Thursday, April 18

மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகியிருப்பதற்கு, தி.மு.க.,வின் நிர்ப்பந்தம்தான் காரணமென்ற தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகியிருப்பதற்கு, தி.மு.க.,வின் நிர்ப்பந்தம்தான் காரணமென்ற தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான நான்கே நாட்களில், மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் , சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோர், அக்கட்சியை விட்டு விலகியிருக்கின்றனர்.  முன்னதாக, கமீலா நாசர் ராஜினாமா செயதிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பொன்ராஜ், சமீபத்தில்தான் கட்சியில் சேர்ந்தவர். மகேந்திரன், கமல் கட்சி துவக்கியதிலிருந்து உடனிருந்தவர் என்பதால், அவருடைய விலகலுக்கான காரணமென்ன என்ற விவாதம் சூடு பறக்கிறது.  தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதும், முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினை, கமல் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் வேறு யாரும் உடன் போகவில்லை. அந்த நேரத்தில், ஸ்டாலின் சொன்ன சில விஷயங்கள் பற்றி மகேந்திரனிடம் கமல் கேட்டதுதான், அவர் கட்சியை விட்டு விலகுவதற்குக் காரணமென்ற தகவல் பரவியுள்ளது.

தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் என்ன சொல்றாங்க ன்னா மகேந்திரனின் சொந்த ஊர் பொள்ளாச்சி. அங்கு அவருக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டில், 2016ம் ஆண்டில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடைய பினாமியாக அவர் இருப்பதுதான் ரெய்டுக்குக் காரணமென்று தகவல் பரவியது. அது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதை மறுத்துப் பேட்டி கொடுத்த மகேந்திரன், ‘பொள்ளாச்சி ஜெயராமன் என் உறவினர்தான். ஆனால், அவருக்கும் எனக்கும் வேறு எந்தத் தொடர்பும் கிடையாது. நான் தொழில் செய்து சம்பாதித்ததுதான்’ என்று விளக்கமளித்தார்.
அதன்பின் கமல் கட்சி துவங்கியபோது, அந்தக் கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டபோது, துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட அவரை யாருக்குமே தெரியாது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்டு, ஒன்றரை லட்சம் ஓட்டுக்களை மகேந்திரன் வாங்கினார். லோக்சபா தேர்தலுக்குப் பின், கமல் கட்சியிலிருந்து பல முக்கியப் பிரமுகர்கள் வெளியே போனபோதும் மகேந்திரன் மட்டும் கூடவே இருந்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான், கமல் கோவை தெற்கில் போட்டியிடுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது.

ஆனால், குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கமல் தோற்றார். பா.ஜ.,வேட்பாளர் வானதி வெற்றி பெற்றார். அதேபோல, சிங்காநல்லுாரில் மகேந்திரன் வாங்கிய ஓட்டுக்களால், தி.மு.க.,எம்.எல்.ஏ.,வாக இருந்த கார்த்திக் தோற்றுப்போனார். கோவை நகருக்குள் ஆறு தொகுதிகளில் தி.மு.க., தோல்விக்கு மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்கள் முக்கியக் காரணமாக இருந்தன. இதனால்தான், 10 தொகுதிகளிலும் தி.மு.க., தோற்றது. கமலை இங்கு போட்டியிட வைத்து, கோவை தொகுதிகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி, தி.மு.க.,வைத் தோற்கடிக்க வேண்டுமென்பதுதான், மகேந்திரனுக்கு அ.தி.மு.க.,வின் கோவை வி.ஐ.பி., கொடுத்த அசைன்மென்ட். அதை அவர் சிறப்பாக முடித்துக் கொடுத்து விட்டார் என்கிறார்கள்.

மகேந்திரன் நினைத்திருந்தால், அவருடைய சொந்த ஊரான பொள்ளாச்சியில் போட்டியிட்டிருக்கலாம். அல்லது கமலை அங்கே நிறுத்தியிருக்கலாம். ஆனால், கோவை தெற்கில் கமலை நிற்க வைத்து, தி.மு.க., கூட்டணி ஓட்டுக்களைப் பிரித்து வானதியை ஜெயிக்க வைக்க வேண்டும்; சிங்காநல்லுாரில் கார்த்திக்கைத் தோற்கடிக்க வேண்டுமென்று அவருக்குச் சொன்ன வேலையை அவர் சிறப்பாகச் செய்துவிட்டார். கமலை எல்லோரும் பா.ஜ.,வின், ‘பீ டீம்’ என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், மகேந்திரன் போன்ற ஆட்கள்தான். கூடிய விரைவிலேயே மகேந்திரன் வேறு கட்சியில் ஐக்கியமாகிவிடுவார்.

இந்த விஷயங்களை எல்லாம், தி.மு.க., தலைவரைச் சந்தித்தபோது, கமல் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அவர் அதைப் பற்றிக் கேட்டதும் மகேந்திரன் வெளியேறிவிட்டார். இவ்வாறு, அந்த நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். ஆனால் மகேந்திரன் வேறுவிதமான விளக்கங்களை மீடியா கிட்ட சொல்லிட்டு வர்றாரு.

இந்நிலையில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உயிரே உறவே தமிழே.. பத்திரமாக இருக்கிறீர்களா? சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெரும் கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம்.

களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். துரோகிகளை களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி களையெடுக்க வேண்டியவர்களில்  முதல் நபராக இருந்தவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் இவர் தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களை எடுத்துக் கொள்ள துணிந்தார்.

கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமையையும் நேர்மையையும் தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு ‘அனுதாபம்’ தேட முயற்சிக்கிறார்.

தன்னையும் எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னை களை என்று புரிந்து கொண்டு தன்னைத் தானே நீக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.

என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்ததில்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை.

தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றம் இல்லை.

அரசியல்ல எந்த உண்மையும் எந்த காலத்திலும் வெளி வந்ததேயில்லை

 

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *