

ஒருவேளை நாம் தமிழர் கட்சி, வரப்போகும் பஞ்சாயத்து தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பிரித்துவிட்டால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தேர்தல்களில் ஓரளவு கவுரவமிக்க இடங்களை அக்கட்சி கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உருவாகிவிடும் என்றும் திமுக கணக்கு போடுகிறது.. அதனால், சீமானை தங்களுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.  அதேபோல, பாமவை பொறுத்தவரை, இன்றுவரை தமிழ்நாட்டில் தங்கள் செல்வாக்கை ஓரளவு தக்க வைத்து கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.. பதவியேற்ற மறுநாளே, ராமதாஸுக்கு ஃபோனை போட்ட ஸ்டாலின்,”ஐயா மதுக்கடைகள் மூடுவது உட்பட பல ஆலோசனைகளை  இதுபோன்றே எங்களுக்கு கொடுங்க.. முடிஞ்சவரைக்கும் செயல்படுத்துறோம்.. உடம்பை பார்த்துக்குங்க” என்று பேசியதும் கவனிக்கத் தக்கது. அதற்கேற்றபடி ராமதாஸும், அன்புமணியும் தொடர்ச்சியாக ஸ்டாலினின் நிர்வாகத்தை பாராட்டியே வருகிறார்கள்.. போற போக்கை பார்த்தா, பாமக மறுடிபயும் திமுக பக்கம் சாயக்கூடுமோ என்ற பேச்சு பரவலாக அடிபடுது.  இதேதான் தேமுதிகவும்.. விஜயகாந்த்தை எப்போதுமே ஸ்டாலினுக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் இந்த முறை பதவியேற்றதில் இருந்தே 2, 3 முறை ஃபோன் போட்டு பேசியிருக்காரு.. உடல் நலம் குறித்து விசாரித்தாரு.. தேமுதிகவினர் திமுக பக்கம் தாவ உள்ளதை மா.செ.க்கள் மூலம் கேள்விப்பட்டு, விஜயகாந்த் மனம் நோகும்படி செய்யாதீங்க என்று உத்தரவு போட்டுள்ளார்.. இதெல்லாம் நிச்சயம் தேமுதிக தரப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. ? ஆக, ராமதாஸ், சீமான், விஜயகாந்த் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஸ்டாலின் பேசிவருவது வெறும் அரசியல் நாகரீகமா? அல்லது மரியாதைக்குரிய நட்பா? அல்லது கூட்டணிக்கான அச்சாரமா? தெரியவில்லை.! எப்படி அடுத்து வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரை திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையப் போவது உறுதி என்றே சொல்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *