Sunday, April 14

இருபது திமுக “வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்!

இருபது திமுக “வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்!

மார்ச் 12ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்த வேட்பாளர் பட்டியல் முழுக்க முழுக்க மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக ஐபேக்கிலிருந்து கூக்குரல்கள் கேட்கிறது. கூடுதல் தொகுதிகளை ஜெயிக்க வேண்டும் என்றால் சுமார் 25 தொகுதிகளை மாற்றிட வேண்டும் என ஐபேக் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே திமுகவில் 25 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுக்கப் போவதில்லை என்கிற பதிவு நாம் போட்டிருந்தோம். இப்போ அந்த பிரச்சினை தான் திமுகவில ஓடிக்கிட்டு இருக்கு.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க வேட்பாளர் பட்டியலை மார்ச் 12-ம் தேதி அறிவித்தார் ஸ்டாலின். அறிவித்த நேரத்திலிருந்து இதுவரை பல இடங்களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. கட்சியினர் ஒருபக்கம் பிரச்னை கிளப்பினால், ஐபேக் நிர்வாகிகள் மறுபக்கம் பிரச்னை கிளப்பி வருகிறார்கள். இந்த தேர்தலில் தம்பிங் மெஜாரிட்டியுடன் ஜெயிக்கணும்னா சுமார் 25 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றிட வேண்டும் என ஐபேக் கூறியுள்ளதாம்.

இதுகுறித்து ஐபேக் மேல்மட்ட பணியாளர்கள் என்ன சொல்றாங்கன்னா “பட்டியல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல இடங்களில் இருந்தும் எங்களுக்கு ஃபோன் மேல் ஃபோன் வந்துகொண்டிருக்கிறது. 6 மாத காலம் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பு எல்லாம் 6 நாட்களில் காணாமல் போக வைத்துவிட்டார்களே என சிலர் பொங்குகிறார்கள். சில இடங்களில் வேலை செய்த பணியாளர்கள் வேலையே வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். எங்கள் மண்டலப் பொறுப்பாளர்கள் அவர்களிடம் சமாதானம் பேசி வருகிறார்கள்.

ஐபேக்கை உருவாக்கியது பி.கே. என்றாலும், தற்போது இதில் எந்தப் பொறுப்பிலும் அவர் இல்லை. வெறும் ஆலோசகர் மட்டுமே. தலைமைப் பொறுப்பில் இருக்கும் 5 இயக்குநர்கள்தான் எங்களை வழிநடத்துகிறார்கள். நாங்கள் கொடுத்த பட்டியல் மாறி வந்திருப்பதைப் பார்த்து இயக்குனர்கள், பி.கே.விடம் பேசியிருக்கிறார்கள். டென்ஷனான பி.கே., ‘இந்த சூழலில் நான் ஸ்டாலினிடம் பேச முடியாது, நீங்களே பேசிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டார். இதனால் ஐபேக் இயக்குநர்கள் ஸ்டாலினிடம் போனில் பேசினார்கள்.

“நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களை நீங்களே கூட கிராஸ் செக் செய்தீர்கள். ஒருவர் கூட டம்மியானவர்களை நாங்கள் கொடுக்கவில்லை. தற்போது மொத்தமாகப் பட்டியலை மாற்றிவிட்டு, அறிவிக்கப்பட்டவர்களை ஜெயிக்க வைத்துக்கொடுங்கள் என்றால், அது ரொம்ப கஷ்டம். ஸ்வீப் பண்ண வேண்டும் என்றால், 20 தொகுதிகளின் வேட்பாளர்களை உடனடியாக மாற்றியாக வேண்டும்” என்றனர்.

அதற்கு ஸ்டாலின், “நான் அறிவித்த வேட்பாளர்களை, நீங்கள் கொடுத்த வேட்பாளர்களாக நினைத்துக்கொண்டு வேலை பாருங்கள். இனிமேல் பட்டியலை மாற்ற முடியாது. அப்படி மாற்றினால் பல்வேறு இடங்களில் குழப்பம் ஏற்படும்” என்று சொல்லி கைவிரித்துவிட்டார். இதுபற்றி மேலும் விவாதிக்க நேரம் கேட்டார்கள் எங்கள் இயக்குநர்கள். அதற்கு ஸ்டாலினிடமிருந்து க்ரீன் சிக்னல் ஏதுமில்லை.

180 தொகுதிகளில் நிச்சய வெற்றி என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம். ஆனால், இப்போது 150 என சுருங்கிவிட்டது. சுலபமாக ஜெயிக்கக் கூடிய 100 தொகுதிகளிலும் 30 தொகுதிகள் குறைந்துவிட்டது” என்றவர்கள், அதுகுறித்து விளக்கினார்கள். ”பர்கூர், சங்கரன்கோவில், குடியாத்தம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ராமநாதபுரம், மதுரை மேற்கு, சிவகாசி, எழும்பூர், மதுரை தெற்கு, ராஜபாளையம், சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், பொங்கலூர், திருவொற்றியூர், சேலம் தெற்கு, செங்கல்பட்டு மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய 20 தொகுதிகளில் நாங்கள் கொடுத்த பாரம்பரிய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மீண்டும் நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு மேற்கண்ட தொகுதிகளில் சீட் கொடுக்கவில்லை என்றால், வெற்றி கடினமாகிவிடும்.

உதாரணத்துக்கு சில தொகுதிகளைக் குறிப்பிடுகிறோம். பர்கூர் தொகுதியில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க-வுக்கு வந்த மதியழகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாங்கள் கொடுத்த பட்டியலில் சுகவனம் மற்றும் கோவிந்தராஜன் என இருவர் பெயர் இருந்தது. இவர்களில் சுகவனம் ஒருகாலத்தில் ஜெயலலிதாவையே பர்கூரில் தோற்கடித்தவர். அவர்மீது தொகுதிக்குள் நன்மதிப்பு நிலவுகிறது. கோவிந்தராஜனைப் பொறுத்தவரை கடந்த முறை இங்கு போட்டியிட்டு வெறும் 400 வாக்குகளில் தோற்றவர். அந்த அனுதாபம் இன்னமும் அவருக்கு கைகொடுக்கிறது. மேலும், ஒரே மாவட்டத்தில் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களை நிறுத்தக்கூடாது என்பது மரபு. ஒவ்வொரு சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் செங்குட்டுவனும், மதியழகனும் ஒரே சமூகத்தவர்கள். இதையெல்லாம் கணக்கிட்டுதான் வேட்பாளரை மாற்ற வேண்டும் எனக் கேட்கிறோம்.

அடுத்து, சங்கரன்கோவில் தொகுதியில் உள்ளூர் வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, ஸ்ரீகுமார் ஆகியோர் பெயரைக் கொடுத்தோம். ஆனால், தென்காசி தொகுதியிலிருந்து ஈ.ராஜா என்பவரை இறக்கியிருக்கிறார்கள். அமைச்சரை எதிர்க்கும் கேண்டிடேட் வெயிட்டாக இருந்தால்தான் ஜெயிக்க முடியும். புதிய தமிழகம் கட்சியுடன் டி.டி.வி.தினகரன் கூட்டணி பேசி வருகிறார். கூட்டணி உறுதியானால், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி சங்கரன்கோவிலில் போட்டியிடுவார். ஒருபக்கம் அமைச்சர், இன்னொரு பக்கம் ஷியாம் என இருமுனைத் தாக்குதலில், தி.மு.க வேட்பாளர் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது.

இதேபோல், குடியாத்தம் தொகுதிக்கு ராஜாக்கமங்கலம் முருகானந்தம் என்பவரது பெயரைக் கொடுத்திருந்தோம். ஆனால், ஸ்டாலின் அறிவித்தது அமுலு என்பவரை. இதே அமுலுதான் கடந்த 2016 தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றது. எதற்குத் தோற்றார் என்று ஆராய்ந்தபோதுதான் தெரிந்தது விவரம். அதாவது, அமுலு பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவரது கணவர் வன்னியர். ஒன்றியச் செயலாளராக இருக்கும் கல்லூர் ரவியின் தம்பி மனைவிதான் அமுலு. காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். என்ன இருந்தாலும் கணவர் வேறு சமூகம் என்பதால்தான் கடந்த முறை மக்கள் ஏற்கவில்லை. அப்படியிருக்க இம்முறையும் இவருக்கே வேறு தொகுதி கொடுத்திருப்பது சரியில்லை. இதுபோல ஒவ்வொரு தொகுதிக்கும் விளக்கத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்” என்றவர்களிடம், “ ஐபேக் குறிப்பிட்ட 20 தொகுதிக்கும் அவங்க கொடுத்த வேட்பாளர் யார்னு கேட்டா

“ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு ஜோயல், தூத்துக்குடி தொகுதிக்கு கீதாஜீவனின் தம்பி ஜெகன், நாங்குநேரிக்கு எட்வின் பிரபாகர், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு ஆவுடையப்பனின் மகன் பிரபாகர், ராமநாதபுரம் தொகுதிக்கு இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மதுரை மேற்குக்கு வழக்கறிஞர் அன்புநிதி, சிவகாசிக்கு ஒன்றியச் செயலாளர் விவேகன் ராஜ், எழும்பூர் தொகுதிக்கு மறைந்த பரிதி இளம்வழுதியின் மகன் இளம்சுருதி, மதுரை தெற்குக்கு இளம் மகிழன், ராஜபாளையம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் தாமரைக்கனியின் மகன் தங்கமாங்கனி, சாத்தூர் தொகுதிக்கு ராசா அருள்மொழி, ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிக்கு வழக்கறிஞரும், கொள்கை பரப்புத் துணைச் செயலாளருமான வழக்கறிஞர் இளம்பரிதி, பொங்கலூர் தொகுதிக்கு பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி, திருவொற்றியூர் தொகுதிக்கு கவி கணேசன், சேலம் தெற்குக்கு வழக்கறிஞர் தமிழரசன், செங்கல்பட்டுக்கு வழக்கறிஞர் எம்.கே.டி.கார்த்திக் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு ஆனந்த் என நன்கு ஆராய்ந்து பெயர்களைக் கொடுத்தோம்.

ஸ்டாலின் அமைத்த டீமும் விசாரித்து ஓகே செய்துவிட்டது. இருந்தாலும் இறுதிகட்டத்தில் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. மாற்றுக் கட்சியிலிருந்து வந்த மூத்த மாவட்டச் செயலாளர் ஒருவர்தான் இதற்குக் காரணம் என கட்சியினர் கைகாட்டுகிறார்கள். வேட்பாளர்களை மாற்றவில்லை என்றால், ஒருவேளை இது தேர்தல் முடிவுகளில் ‘பேக்ஃபயர்’ ஆனதென்றால் எங்களைக் கேட்கக் கூடாது என ஸ்டாலினிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார்களாம் ஐபேக் நிறுவனத்தினர்.இது தான் திமுகவில் ஓடிக்கிட்டு இருக்கிற ஹாட் டாபிக். இனி ஒரு பிரயோஜனமில்லை.
ரஜினி அந்த ஆண்டவன் தான் காப்பத்தணும்.மே 2ந்தேதி வரை நாமும் பொறுத்திருப்போம்

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *