Thursday, April 18

உலக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன !!

பள்ளிப் படிப்பு வரை எப்படியோ முடித்தாகிவிட்டது என்று, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மாணவிகள் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். குறிப்பாக பிளஸ் 2 படிப்பானது, ஒருவரின் உயர்கல்வி வாய்ப்பை நிர்ணயிக்கும் அளவுகோல் மட்டுமே.+2 ல எடுக்கும் மார்க்கின் அடிப்படையில் தான் நீங்கள் நல்ல கல்லூரிகளில் சேர முடியும்.

ஆனாலும், தனித்திறமையும், சாதனை வேட்கையும் கொண்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, வாழ்க்கையில் முன்னேறி, புகழ் பெற்று விடுகிறார்கள்.இதற்கு உதாரணமாக நிறைய பேர் இருக்கிறார்கள்.

இங்கே, கல்லூரிப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், அது கலை – அறிவியல் படிப்போ, மருத்துவப் படிப்போ, பொறியியல் படிப்போ, மேலாண்மை படிப்போ மற்றும் இன்ன பிற படிப்புகளோ, அவை எதுவானாலும், அந்த படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களின் பள்ளிப் படிப்பு மனோ நிலையை கட்டாயம் தாண்டி வரவேண்டியுள்ளது. இல்லையெனில், அவர்கள் பல விஷயங்களிலும் பின்தங்கும் அவலநிலை ஏற்படுகிறது.

பள்ளிப் படிப்பை பொறுத்தவரை, இந்தியா போன்ற நாடுகளில், அதன் பண்பாடே, வேறுமாதிரியாக உள்ளது. பாடப்புத்தகம் மட்டுமே அங்கு பிரதானம். விளையாட்டு மற்றும் இதர திறமைகளை வளர்ப்பது குறித்த செயல்பாடுகள், பெயரளவிற்கே நடக்கும். அதுவும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு வந்துவிட்டால் போதும், சொல்லவே தேவையில்லை. நிலைமையே தலைகீழ்.

பாடப்புத்தகத்தை தவிர, வேறு எதற்கும் இடமில்லை. பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வெழுதி, உயர்கல்வியில், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதுதான் வாழ்க்கையின் ஒரு பெரிய கவுரவமாகவும், அந்தஸ்தாகவும் கருதப்படும் நிலை உள்ளது.

சரி, அவை அப்படியே இருக்கட்டும். தற்போது, நாம் ஏதோ ஒரு உயர்கல்வி படிப்பில் சேர்ந்துவிட்டோம். அது எதுவாகவோ இருக்கட்டும். அந்தப் படிப்பை எப்படி படித்தால், அதாவது, நமது கல்லூரி அல்லது பல்கலைக்கழக வாழ்வை எவ்வாறு செலவிட்டால், நம் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும் என்பதைத்தான் சிந்திக்க வேண்டியுள்ளது.

சமீப ஆண்டுகளில், “உலக அளவில் பல பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான அளவில், தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன” என்ற செய்திகள் வருவது நிதர்சனமான உண்மை.

ஒவ்வொரு ஆண்டும், படித்து முடித்து வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்க, தகுதியான பணியாளர் பற்றாக்குறையோ, கூடிக்கொண்டே செல்கிறது. நாம், தகுதியான கல்லூரியில் படிக்கிறோமா என்பது இருக்கட்டும். ஆனால், ஒரு சுமாரான கல்லூரியில் படித்தாலும்கூட, ஒரு மாணவர், தனது படிக்கும் காலத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்வதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது.

பள்ளிப் படிப்பு வரையில், நாம் படித்த விதமே வேறாக இருக்கலாம். பள்ளிப் படிப்பில், ஒருவர், வெற்றிகரமான மாணவராக இருக்க வேண்டுமெனில், பொதுவாக, பாடப்புத்தகத்தை நன்றாகப் படித்தாலே போதுமானது. அவர், வெற்றிகரமாக பள்ளியைவிட்டு வெளியே வந்து, தனக்குப் பிடித்தமான உயர்கல்வி நிறுவனத்தில், தனக்குப் பிடித்தமான படிப்பில் சேர்ந்து விடலாம்.

ஆனால், கல்லூரி படிப்பு என்பது இறுதி கட்டம். அந்தப் படிப்பை முடித்தவுடன், நாம் பணிக்கு செல்ல வேண்டும். எனவே, நாம் எந்தளவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்வது முக்கியம். வெளியுலகில் வேலை பார்ப்பதற்கு தேவையான பல்வேறு திறன்களையும், நாம், கல்லூரி படிப்பின்போதே கற்றுக்கொள்ள வேண்டும்.கலை அறிவியல் கல்லூரி படிப்பானாலும் சரி பொறியியல் படிப்பானாலும் சரி அந்த துறை சார்ந்த சான்றிதழ் படிப்புகள் உள்ளது.உதாரணமா பிகாம் படிக்கும் மாணவர்கள் முதல் வருஷமே TALLY TRP 9, SAP என்கிற சான்றிதழ் படிப்பு, அடுத்து கம்ப்யூட்டர் இயக்குவது குறித்த படிப்பு இறுதியாக ஆங்கிலத்தில் சரளமாக பேச SPOKEN ENGLISH COURSE படிக்கணும்.

அப்போதுதான், படித்து முடித்தவுடனேயே, நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில்துறை தான் என்றில்லை, எந்த துறையாக இருந்தாலும் சரி, நாம் படிக்கும் போதே தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டால், பணி செய்யும்போது ஜொலிக்கலாம்.

எனவே, கல்லூரிக்குள் நுழையும்போது, பள்ளிப் படிப்பின் பண்பாட்டைப் பற்றி மறந்துவிட்டு, உங்கள் சிந்தனையைப் பரவலாக்கி, வெளி உலகைப் பற்றிய உங்களின் பார்வையை விரிவாக்கி, வாழ்க்கைக்கு தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்யும் ஒவ்வொரு மாணவர்களும், பணிசெய்தல் என்கிற மிகப்பெரிய ஒரு பொறுப்பிற்குள் செல்கிறார்கள். அங்கே அவர்கள் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும், அவர், கல்லூரி காலத்தில் கற்றுக்கொள்ளும் திறன்களில் தான் அடங்கியுள்ளது. எனவே மாணவர்கள் நீங்கள் படிப்பதோடு மட்டும் நிற்காமல் படித்த படிப்பை நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு பயன்படுமாறு உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *