Saturday, April 13

முக்தி மண்டபம் உள்ள திருத்தலங்கள் மூன்று தான் ! அந்த மூன்று தலங்கள் எவை?

முக்தி மண்டபம்’ உள்ள திருத்தலங்கள் மூன்று தான்.
அது என்ன முக்தி மண்டபம்? அந்தத் திருத்தலத்தை நினைத்தாலோ, அதன் பெயரை கூறினாலோ, அங்கு பிறந்தாலோ அல்லது இறந்தாலோ முக்தி
நிச்சயம்.

அந்த மூன்று தலங்கள் எவை?

01. காசி. காலத்தை நிர்ணயிக்கும் கால பைரவ க்ஷேத்திரம். சதாசிவன், சதா ராம நாமம் ஜெபிக்கும் தலம். ஆகையால் முக்தி.

02. திருவையாறு. அப்பர் பெருமானுக்கு இறைவன் கைலாயக் காட்சி தந்த இடம். பூலோக கைலாயமாதலால் முக்தி சர்வ நிச்சயம்!

03. நாகப்பட்டினம் சிவராஜதானி. அதாவது சிவாலயங்களுக்கெல்லாம் தலை நகரம். ஆதி புராணம்.

அதாவது உலகின் முதல் சிவஸ்தலம். காலபைரவர் காசியிலிருந்து தானே விரும்பி வந்து இங்கே எழுந்தருளி இருக்கிறார்.

ஆகவே முக்தி.

இத்தகைய புண்ணிய பூமியில் நாம் இப்போது தரிசிக்கப்போகும் கோயிலின் வரலாறை அறிவதற்கு முன் ஒரு கூடுதல் செய்தி. சித்தர்களின் ஜீவசமாதி அமையப் பெற்ற ஊர்கள் அற்புதமான பலன்களைத் தரவல்லவை. புண்ணியமும் புனிதமும் ஒருசேர்ந்த விசேஷத் தலங்கள் அவை.

பொதுவாக சித்தர்கள் என்றாலே பதினெட்டுச் சித்தர்கள் பற்றித்தான் பலரும் நினைப்பார்கள். ஆனால், எண்ணிலடங்கா சித்தர்கள் இம்மண்ணில் உள்ளனர். இன்றும் அவர்களின் பிரத்யட்ச வெளிப்பாடுகளை சரகிரி. திருவண்ணாமலை, கைலாயம் மற்றும் அவர்களின் ஜீவ சமாதிகளில் நாம் உணரலாம்.
ஒரு சித்தர் ஓர் ஊரில் ஜீவசமாதி அடைந்தாலே அவ்வூர் மாபெரும் புண்ணிய க்ஷேத்ரமாகி விடும்.

கலியுகத்திலும் களங்கம் இன்றி மகிமையுடன் திகழும் பூமியில்தான் அவர்கள் அடக்கமாகிக் குடி கொள்ளுவர். அவ்வகையில் மூன்று சித்தர் பெருமான்களின் ஜீவசமாதி உள்ள பெருமைக்கு உரிய ஊர், நாகப்பட்டினம்.

நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் அழுகண்ணி சித்தர்.கடற்கரையில் வடக்குப் பொய்கை நல்லூரில் கோரக்கர் சித்தர்.நாம் இப்போது தரிசிக்கப் போகும் சட்டைநாத சுவாமி ஆலயத்தில் சோளீஸ்வரமுடையார் சித்தர் என மூன்று சித்தர்களின் ஜீவசமாதி இவ்வூரில் உள்ளது.

சட்டைநாதர் சுவாமி கோயிலின் தென் கோபுர வாயிலில் பலிபீட வடிவில் இருக்கும் இந்த சித்தர் பீடத்தைப் பற்றி உள்ளூர்வாசிகளில் பலருக்கே கூடத் தெரியவில்லை. அவரால்தான் நாகைக்கே காலபைரவர் காசியிலிருந்து வந்தார்.

இதோ அந்த தல வரலாற்றைப் பார்ப்போம்.

முன்னொரு காலத்தில் காசியில் ராமதேவர் என்கிற சித்தர் இருந்தார். அவர் பைரவரின் பரம பக்தர். காலபைரவரைக் குறித்து பல்லாண்டுகள் தவம் செய்தார்.

ஒரு நாள் பத்துக் கரங்களுடனும், ஒன்பது கரங்களில் ஆயுதம், ஒரு கரம் அபய முத்திரையுடன் காலபைரவர் அவருக்குக் காட்சி தந்து அருளினார்.
காலபைரவரை தரிசித்து மகிழ்ந்த ராமதேவ சித்தர் இதே உருவத்தில் நான் என்றும் பூஜிக்கத்தக்க திருமேனியாக எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார்.

உடனே காலபைரவர் சிறிய தங்க விக்ரகமாக மாறி ராமதேவர் கைகளில் வந்து சேர்ந்தார். பக்தா உன் தவத்தால் மகிழ்ந்த நான், எப்போதும் உன்னுடனேயே இருப்பேன். உரிய காலத்திற்குப் பிறகு உன் சீடனிடம் இதனை அளித்துவிட்டு நீ என்னடி சேருவாய் என்று உரைத்தார்.

ராமதேவரும் காசியில் பைரவரை பிரதிஷ்டை செய்து பல காலம் வணங்கி வந்தார். அவரது சீடர்தான் சோளீஸ்வரமுடைய சித்தர். அவரிடம் குரு ராமதேவ சித்தர் தன் காலம் முடிவடையும் தருவாயில் கால பைரவ மூர்த்தியை ஒப்படைத்தார்.

கால பைரவர் திருவிளையாடல் துவங்கியது. நாகப்பட்டினத்தில் எழுந்தருள எண்ணம் கொண்டார், ஈசன்.ஒருநாள், சோளீஸ்வரமுடையார் கனவில் தோன்றி என்னை ஆதிபுராணமாம் திருநாகையில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வாய்? என்று உத்தரவிட்டார் பைரவர்.

ஈசனின் கட்டளைப்படியே அவரும், தென்னாடு வந்து நாகப்பட்டினம் மேலக் காயாரோணம் ஆலயத்தின் தென்பால் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் கோயில் அமைக்கப் பணம் இல்லாமல் தவிர்த்தார்.
சித்தரின் தவிப்பைத் தீர்க்க சிவனார் மீண்டும் திருவிளையாடல் புரிந்தார்.

நாகைக்கு வடக்கே உள்ளது திருமலைராயன்பட்டினம் எனும் சிற்றூர். அக்காலத்தில் அது பெரிய நகரம், அரசனின் அரண்மனை இருந்த தலை நகரம்.
அப்போது ஆட்சி செய்த மன்னனின் மகளை

பிரம்மராட்சசம் என்னும் பேய் பிடித்து ஆட்டியது. பார்க்காத மந்திரவாதிகள் இல்லை. போகாத ஊர் இல்லை. ஆனால் பிரம்மராட்சசனை விரட்ட முடியவில்லை.அரசன் மனமுருகி சிவபெருமானை வேண்ட, அவன் கனவில் தோன்றி,நாகப்பட்டினம் செல். அங்கு என் பக்தன் சோளீஸ்வரமுடைய சித்தன் இருக்கிறான். அவனால் அன்றி யாராலும் உன் மகள் குணமடைய மாட்டாள் என்று கூறி அருளினார்.அரசனும் அன்றே கிளம்பி, நாகை வந்தான்.

சித்தரைப் பணிந்து விவரம் சொன்னான். எப்படியாவது மகளை காப்பாற்றுங்கள்… தாங்கள் என்ன கூறினாலும் செய்யத் தயார் என்று கெஞ்சினான்.
காலபைரவரைத் துதித்த சோளீஸ்வரமுடைய சித்தர். பிரம்மராட்சசனைப் பிடித்து விலங்குகளால் பிணைத்து அவனை பூமியில் புதைத்தார்.

மன்னன் மகள் பூரண குணமடைந்தாள்.அப்போது சோளீஸ்வரமுடையார் மன்னனிடம், தான் காசியிலிருந்து கொண்டு வந்த கால பைரவருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் எனவும், அவரைப் பார்த்தபடியே நேர் எதிரில் தன் ஜீவ சமாதியை அமைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அப்படியே மன்னனும் மேலைக்காயாரோகண சுவாமி கோயிலில் தனி விமானத்துடன் பைரவர்க்கு ஓர் ஆலயமும், சித்தருக்கு ஜீவசமாதியும் அமைத்தான்.

இப்போது அனுதினமும் தன் வழிபாட்டுக் கடவுளான காலபைரவ மூர்த்தியைப் பார்த்துக் கொண்டும் தியானித்துக் கொண்டும் அவரது சன்னதிக்கு நேர் எதிரே சோளீஸ்வரமுடைய சித்தர் உள்ளார்.அவருக்கு இடப்பக்கம் அவரால் அடக்கப்பட்ட பிரம்மராட்சசன் புதைக்கப்பட்டுள்ளான். வாகனமாக சித்தரால் வளர்க்கப்பட்ட நாய்க்கும்சமாதி உள்ளதுஆலயத்தின் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் பலிபீடம், கொடிமரம், கிழக்கு நோக்கி ஆதி காயாரோஹண சுவாமியாய் சிவலிங்கத் திருமேனியில் ஈசன் அருள்பாலிக்கிறார். தெற்கு நோக்கி அம்பாள் இக்ஷுரஷ பாஷினி. தமிழில் ‘கரும்பினும் இனிய தேன்மொழியாள்’.

இவ்வாலத்தின் தெற்கு கோபுர வாயில்தான் காசியிலிருந்து வந்த காலபைரவர் சன்னதிக்கு வழி. அழகான மாடக் கோயிலில் எழுந்தளருளி அருள்புரிகிறார் காலபைரவர். பைரவர் தோலாடை தரித்து காட்சிதருவதால்

சட்டை நாதசுவாமி என்ற பெயரும் வழங்குகிறது. (தோலாடைக்கு சட்டை என்றொரு பெயர் உண்டு) அவருக்கு அருகே அமிர்தவல்லி அம்பாள் தரிசனம் தருகிறாள். இங்கே அருட்காட்சி தரும் பைரவரின் மூர்த்தம், காலபைரவர் தானே உருவெடுத்து ராம தேவர் சித்தரின் கரத்தினில் வந்து சேர்ந்தாரே. அதே தங்கத் திருமேனி என்பதால் சன்னதி முன் நிற்கும்போதே மெய்சிலிர்க்கிறது. நமமுடைய காலம் இனி நல்ல காலமாக இருக்கும். நடப்பதெல்லாம் நல்லதாகவே என்ற நம்பிக்கை மனதுள் பிறக்கிறது.

காலத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் காலபைரவரின் இந்தத் தங்கத் திருமேனியே இங்கே மூலவராக இருப்பதோடு, உற்சவ காலத்தில் உலாவரும் மூர்த்தியாகவும் திகழ்வது சிறப்பு.ஆண்டுதோறும் சித்திரையில் பத்துநாட்கள் நடக்கும் சைத்ர உற்சவத்தில் சித்திரை நட்சத்திரநாளில் தீர்த்தவாரியும், ஹஸ்த நட்சத்திர தினத்தில் தேர் உலாவும் நடக்கிறது. அன்றைய தினம்தான் தங்க காலபைரவர் மூலவரே உற்சவராக திருவுலா வருகிறார்.

காலபைரவருக்கு நேர் எதிரே வாசலில் பலிபீடம் போன்ற அமைப்பில், சோளீஸ்வரமுடைய சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது. சதா சர்வ காலமும் பைரவரை தரிசனம் செய்தவாறே தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார் சித்தர். இது இறைவன் அவருக்குத் தந்த வரத்தினால் கிடைத்த பெருமை.

ஆலயச் சுற்றில் விநாயகர், முருகன், குருபகவான், துர்க்கை அம்மன், சண்டீசர் என்று ஆகமவிதிப்படி அனைத்து சன்னதிகளும் உள்ளன. இக்கோயிலின் தீர்த்தமான பைரவ புஷ்கரணி, கோயிலுக்கு உள்ளேயே இருக்கிறது.
இத்தலம் வருவோர் ஈசனின் கடாட்சத்தால் சகல வரங்களையும் பெறுவது நிதர்சனமான உண்மை. அதற்குக் காரணம் இங்கே அரும் இறைவன், இறைவியின் கருணை. காலபைரவரின் அருளாசி ஆகியவற்றோடு சித்தர் பெருமானின் பரிபூரண அனுகிரகமும் அவர்களுக்கு கிடைப்பதுதான்.

சீரான வளங்களை அருளும் சிவபெருமானையும், சோகங்கள் நீங்க சித்தரையும் ஒருங்கே வணங்க நீங்களும் போகவேண்டாமா நாகப்பட்டினத்துக்கு? அதற்கு காலபைரவரை மனதார வேண்டுங்கள். அந்த நல்ல காலம் சீக்கிரமே உங்களுக்குக் கிட்டிட அவரே அருள் செய்வார்!

எங்கே இருக்கு: நாகப்பட்டினம் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு மத்தியில் இந்த ஆலயம் உள்ளது.இரண்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம். எல்ஐ.சி. ஸ்டாப்பில் இறங்கினால் நடந்து செல்லும் தூரம். அங்கிருந்தே கோயிலின் கோபுரம் தெரியும்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *