Thursday, April 18

கோடைகால வெயிலின் மூலம் கரோனா வைரஸ் கட்டுப்படும் ?

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 21 நாட்கள் ஊரடங்கு காலத்துக்குப் பின் வரும் கோடைகால வெயிலின் மூலம் கரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படும் என்று முன்னணி இந்திய நுண்ணுயிரியல் வல்லுநர்கள் (Indian microbiologists) நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதுவரை கரோனா வைரஸால் இந்தியாவில் 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.இந்த 21 நாட்கள் ஊரடங்கு முடிந்தபின்பும் கரோனா தொற்று பரவுமா அல்லது அதற்குள் கட்டுப்படுமா என்பது மக்கள் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும். அதுகுறித்து தேசத்தின் முன்னணி நுண்ணுயிரியல் வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர்.நாட்டில் உள்ள மிகப் பழமையான அறிவியல் அமைப்பான இந்திய நுண்ணுயிரியல் வல்லுநர்கள் கூட்டமைப்பின் (ஏஎம்ஐ) தலைவரும் நுண்ணுயிரியல் வல்லுநருமான ஜே.எஸ். விர்டி கூறுகையில், “வரும் ஏப்ரல் மாத இறுதியில் கோடைகாலம் உச்சத்தைத் தொடும். வெயில்கூடுதலாக இருக்கும். அப்போது நிச்சயம் நம்முடைய நாட்டில் கரோனா பரவும் வேகம் கட்டுப்படும் என்று நம்புகிறேன்.

உலகில் உள்ள பலபெருமை மிக்க நுண்ணுயிரியல் வல்லுநர்கள் பணியாற்றும் ஆய்வு மையங்களில் கிடைத்த தகவலின்படி, பல்வேறு வகையான கரோனா வைரஸ்கள் குளிர்காலம் சார்ந்தவையாகவே இருக்கின்றன.இன்னும் எளிதாகக் கூற முடியுமென்றால், கரோனா வைரஸ்கள் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரைதான் தீவிரமாக இருக்கும். ஜூன் மாதத்தில் கரோனா வைரஸின் செயல்பாடு, தீவிரம் குறைந்துவிடும் என்பது நுண்ணுயிரியல் வல்லுநர்களின் பொதுவான கருத்து.

என்னுடைய 50 ஆண்டு ஆராய்ச்சியாளர் வாழ்க்கையில், கோவிட்-19 வைரஸ் போன்று மின்னல் வேகத்தில் பரவும் வைரஸ்களை நான் பார்த்தது இல்லை. மிக வேகமாக காற்றில் பரவுவதைப் போல் பரவுகிறது. அறிவியல் ரீதியாக ஒருவர் தும்மும்போதும், எச்சில் துப்பும்போதும், இருமும்போதும் வரும் துளிகள் மூலம் பரவுவதாகக் கூறப்பட்டாலும், காற்றிலும் பரவுகிறது. இதற்கு முன் இருந்த பல்வேறு கரோனா வைரஸ்களோடு ஒப்பிடும் போது கோவிட்-19 வைரஸ் நீண்டநாட்கள் வாழும் தன்மையைப் பெற்றுள்ளன. ஆதலால், எளிதில் அதை நாம் செயலிழக்க வைக்க முடியாது.

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு எடுத்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடு மிகவும் சரியான முடிவு” எனத் தெரிவித்தார்.

ஏஐஎம் அமைப்பின் பொதுச்செயலாளரும் நுண்ணுயிரியல் வல்லுநரான பேராசிரியர் பிரத்யூஷ் சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், “ வெயில் காலம் உச்சத்தில் இருக்கும் ஜூன் கோட்பாட்டைப் பற்றி சில வல்லுநர்கள் பேசுகிறார்கள். நான் சில சீன நுண்ணுயிரியல் வல்லுநர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது, கோவிட்-19 வைரஸ் அதிகமான வெப்பத்தில் உயிர்வாழும் தன்மை கொண்டது இல்லை எனத் தெரிகிறது.அனைத்துத் தரப்பு வைரஸ்களும், அது சார்ஸ், ப்ளூ எதுவாக இருந்தாலும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரைதான் அதன் தீவிரமான செயல்பாடு இருக்கும். அதற்குக் காரணம் என்னவென்றால், ஏப்ரல் மாதத்திலிருந்து வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும்போது, வைரஸ் பரவுவது குறையத் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள தொற்றுநோய் மையம் நடத்திய விரிவான ஆய்வில், நோயாளிகள் நுரையீரல் பகுதியில் இருந்து 3 விதமான கரோனா வைரஸ்களை எடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் அது குளிர்காலத்தில் வருபவையாக இருந்தன.

இதன் மூலம் வைரஸின் தாக்கம் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் தொடக்கநிலையில் நுண்ணுயிரியல் வல்லுநர்கள் சிலரின் கருத்துப்படி, கோவிட்-19 வைரஸ்கள் குளி்ர்காலத்திலும், வறட்சியான வெயில் காலத்திலும் வாழக்கூடியவை என்றும் கூறுகிறார்கள்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *