Sunday, April 14

அதிமுக கூட்டணியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் !

சசிகலாவை கூட்டணியில் சேர்க்க அதிமுகவுக்கு திடீர் நிபந்தனை எடப்பாடி, ஓபிஎஸ்சிடம் அமித்ஷா கண்டிப்பு: தொகுதிகள் முடிவாகாததால் புதிய பரபரப்பு; அமமுகவை கழற்றிவிட திட்டம்

அதிமுக கூட்டணியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வற்புறுத்தியதால் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நீடித்தது. எந்த உடன்பாடும் ஏற்படாததால் அமித்ஷா டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது நான் சொல்வதை கேளுங்கள் என்று கூறி தலைவர்களை மிரட்டும் தொணியில் பேசியதாகவும், இதனால் இரு தலைவர்களும் ஆடிப்போய்விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அதிமுக – பாஜ இடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. அதேநேரத்தில் அமமுகவை கழட்டி விடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. இதனால், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை அவசர அவசரமாக சட்டப்பேரவையில் கடந்த வாரம் இறுதி செய்தது. இதையடுத்து அதிமுக – பாமக கூட்டணி உறுதியானது. 23 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கூட்டணியில் உள்ள பாஜ, தேமுதிக ஆகியோருடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் அதிமுக தீவிரமாக இறங்கி உள்ளது.

இதில், பாஜ தங்களுக்கு குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என்று முதலில் இருந்தே கேட்டு அடம் பிடித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம் பேசினார். அதே நேரத்தில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கும், சசிகலா ஆதரவு பெற்ற அமமுகவுக்கும் நாங்கள் சீட் வழங்கி விடுகிறோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த எடப்பாடி, கூட்டணியில் அமமுகவை சேர்க்கவே முடியாது என்று திட்டவட்டவமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பாஜவிடம் கடந்த சனிக்கிழமை அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய உள்துறை இணை அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங், பாஜ மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், பாஜ அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ்யை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின்போது, ‘‘எங்களுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்’’ என்று கூறி தொகுதிகளுக்கான பட்டியலையும் பாஜ தரப்பில் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டாராம். பாமகவுக்கு 23 தொகுதிகள் தரப்பட்டுள்ளது. பாஜவுக்கு 21 தொகுதிகள் வரை தருவதாக அதிமுக தரப்பில் கூறியதாக தெரிகிறது. ஆனால், பாஜ தலைவர் இதற்கு சம்மதிக்கவில்லை. குறைந்தபட்சம் 50 தொகுதிகளாவது ஒதுக்குங்கள் என்று பாஜ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமமுகவும் இந்த கூட்டணியில் இணைந்தால்தான் கனிசமான வெற்றிபெற முடியும்.

அதனால் அமமுகவுக்கு நாங்கள் 20 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக வாக்குறுதி கொடுத்துள்ளோம் என்றும் பாஜ தரப்பில் தெரிவித்துள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பாஜ தலைவர்கள், அமித்ஷா, சசிகலாவுக்கு 20 தொகுதிகள் கொடுத்து எப்படியும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் அமித்ஷாதான் இதுபற்றி இறுதி முடிவு எடுக்க முடியும் என்று கூறிவிட்டு கோபமாக சென்று விட்டனர்.

இந்நிலையில், காரைக்கால், விழுப்புரம் ஆகிய இடங்களில் பாஜ சார்பில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த அமித்ஷாவை, பாஜ தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, சசிகலாவை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி, ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தமிழக பாஜகவுக்கு 21 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று எடப்பாடி கூறியதை அமித்ஷாவிடம் தெரிவித்தனர். இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அமித்ஷா, ‘‘தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் என அனைவரும் ஊழல் செய்துவிட்டு இவ்வளவு சுதந்திரமாக இருக்க யார் காரணம். எல்லாத்தையும் மறந்துவிட்டு பேசுகிறார்களா? நாம் இல்லையென்றால் அவர்கள் எல்லோரும் இன்று வேறு எங்காவது இருந்து இருப்பார்கள். அவர்களை யோசித்து முடிவு எடுக்க சொல்லுங்கள்’’ என கூறி உள்ளார். அமித்ஷா காட்டமாக தெரிவித்த கருத்துகள் எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து எடப்பாடி, ‘‘சசிகலாவை நீங்களும் சேர்க்க வேண்டாம். நாங்களும் சேர்க்க விரும்பவில்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் 30 தொகுதிகள் கூட தருகிறோம். நீங்கள் வேண்டுமென்றால் அவர்களுக்கு தொகுதிகள் பிரித்துக் கொடுங்கள். ஆனால், அவர்கள் பாஜ சார்பில் உங்கள் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். குக்கர் சின்னத்தில் போட்டியிடக்கூடாது’’ என்று தனது இறுதியான முடிவை பாஜ தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பாஜ தலைவர்கள், அமித்ஷா காதுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அமித்ஷாவை நேற்று முன்தினம் இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். அதில், பாஜ உடனான தொகுதி பங்கீடு குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில், சசிகலாவை கூட்டணியில் சேர்க்க வேண்டும், அவருக்கு 20 தொகுதிகள் கொடுக்க வேண்டும், பாஜவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க வேண்டும், என்று அமித்ஷா பிடிவாதமாக இருந்துள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை சேர்க்க வேண்டாம் அடம் பிடித்துள்ளார். மேலும், பாஜவுக்கு 21 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என்று கூறி உள்ளார்.

கடைசியில் சசிகலாவை கூட்டணியில் சேர்க்காமல் இருக்க அமித்ஷா சம்மதம் தெரிவித்தார். ஆனால் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதமாக கூறிவிட்டார். 31 தொகுதிகளுக்கு குறைந்து எங்களால் போட்டி போட முடியாது. அதேநேரத்தில் எங்கள் கட்சியில் முக்கிய தலைவர்களுக்கான தொகுதியையும் இறுதி செய்து விட்டோம். அதன் பட்டியலை தருகிறோம். அந்த தொகுதிகளை தவிர மற்ற தொகுதியில் நீங்கள் போட்டியிடுங்கள் என்று இரு தலைவர்களுக்கும் அமித்ஷா உத்தரவிட்டார்.

இதனால், நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்த பேச்சுவார்த்தையில் எநத முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியைடந்த அமித்ஷா, நள்ளிரவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
சசிகலாவை சேர்ப்பதில் அமித்ஷா மும்முரமாக இருந்ததால் அதிமுக – பாஜ கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இப்போது சசிகலாவை கழட்டி விடும் முடிவுக்கு பாஜக வந்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியை டி.டி.வி.தினகரன் 2 முறை தனியாக சந்தித்து பேசியுள்ளார்.

அதைத்தொடர்ந்து தான் அவரை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய பாஜ தலைமை நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் சசிகலாவை கூட்டணியில் சேர்க்க பாஜ ரொம்ப அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அமித்ஷா வைத்த நிபந்தனைக்கு எடப்பாடி இறங்கி வந்தால், இன்று அல்லது நாளை அதிமுக – பாஜ இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று தெரிகிறது. இதற்கிடையில் அமித்ஷா மிரட்டல் பேச்சுவார்த்தை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பாஜவின் நிபந்தனை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் என அனைவரும் ஊழல் செய்துவிட்டு இவ்வளவு சுதந்திரமாக இருக்க யார் காரணம். எல்லாத்தையும் மறந்துவிட்டு பேசுகிறார்களா?

* அமித்ஷாவுடன் டிடிவி சந்திப்பு?
அமமுக வேட்பாளர்களை தங்களது சின்னத்தில் போட்டியிட வைப்பதா அல்லது அவர்களை கழட்டி விட்டு விட்டு, தாங்கள் போட்டியிடும் தொகுதியில் அமமுக தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துவதா என்று பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில், அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், தனது ஆதரவு பாஜக தலைவருடன் சேர்ந்து அமித்ஷாவை ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது இருவரும் பேசியபோது யாரும் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பேசிய தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்தும் அதிமுகவுக்கு தகவல் வந்து விட்டது. இது குறித்தும் அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்..

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *