Saturday, April 13

சீனாவுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து அதிக மாணவர்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்கின்றனர்.

சீனாவுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து தான் அதிகமான அளவில் மாணவர்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்கின்றனர். 10 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படித்து வருகின்றனர் என 2019 ஜூலை மாதத்தில் இந்திய வெளியுறவுத் துறை கூறியிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் மாணவர்கள் விசா மையத்தில் குவிந்து வெளிநாடு சென்று படிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த வருடம் அப்படி நடக்க இயலவில்லை.

“மன அழுத்தம், குழப்பம், பதற்றம் என நிறைய மனநிலைகளில் இருக்கின்றனர் மாணவர்கள். ஆனால் யாருக்கும் தெளிவு இல்லை” என்கிறார் பிரிட்டன் சென்று இதழியல் படிக்க விரும்பும் மாணவர் ஒருவர்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு தங்களுடைய படிப்பை அடுத்த வருடம் அல்லது அதற்கடுத்த செமஸ்டருக்கு தள்ளி வைக்கலாம் என்ற ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. அதே சமயம் சில பல்கலைக்கழகங்கள் நிலமை சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டு வரை அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் எடுக்கப்படும் என திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கிரீன்விச் பல்கலைக்கழகம் சில வகுப்புகள் ஆன்லைனிலும் சில வகுப்புகள் நேரிலும் நடக்கும் என அறிவித்துள்ளது. பிற நாட்டு மாணவர்களுக்கு அடுத்த செமஸ்டர் வரை வகுப்புகளை தள்ளி வைக்கலாம் எனவும் கிரீன்விச் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

“இவ்வாறு வகுப்புகள் தள்ளி வைக்கப்படுவது நியாயமாக தோன்றுகிறது என்றாலும் குறிப்பாக ஒன்றரை வருடம் போராடி இது போன்ற கல்லூரிகளில் சேர்கிறோம். அப்படியிருக்க ஆன்லைன் வகுப்புகள் நியாயமானதாக தோன்றவில்லை”, என்கிறார்கள் மாணவர்கள். இந்த ஆன்லைன் வகுப்புகளால் நிறைய மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது போன்ற பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்க விரும்புவதற்கு காரணம் பிற்காலத்தில் அங்கேயே வேலை பார்க்கலாம் என்பதும் அங்கிருக்கும் கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்து கொள்வதற்காகவும் தான் என்கிறார்கள் மாணவர்கள்.

வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு அதிகம் செலவாகிறது. காரணம் கட்டணம் அனைத்தும் அந்த அந்த நாட்டின் பணத்தில் கட்ட வேண்டும். தங்கள் சொந்த நாட்டின் பணத்தில் அல்ல. அது போக விண்ணப்பத்திற்கான கூடுதல் கட்டணம் மற்றும் சில பரிசோதனைகள் என அனைத்திற்கும் செலவாகும்.

ஆன்லைன் வகுப்புகள் என்றால் விசா, விமான டிக்கெட்டுகள் மற்றும் அங்கு வாழ்வதற்கு செய்யும் செலவுகள் ஆகியவை தேவையில்லை. ஆனால் பல மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே கல்லூரி வகுப்பை கவனிக்க தங்கள் சேமிப்பையோ பிறரிடம் கடன் வாங்கியோ செலவு செய்ய வேண்டுமா ? என தயங்குகின்றனர்.

சில மாதங்கள் கழித்து நிலைமை சரியாகி மாணவர்கள் அந்தந்த கல்லூரி வளாகங்களுக்கு சென்று படித்தாலும் அப்போதும் அதற்கான கட்டுப்பாடுகள் இருக்கும்.

உதாரணமாக மருத்துவ செலவு அதிகரிப்பு. குறிப்பாக கோவிட்-19 தாக்கம் அதிகமுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளில் படிப்பதென்றால் இது குறித்து கேள்வி எழும்.

மேலும் வெளிநாட்டில் வேலை என்பது தற்போது குறைந்துள்ளது.அமெரிக்க நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்குத் தான்முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் கூறியுள்ளார்.கோவிட் 19 ஊரடங்கினால் பல கோடி அமெரிக்கர்கள் வேலையை இழந்துள்ளனர். அதனால் இனி அமெரிக்காவில் வேலை கிடைப்பது அரிதாகி விடும் என்கிறார்கள்.இந்த உலகத் தொற்று ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் வீழச் செய்துள்ளது. இதனால் வேலை கொடுப்பவர்கள் வெளிநாட்டு மக்களுக்கு வேலை கொடுத்து விசாவுக்காக பணம் வாங்குவதை பெரிதும் விரும்ப மாட்டார்கள்.

அதிக செலவு செய்து பட்டம் வாங்கி வேலையில்லாமல் இந்தியாவுக்கு திரும்ப வருவது என்பது பல மாணவர்களை அச்சுறுத்தியுள்ளது. குறிப்பாக பெரும்பாலானோர் வெளிநாட்டில் படித்து அங்கேயே நல்ல வேலைக்கு செல்லலாம் என்ற எண்ணத்தோடு உள்ளனர்.

சமீபத்திய இந்த பிரச்சனை மற்றும் இதோடு தொடர்புடைய பொருளாதார விளைவு, அதிகமான இந்தியர்களை வெளிநாட்டிற்கு சென்று படிப்பது குறித்து யோசிக்க வைத்துள்ளது. என க்யூ எஸ் என்னும் சர்வதேச கல்வி வலைதளம் தன்னுடைய சமீபத்திய ஆய்வில் கூறியுள்ளது.

இந்த சூழலால் பல்கலைக்கழகங்களும் தற்போது சிக்கலான சூழலில் உள்ளன என்கின்றனர் நிபுணர்கள்.

அமெரிக்க பொருளாதாரத்திற்கு சர்வதேச மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் 45 பில்லியன் டாலர்கள் அந்நிய செலாவணி மூலம் கிடைக்கிறது. அதே போல பிரிட்டனில் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களிடமிருந்து 7 பில்லியன் யூரோக்களைக் கட்டணமாகப் பெறுகிறது. சர்வதேச மாணவர்கள் அங்கு சேர்வதை பற்றி யோசிப்பது பல்கலைக்கழகங்களின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மாணவர்கள் அங்கு சென்றாலும் சமூக விலகல் என்னும் விதியால் அவர்களை தங்க வைப்பதில் பல்கலைக்கழகங்களுக்கு பெரும் சிக்கல்கள் ஏற்படும். ஆன்லைன் வகுப்புகள் என்றாலும் பல மணி நேரங்கள் ஆகும்.

“எவ்வளவு நல்ல தொழில்நுட்பமாக இருந்தாலும் இணையதளத்தில் சில சிக்கல்கள் ஏற்படும்” என்கிறார் வெளிநாட்டு படிப்புக்கான ஆலோசகர்.

பல மாணவர்கள் தங்கள் சேர்க்கையை 2021ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எப்படியிருந்தாலும் இந்தியர்களின் வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்களின் கனவுகள் குறையாது என நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *