Saturday, April 13

வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?

வராக்கடன் வங்கி என்ற நடைமுறை மேலை நாடுகளில் ஏற்கெனவே இருந்து வருகிறது . ஆனால் , இந்தியாவிற்கு இது புதிது . இந்த வராக்கடன் வங்கிக்கு மேலை நாடுகளில் ஆங்கிலத்தில் ‘ பேட் பேங்க ‘ என்று பெயர் . தமிழில் எல்லாமே’ பேட் பேங்க்’ தான்.அதனால வராக்கடன் வங்கின்னே சொல்லலாம்.

அதென்ன வராக்கடன் வங்கி? அது எப்படி செயல்படும்ன்னு நீங்க கேக்கிறது எனக்கு புரியுது. அதாவது இந்த வராக்கடன் வங்கி மற்ற வங்கிகளின் வராக்கடன்களை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளும் . இதனோட வேலை என்னன்னா அத்தகைய வராக்கடன்களை வசூலிப்பது , சொத்துக்களை விற்று , செலவழித்த பணத்தை திரும்ப பெறுவது மட்டுமே .

உதாரணமாக , இந்த வராக்கடன் வங்கி இந்தியன் வங்கியிலிருந்து ரூ 1000 கோடி வராக்கடன்களை அதற்குரிய சொத்துக்களுடன் , 30 சதவிகிதம் தள்ளுபடி செய்து ரூ 700 கோடிக்கு வாங்கும் . இந்தியன் வங்கிக்கு வந்தவரை லாபம் . இந்த வராக்கடன் வங்கி வாங்கியதுக்கு பின்னாடி அந்த சொத்துக்களை ரூ 800-1200 கோடி வரை விலை வைத்து சாதுரியமாக விற்கும் .இது மாதிரி வராக்கடன்களை கழிவுடன் கொடுக்கும் போது , வங்கிகள் எவ்வளவு சதவிகிதம் கழிவு தரலாம் என்பதை நிதி நிபுணர்கள் தான் நிர்ணயிப்பார்கள் . இன்னொரு உதாரணம் சொல்லலாம்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி கல்விக் கடன்களை ரிலையன்ஸ் வசூலிச்சதே ஞாபகம் இருக்கா.அது அப்போ வராக்கடன் வங்கியா செயல்பட்டது. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்த ஒடனே அமைதியாய்ட்டாங்க.

இந்த வராக்கடன்களை , வங்கிகளுக்கு  ஏற்படுத்தியது பெரும்பாலும் வங்கி அதிகாரிகள்தான் என்றாலும் , இவற்றை அவர்கள் கணக்கில் இருந்து எடுத்து விட்டால் சுமையிலிருந்து விடுபட்டு லாபத்தை நோக்கி நடைபோடலாமே . இதில் என்ன அனுகூலம்ன்னா , இதில் அவசர விற்பனைக்கு இடமேயில்லை . ஐந்து வருடங்கள் கூட எடுத்துக் கொள்ளலாம் . எப்போது வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம். ஆனா சாதாரண வங்கி மேலாளருக்கு டெபாஸிட் சேகரிக்கிறது , கடன்கள் தருவது , ரிசர்வ் வங்கியிலிருந்து பணம் பெறுவது , வாடிக்கையாளர் சேவை , வங்கி நிர்வாகம் , கணக்குகளை சரிபார்ப்பது , ஊழியர்களுக்கு சரியான பொறுப்பைக் கொடுத்து – வேலை வாங்குவது, கண்காணிப்பது போன்ற வேலைகள் இருக்கும்.இதுல கொடுத்த கடன்களை வசூலிப்பதும் இதில் ஒன்று .

ஆனால் இந்த வராக்கடன் வங்கி மேலாளர்களுக்கு கடன்களை வசூலிப்பது அல்லது காத்திருந்து சொத்துகளை நல்ல விலைக்கு விற்பது மட்டுமே வேலை . இதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்தான் மேலாளராக இருப்பார்கள் . இந்திய வங்கிகளின் சங்கமும் பாரதிய ஸ்டேட் வங்கியும் இந்த வராக்கடன் வங்கி அமைக்க ஆதரவு தருகிறார்கள் . மத்திய ராஜாங்க நிதி அமைச்சர் அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் , கடந்த பிப்ரவரியில் , தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்களின் மதிப்பு ரூ . 7. 1/4 லட்சம் கோடிகள்ன்னு சொல்லியிருக்காறு. நமது 2019-2020 பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வசூலே ரூ 4.5 லட்சம் கோடிகள்தான். நிறுவனங்கள் வரி மூலம் ரூ 5.50 லட்சம் கோடி தான் வசூலாகும்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் , ‘ இந்த கோவிட் -19 பாதிப்பால் அடுத்த ஆறு மாதங்களில் வராக்கடன்களின் அளவு அதிகரிக்கும் ‘ என எச்சரிக்கிறார். மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் கே . சுப்ரமணியன் , இந்த வராக்கடன் வங்கி அமைப்பதற்கு ஆதரவளிக்கவில்லை . ‘ இது போல் வங்கிக் கடன்களை வசூலிக்க 28 கம்பெனிகள் இருக்கின்றன ‘ என்கிறார் . ஆனால் எகனாமிக் டைம்ஸ் ஆசிரியர் டி.கே. அருண் , ‘ பொதுத்துறை வங்கி மேலாளர்கள் தனியார் நடத்தும் கம்பெனிகளுக்கு வராக்கடன்களை கழிவுடன் கொடுக்கத் தயங்குவார்கள் . அதிகக் கழிவுடன் கொடுத்தால் தனியார் கம்பெனிகளின் லாபத்திற்காக உழைக்கிறார் என்ற கெட்டப்பெயரும் வரும் . சி.பி.ஐ வழக்குகள் வரும் காம்ப்ட்ரோலர் , ஆடிட்டர் ஜெனரல் இவர்களிடமிருந்து கேள்விகள் வரும்ன்னு பயப்படுவார்கள் என்கிறார் . வராக்கடன்கள் வாங்கும் நிறுவனத்தை யார் நடத்துகிறார்கள் , யாருக்கு சொந்தம் என்பது முக்கியம் என்றும் அவர் கூறுகிறார் .

ஆனா பொதுத்துறை வங்கிகள் மூலதனம் போட்டு ( அதன் வராக்கடன்களுக்கேற்ப ) நடத்துவதால் , வராக்கடன்களை கழிவு செய்து கொடுக்கும் வங்கி மேலாளர்களுக்கு அதிக பாதுகாப்பு . இந்த வராக்கடன் வங்கி லாபம் ஈட்டினால் , அது பொதுத் துறை வங்கிகளுக்குத்தான் போய் சேரும் . பொதுத் துறை வங்கிகளும் கடன் சுமையை எடுத்ததால் , புதிய கடன்களை முனைப்புடன் கொடுப்பார்கள் . இந்த வராக்கடன் வங்கி , தனது அனுபவத்திலும் , தினசரி கண்காணிப்பிலும் , பொதுத் துறை வங்கிகளுக்கு அவ்வப்போது எச்சரிக்கை கொடுக்கும் . மேலும் வாராக்கடன்கள் சேருவதை இது தடுக்கும் என்கிறார்கள்.

1988 – இல் அமெரிக்காவில் பிட்ஸ் பெர்க் மெல்லன் வங்கி , கிராண்ட் ஸ்ட்ரீட் நேஷனல் வங்கி என்ற பெயரில் ஒரு வராக்கடன் வங்கியைத் தோற்றுவித்து , தன்னுடைய வாராக்கடன்களை 47 சதவிகிதம் கழிவுடன் கிராண்ட் வங்கிக்கு விற்று விட்டது . அதில் முதலீடும் செய்தது . கிராண்ட் வங்கி சொத்துக்களை அதிக லாபத்திற்கு விற்று லாபம் ஈட்டி முதலீட்டை லாபத்துடன் திருப்பிக் கொடுத்தது . பின்னர் கிராண்ட் வங்கி மூடப்பட்டது . பிரிட்டிஷ் அரசாங்கமும் கோவிட் -19 பாதிப்பினால் நஷ்டமடைந்த வியாபார தொழில் நிறுவனங்களின் வராக்கடன்களை தீர்க்க வராக்கடன் வங்கி ஒன்றை உருவாக்க ஆலோசித்து வருகிறது ( சன்டே டைம்ஸ் 17 மே , 2020 ) .

ஐரோப்பாவின் மத்திய வங்கியும் ( ஈரோப்பியன் சென்ட்ரல் பேங்க் ) இது மாதிரி வராக்கடன் வங்கி ஒன்றை ( கடன் தீர்க்கும் கார்ப்பரேஷன் ) உருவாக்க முடிவு செய்துள்ளது . இதன் தலைவர் கிறிஸ்டின் லகார்டே இதற்காக ஒரு கமிட்டியை அமைத்துள்ளார் . ஆனால் , ஜெர்மனி , ( வடக்கு ஐரோப்பிய நாடு ) தெற்கு ஐரோப்பிய நாடுகளின் ( கிரேக்கம் , இத்தாலி ) கடன் தன் தலையில் விழும் என்ற பயத்தில் இதை தடுக்க முயற்சிக்கிறது . ஸ்வீடனில் ரெட்ரிவா மற்றும் செக்யூரா என இரு வராக்கடன் வங்கிகள் அரசு முதலீட்டுடன் 1993 – இல் ஆரம்பிக்கப்பட்டன . இரண்டும் லாபகரமாக நடந்து அதற்கு தன் கடன்களை விற்ற ஸ்வீடன் வங்கிகளும் நல்ல நிலைக்கு திரும்பின . பால் கிருக்மன் போன்ற பொருளாதாரப் பேராசிரியர்கள் மற்ற நாடுகளுக்கு ஸ்வீடன் மாடலைத்தான் பரிந்துரைக்கிறார்கள் . இந்த வாராக்கடன் வங்கி முறை , பின்லாந்து , ஸ்பெயின் , ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது . ஜப்பானில் இது 1990 – களிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது . 1993 – இல் கூட்டுறவு கடன் வாங்கும் கம்பெனி ஒன்று . தனியார் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது . வங்கிகளின் நஷ்டத்திற்கேற்ப வரிவிலக்கு அளிக்கப்பட்டது . இருந்தாலும் , இதனைத் தனியார் நடத்தி வந்தாலும், வங்கிகளை இத்தகைய பணிக்கு கடன்களை விற்க கட்டாயப்படுத்த இயலவில்லை என்பதாலும் இம்முயற்சி வெற்றி பெறவில்லை .

1999 – இல் அரசு முதலீட்டுடன் ‘ ரெசல்யூஷன் கலெக்ஷன் கார்ப்பரேஷன் ‘ என்ற பெயரில் ஒரு வாராக்கடன் வங்கி ஆரம்பிக்கப்பட்டது . அது இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது . பங்கு சந்தையில் அது இடம் பெற்றிருக்கிறது . தனியாரை விட அரசு பங்களிப்புடன் இந்த வராக்கடன் வங்கியை நடத்துவது சிறந்தது என தெரிய வருகிறது . இந்த வராக்கடன் வங்கியை விமர்சிப்பவர்கள் முன்வைக்கும் வாதம் , இது மாதிரி அரசு உதவியுடன் வராக்கடன்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் , வங்கிகள் அதிக ஆபத்து ( ரிஸ்க் ) நிறைந்த கடன்களைக் கொடுக்க முற்படும் . கடன் திரும்பி வரவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது வராக்கடன் வங்கி என்ற எண்ணம் வந்துவிடும் என்கிறார்கள்.

இன்னொரு விமர்சனம் இருக்கு. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் சலுகை என்று ஆகிவிடும் . தற்காலிகமாக திருப்பித்தர முடியாத கம்பெனிகளில் நிர்வாகக்குழுவில் அரசு பிரதிநிதியை நியமித்து , நிலைமையை சரிசெய்வதை விட்டு விட்டு அந்த கம்பெனி திவால் அறிவிப்பு கொடுக்கும்படி செய்வார்கள். அப்போதானே வராக்கடன் வங்கிக்கு விற்க முடியும்னு குற்றச்சாட்டு வைக்கிறாங்க.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி ஸ்கந்த தாஸ் ‘ இதே போல் ஒரு அமைப்பை ‘ ரெசல்யூசன் கார்ப்பரேஷன் ‘ என்ற பெயரில் ஆரம்பிப்பதற்கானத் திட்டம் இருக்கிறது ‘ என்று கடந்த ஜூலை 11 – இல் ஸ்டேட் வங்கி நடத்திய கருத்தரங்கில் கூறியிருக்கிறார். இந்தியாவில் இதற்கு சட்டபூர்வமான அடித்தளம் அமைத்து , எந்த பெயரிலாவது வராக்கடன் வங்கிகளை மேற்கூறிய நாடுகளின் அனுபவத்தை கொண்டு விதிமுறைகளை அமைத்து , தொழில்முறை நிபுணர்களை நியமித்து , அரசியல் தலையீடு இல்லாமல் நடத்தினால் அவை வெற்றி பெற வாய்ப்புண்டு . கடனை விற்ற வங்கிகளும் கடன் சுமையை இறக்கி வைத்ததனால் முன்னேற வாய்ப்புண்டு என்கிறார்கள்.இந்த வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்ப்போமே!

.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *