Saturday, April 13

ரூ.6 கோடி மோசடி புகார்! -முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் நீக்கப்பட்ட பின்னணி

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 104 பேரிடம் ரூ.6.62 கோடி ஏமாற்றியதாக மோசடி புகார்.

நிலோஃபர் கபில் அமைச்சராக இருந்தபோது, பலருக்கு வேலைக்கு வாங்கித் தருவதாக கிட்டத்தட்ட 6 கோடி ரூபாயை தனது அரசியல் உதவியாளரான பிரகாசம் என்பவர் மூலம் மோசடி செய்ததாக நிலோஃபர் கபில் மீது குற்றச்சாட்டுகள் குவிகின்றன.

கடந்த ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வாணியம்பாடியைச் சேர்ந்த நிலோஃபர் கபிலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறது, அ.தி.மு.க தலைமை.

‘இப்படியொரு மந்திரி இருந்தாரா?’ என்பதே பலருக்கும் தெரியாது. அப்படியிருந்தும், கடந்த அ.தி.மு.க ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து ஐந்து வருடங்களை அசால்ட்டாகக் கடந்துவந்தவர் நிலோஃபர் கபில். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிக்கும், நிலோஃபர் கபிலுக்கும் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வில் கடும் மோதல் இருந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார் வீரமணி. நிலோஃபர் கபில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர். இவ்விரு தொகுதிகளும் அருகருகில் இருந்ததுதான் மோதலுக்குக் காரணம். 2011-லிருந்து தொடர்ந்து இரண்டு தேர்தல்களிலும் ஜோலார்பேட்டை தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டிருந்த வீரமணி, இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தவர். கட்சியிலும் 2006 முதல் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக அதிகாரத்திலேயே தொடர்கிறார் வீரமணி.

நிலோஃபர் கபிலும் மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். ஆட்சியிலும், கட்சியிலும் தனக்கு நிகரான அதிகாரத்திலிருந்த நிலோபரை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் இருந்தார் வீரமணி. இருவருக்குமான மோதல் வெளிப்படையாகத் தெரிந்தபோதும், கட்சித் தலைமை சமரசம் செய்ய முயற்சிக்கவில்லை. மாவட்டத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட இருவரும் சேர்ந்து கலந்துகொள்வதைத் தவிர்த்தனர். தனது வாணியம்பாடி தொகுதிக்குள்ளேயே வீரமணியை நுழையவிடாமல் காய்நகர்த்தினார் நிலோஃபர்.

இருவருக்குமான மோதல், இந்த தேர்தலில் வெடித்தது. நேரம் பார்த்து, நிலோஃபரை ஒரேடியாக வீழ்த்தி, தன் விசுவாசியான ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமாருக்கு வாணியம்பாடி தொகுதியில் சீட் வாங்கிக் கொடுத்தார் வீரமணி. ‘‘வீரமணியின் உள்ளடி வேலைகளால்தான், வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கவில்லை’’ என்று பத்திரிகையாளர்கள் முன் உட்கட்சி விவகாரத்தை வெளிப்படையாகப் போட்டுடைத்தார் நிலோபர் கபில்.அதோடு நிலோபர் விடவில்லை. இதுதான் சமயம் என்று அவரும் வீரமணியை ஒரு பிடி பிடித்துவிட்டார். பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கண்ணீர் விட்டு அழுது பேசியநிலோஃபர், ‘‘தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் வீரமணி, ‘மாமா.. மச்சான்’ உறவில் பழகுகிறார். காட்பாடி தொகுதியில், துரைமுருகன் வெற்றி பெறுவதற்காக அ.தி.மு.க-வில் டம்மியான வேட்பாளரை இறக்கியிருக்கிறார் வீரமணி. அ.தி.மு.க வேட்பாளர் ராமு ஒரு டம்மி வேட்பாளர் துரைமுருகனைப் போய் அவரால் வீழ்த்த முடியுமா? இதெல்லாம் வீரமணியின் உள்குத்து அரசியல்’’ என்று சொந்தக் கட்சியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினார் நிலோஃபர் கபில். ஆனால் அந்த ராமு கடைசி வரை துரைமுருகனுக்கு தண்ணி காட்டி விட்டார்.துரைமுருகன் இந்த முறை சொற்ப ரன்களில் தான் ஜெயிக்க முடிந்தது. நிலோஃபர் கபில் தலைமைக்கு எதிராக பேசியதையெல்லாம், உடனுக்குடன் கட்சித் தலைமைக்கு வீடியோ ஆதாரங்களாக சமர்பித்திருக்கிறது, வீரமணி தரப்பு. ஏற்கெனவே, 2019 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க-விடம் தோற்றுப்போனார்.

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே சுமார் 22,000 வாக்குகளை தி.மு.க கொத்தாக அள்ளியதுதான் சண்முகத்தின் தோல்விக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அப்போதே நிலோஃபர் மீது விமர்சனங்கள் எழுந்தன. தொகுதி மக்கள் மட்டுமன்றி, கட்சியினரும் எளிதில் அணுக முடியாதது உள்ளிட்ட புகார்கள் கட்சித் தலைமைக்குச் சென்றதால், எடப்பாடியும் நிலோஃபர் மீது அதிருப்தியில் இருந்துள்ளார். இதுபோன்ற காரணங்களுக்காகத் தான் நிலோஃபருக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை என்கிறார்கள். அதன் பின்னராவது, தனக்குக் கட்டுப்படுவார் என்று நினைத்த வீரமணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறார் நிலோஃபர் கபில்.

தனக்கு சீட் கிடைக்காத கடுப்பில், வீரமணி ஆதரித்த வேட்பாளர் செந்தில்குமாரைத் தோற்கடிக்க நிலோஃபர் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, வாணியம்பாடி தொகுதியில் கணிசமாகவுள்ள தன் சமூக வாக்குகளை எதிர்க்கட்சியினருக்கு மடை மாற்றிவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், உள்ளடி வேலைகளை உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடினார் வீரமணியின் ஆதரவாளர் செந்தில்குமார். அதே சமயம், ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கே.சி.வீரமணி தோல்வியடைந்ததை நிலோஃபர் தரப்பு கொண்டாடி மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், வாணியம்பாடி நகர தி.மு.க பொறுப்பாளர் சாரதிகுமார் என்பவருடன் நட்பு பாராட்ட தொடங்கினார் நிலோஃபர். வாணியம்பாடியிலுள்ள வீரமணியின் ஆதரவாளர்களை எதிர்ப்பதற்காக தி.மு.க-வின் சாரதிகுமாரை தனது வலது கையாகப் பயன்படுத்த நினைத்தார் நிலோபர். இதுகுறித்தும், கட்சித் தலைமைக்கு அப்பேட் செய்து கொண்டே இருந்தார் வீரமணி.

இந்த நிலையில்தான், கிட்டத்தட்ட 6 கோடி ரூபாயை மோசடி செய்த புகாரில் நிலோஃபர் கபில் வசமாக சிக்கிக்கொண்டார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்த சமயத்தில், தனது துறையிலும், தமிழ்நாடு வக்பு வாரியத்திலும் பலருக்கு வேலைக்கு வாங்கித் தருவதாக இவ்வளவுப் பெரிய தொகையை தனது அரசியல் உதவியாளரான பிரகாசம் என்பவர் மூலம் நிலோஃபர் கபில் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் குவிகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை அணுகி நிலோஃபரின் உதவியாளர் பிரகாசம் மீது புகாரளிக்கவே விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. பிரகாசம் நெருக்கடிக்குள்ளானதால், ‘‘அந்தப் பணத்தை நிலோஃபர் தான் வாங்கச் சொன்னார்; கை நீட்டி வாங்கியது மட்டுமே நான்; அடுத்த நிமிடமே நிலோஃபர் சொல்லும் வங்கி எண்ணில் செலுத்திவிடுவேன்’’ என்று கூறி அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, நிலோஃபர் தரப்பிலிருந்து பிரகாசத்துக்கு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. பதறிப்போன பிரகாசம், டி.ஜி.பி அலுவலகத்தில் நிலோஃபர் மீது புகாரளித்துள்ளார். இதற்கான ஆதாரங்களைத் திரட்டிய கே.சி.வீரமணி, தற்சமயம் நிலோஃபருக்கு நிரந்தரமாக செக் வைத்திருக்கிறார். இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நிலோஃபர் கபிலை நீக்கியிருக்கிறது, அ.தி.மு.க தலைமை.

இதுதொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கையெழுத்திட்டு வெளிவந்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘கழகத்தின் கொள்கை – குறிக்கோள் – கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிலோஃபர் கபில் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளனர்.

இனிமேல் நிலோஃபர் கபில் எந்த கட்சியிலும் சேர முடியாது. அவரது சொந்த ஊரான வாணியம்பாடியிலேயே சுதந்திரமாக நடமாட கூட முடியாது…அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நிலோஃபர் கபிலை நீக்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.
அதிமுக.வுக்கு துரோகம் இழைக்க நினைப்பவர்களை விரட்டி விரட்டி வெளுக்க தயாராகி விட்டார் எடப்பாடி பழனிசாமி என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *