Sunday, April 14

‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’? இது சாத்தியமா?

‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். இது, கல்விக் கடன் வாங்கியோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமா? இத்தகைய வாக்குறுதி நாட்டுக்கு அவசியமா என்ற, கேள்விகள் எழுந்துள்ளன.
இதுநாள் வரை, அரசு நினைத்தால் அனைத்தும் சாத்தியம் என்று நம்பி வந்தவர்கள், தி.மு.க.,வின் இந்த வாக்குறுதி சாத்தியமா என, கேள்வி கேட்க துவங்கியுள்ளதன் காரணம், தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் வாக்குறுதியான, தங்க நகை கடன் தள்ளுபடி தான். அந்த வாக்குறுதியை நம்பி பலர், புதிய தங்க நகை கடன் எடுத்தனர். தமிழகம் எங்கும், தி.மு.க.,வும் அமோக வெற்றி கண்டது. ஆனால், ‘மத்தியில் ஆட்சியை பிடிக்காததால், எங்களால் நகை கடன் பற்றி ஏதும் செய்ய இயலாது’ என்ற பாணியில், தி.மு.க., கைவிரித்தது. மத்திய அரசில், தி.மு.க., பங்கு பெற்றிருந்தாலும், தங்க நகை கடன் தள்ளுபடி சாத்தியமாகி இருக்காது. ஏனெனில், ஒரு மாநிலத்திற்கு மட்டும், அத்தகைய திட்டத்தையும், அதற்கான நிதியையும், மத்திய அரசால் எப்படி தர முடியும்?

இப்படித்தான் சந்திரபாபு நாயுடுவும், கல்விக் கடன் தள்ளுபடி என, வாக்குறுதி அளித்தார். ஆனால், கடைசியில் மத்திய அரசு, ஒரு மாநிலத்திற்காக மட்டும், அப்படி எல்லாம் நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என, திட்டவட்டமாக சொல்லி விட்டது. கடைசியில் ஏமாற்றம் அடைந்தது, ஆந்திர மாணவர்களும், வாக்காளர்களும் தான். தமிழக அரசும், கடன் தள்ளுபடிக்கு, மத்திய அரசை நாட வேண்டிய சூழலில் தான் உள்ளது. ஸ்டாலினுக்கும், இது தெரிந்த விஷயம் தான். அவரே, ‘தமிழக அரசின் கடன் சுமை, 5 லட்சம் கோடியை தாண்டிவிட்டது’ என, பேசியுள்ளார்.

கல்விக் கடன் தள்ளுபடி என்பது, நடுத்தர வர்க்கத்தினரை குறிவைக்கும் வாக்குறுதி. அவர்களில் பலர், விஷயங்களை படித்து தெரிந்து கொள்பவர்கள் என்பதால், அவர்கள் மத்தியில், கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியம் தானா என்ற, ஐயம் எழுந்துள்ளது. அதேநேரம், இன்னொரு சாரார் கடன் தள்ளுபடியை எதிர்த்து பேசத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக அண்மையில், முதல்வர் இ.பி.எஸ்., பயிர் கடனை தள்ளுபடி செய்தது, அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

‘மூன்று ஆண்டுகளாக, மழைக்கு குறைவில்லை; விளைச்சலும் நன்றாகத்தான் இருக்கிறது. பஞ்சம் என்பது போல், எங்கும் செய்திகள் படிக்கவில்லை. பிறகு எதற்கு பயிர் கடன் தள்ளுபடி? இது, வரி கட்டுவோர் தலையில் தானே வந்து விடியும்? ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு, 3,000 கோடி ரூபாய் செலவாகிறதாம். அதற்கு, ஜப்பானில் இருந்து பணம் வரவில்லை என்று, நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். ஆனால், ஓட்டுக்காக பயிர் கடன் தள்ளுபடி என்று, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப் போகிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது?’ என்று அதிருப்தியாளர்கள் குமுறுகிறார்கள். இதே பாணியில், கல்விக் கடன் ரத்தையும், அவர்கள் எதிர்க்கிறார்கள்.

அவர்கள் கூறுவதாவது:கொரோனா ஊரடங்கால், உலகெங்கும் பொருளாதார மந்த நிலை இருப்பதும், அதனால் வேலைவாய்ப்பு குறைந்திருப்பதும், உண்மை தான். வேலை வாய்ப்பு தான் பிரச்னை என்றால், தொழில்களுக்கான கடனை தள்ளுபடி செய்வதோ, தள்ளிவைப்பதோ புத்திசாலித்தனமா? இல்லையெனில், கல்விக் கடனை ரத்து செய்து, தகுதிக்கேற்ப வேலை கிடைக்கவில்லை என்று, வீட்டில் நேரத்தை வீணடிப்போர் கூட்டதை உருவாக்குவது புத்திசாலித்தனமா? கல்விக் கடன் என்ற, சுமை இருந்தாலாவது கிடைத்த வேலைக்கு போக வேண்டும் என்ற சூழலும் பொறுப்பும் ஏற்படும்.

கடன் சுமையை நினைத்து, முதலிலேயே கடன் வாங்காமல், கல்வி வாய்ப்பை நழுவவிட்டவர்களும், கடனை ஒழுங்காக திருப்பி கட்டுபவர்களும் முட்டாள்களா? கல்விக் கடன் வாங்கி இருக்கும் ஒவ்வொருவரும், செலவறிந்து தானாக தான், பாடத் திட்டங்களை தேர்வு செய்துள்ளனர்; யாரும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. தனி நபர்களின் தேர்வுகளுக்காக, எதற்கு மொத்த சமுதாயமும் பளுவை சுமக்க வேண்டும்?

கடந்த, 2016 முதல், தமிழக தேர்தல் பிரசாரத்தில், கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி, தவறாமல் இடம் பெறுகிறது. அதை நம்பி, கல்விக் கடனை செலுத்தாமல் உள்ளோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடன் மீதான வட்டி அதிகரித்து, அவர்களுக்கு பெரும் சுமையாக மாறி விடுகிறது. அதனால், இப்படிப்பட்ட வாக்குறுதிகள் சமூகத்திற்கு கேடு தான் விளைவிக்கின்றன. இவ்வாறு, அவர்கள் கூறுகின்றனர்.

“தமிழகத்தில், 458 பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. உண்மையில், 250 கல்லுாரிகள் இருந்தாலே போதுமானது,” என்கிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆண்டு தோறும் படித்து விட்டு வரும் மாணவர்களில், 1.5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க முடியும். ஆனால், அதை விட பல மடங்கு அதிகமாகவே, நாம் மாணவர்களை தயார் செய்து வருகிறோம். இங்கே, வேறு பிரச்னைகள் உள்ளன. மாணவர்கள் படிக்கும் படிப்பில், 70 சதவீத பாடங்கள் காலாவதியானவை. வேலைவாய்ப்பு தேடி போகும் போது, அவை எடுபடுவதில்லை. இன்றைக்கு உள்ள நவீன பாடங்களோ, துறைகளோ, கல்லுாரிகளில் சொல்லி கொடுப்பதில்லை. நிகர்நிலை பல்கலைகளோடு, இன்ஜினியரிங் கல்லுாரிகளால் போட்டியிட முடியவில்லை. அந்தப் பல்கலைகளில், புதிய துறை சார்ந்த புதிய படிப்புகளை ஆரம்பித்து, அதில், 1,000 பேரை சேர்க்கின்றனர்.

கல்லுாரிகளை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும். புதிய பாடத் திட்டங்கள், அதற்கேற்ப ஆசிரியர்கள், கல்விக் கட்டணம் ஆகிய அனைத்தையும் கல்லுாரிகளிடமே விட்டு விட்டால் தான், உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கல்விக் கடன் பெற்று படிக்க வரும் மாணவர்களுடைய எதிர் காலமும் நம்பிக்கையுடன் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.தேசிய வங்கிகள் தான் கல்வி கடன் கொடுத்திருக்கின்றன. 2018 புள்ளிவிவரப்படி, நாடு முழுதும், 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், 17 ஆயிரம் கோடி ரூபாய் என்பது, 20 சதவீதம்.

தமிழகம் மற்றும் கேரளாவில் வழங்கப்பட்ட கல்வி கடன் மட்டும், மொத்த கல்வி கடனில், 36 சதவீதம். இந்தியா முழுதும் வழங்கிய கல்வி கடன் தொகையில், தமிழகத்தின் பங்கு தான் அதிகம். மருத்துவம், பொறியியல், நர்சிங், கலை அறிவியல் என, அனைத்து படிப்புகளுக்கும் கல்வி கடன் கொடுக்கப்படுகிறது. கடந்த, 2016ல் ரிசர்வ் வங்கி, தேசிய வங்கிகளுக்கு கடுமையான விதிமுறைகளை வகுத்து, சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. ‘சாத்தியமில்லாத கடன்களை, எக்காரணம் கொண்டும் தள்ளுபடி செய்யக்கூடாது’ என, தெரிவித்துள்ளது.
அதில், கல்வி கடன் முக்கியமானது. அதனால், யார் கல்வி கடனை தள்ளுபடி செய் என்று சொல்லி, தேசிய வங்கிகளை அணுகினாலும், அது நடப்பதற்கு சாத்தியமில்லை. அதேபோல, மத்திய அரசும், அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. ஏற்கனவே, இப்படித் தான், ஆந்திராவில் நடந்த தேர்தலில், சந்திரபாபு நாயுடு, கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக, வாக்குறுதிக் கொடுத்தார்.அதுதொடர்பாக, பார்லிமென்டில் விளக்கம் அளித்த, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘மத்திய அரசுக்கு கல்வி கடனை ரத்து செய்யும் நோக்கமோ, திட்டமோ எதுவுமில்லை. கல்வி கடனை வங்கிகள் ஒருபோதும் ரத்து செய்யாது’ என்று, திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்படி இருக்கும் போது, கல்வி கடன் ரத்து பற்றி, எந்த தைரியத்தில் சொல்கின்றனர் என, புரியவில்லை.வங்கிகள் கொடுத்த கல்வி கடன்களை, ரத்து செய்ய முடியாது என்பதே நிதர்சனம். மாணவர்கள் வாங்கிய கடனை, மாநில அரசு, வங்கிகளுக்கு செலுத்தி விடும். அதனால், மாணவர்கள் வாங்கிய கடன் அடைக்கப்பட்டு, அவர்கள் திருப்பி செலுத்தும் கட்டாயத்தில் இருந்து விடுபடுவர் என்கின்றனர்.ஏற்கனவே, கடுமையான நிதிச் சுமையில் இருக்கும் மாநில அரசால், 17 ஆயிரம் கோடி ரூபாயை, ஒரே நாளில் எடுத்து, வங்கிகளுக்கு செலுத்துவது என்பது சாத்தியமில்லாதது. கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது, கூட்டுறவு வங்கி நிர்வாகம், மாநில அரசின் கீழ் உள்ளது.அதன் நிதி நிலையை ஈடுசெய்கிறோம் என சொல்லி, மாநில அரசு, கடன் பத்திரம் கொடுத்து, ஐந்தாண்டுகளுக்கு பணத்தைக் கொடுக்காமல் தள்ளி போடலாம். வருவாய் கூடுதலாக இருக்கும் போது, கூட்டுறவு வங்கிகளுக்கு கொடுத்து விட முடியும்.

ஆனால், தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய முடியாத சூழலில், திருப்பி செலுத்த வேண்டும் என்றால், அதை உடனே செய்தாக வேண்டும்.அப்படியே, வங்கிகளுக்கு அரசு, மாணவர் கடன் தொகையை கட்டுவதாக வைத்துக் கொள்வோம். ஏற்கனவே, கடுமையான நிதிச்சுமையில் தடுமாறும் மாநில அரசு, அதற்காக கொடுக்கும் பணத்தை ஈடுகட்ட, மக்கள் தலையில் வரிச்சுமையைத் தான் ஏற்றும். அரசு தவறாக எதைச் செய்தாலும், அது மக்கள் தலையில் தான் விழும்.

அதில், இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. கல்வி கடன் வாங்கிப் படிக்கும் மாணவர்களில் பலர், ஒழுங்காக திருப்பி செலுத்துவதில்லை. அப்படியிருக்கும் போது, ரத்து செய்தால், ஒழுங்காக படித்து, வேலைக்கு செல்ல மாட்டார்கள். மாணவர்கள், தவறான பாதைக்குச் செல்வது அதிகரிக்கும்.கடன் வாங்கி விட்டோம்; அதை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று, படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து போகும்.எனவே, சாத்தியமில்லாத விஷயங்களை, தேர்தல் வாக்குறுதியாகக் கொடுப்பது, மக்களை ஏமாற்றும் செயல். அதனால், தேர்தல் கமிஷன், இந்த மாதிரி சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கொடுக்கும் கட்சிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *