Monday, April 29

சயீரா நரசிம்ம ரெட்டி – விமர்சனம் !

உய்யலவாடா பகுதியின் நிர்வாக மற்றும் இராணுவ ஆட்சியாளராக இருக்கும் நரசிம்ம ரெட்டி தனது குரு கோசாய் வெங்கண்ணாவின் ஆலோசனையின் படி, எப்படி ஒரு போர் வீரராகவும் தலைவராகவும் மாறி எப்படி குடிமக்களுக்கு நல்லது செய்கிறார் என்பது பற்றின உண்மை கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி. இதில் நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவியும் குரு கோசாய் வெங்கண்ணாவாக அமிதாப் பச்சனும் அற்புதமாக நடித்துள்ளார். நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வீரபாண்டிய கட்ட பொம்மன் என்றால் எப்படி நமக்கு சிவாஜி நினைவிற்கு வருவாரோ அதே போல இனி நரசிம்ம ரெட்டி என்றாலே சிரஞ்சீவிதான் கண் முன் வருவார் என்று சொன்னால் மிகையாகாது.சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரிப்பில் 200 கோடி பட்ஜெட்டில் மிக மிக பிரமாண்டமாய் உருவாக்கப்பட்ட வரலாற்று காவியம்தான் சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம். நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வரலாற்று படம் இது.

தெலுங்கு திரையுலகை ஒரு படி மேலே உயர்த்திய பெருமை இப்படத்தை சேரும். தெலுங்கு படமான இது தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையில் எந்த ஒரு வரலாற்று படத்திலும் இல்லாத அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படம் நாடு முழுமைக்கும் பொதுவானது. காந்தி பிறந்த நாளான இன்று அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகியுள்ளது இத்திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. சிரஞ்சீவி உடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, கன்னட திரையுலகின் கிச்சா சுதீப் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிர வைக்கிறது.மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது திரையுலக வாழ்வில் முதல் முறையாக ஒரு வரலாற்று படத்தில் நடித்துள்ளார். அவருடைய இந்த நீண்ட நாள் கனவு இப்படம் மூலம் நிஜமாகியுள்ளது. சுதந்திர போராட்ட வீர வரலாறு மட்டுமல்ல காதல், திருமணம் என வீரத்தோடு ரொமான்ஸ் காட்சிகளும் உண்டு என்பதால் கொஞ்சம் கூட போர் அடிக்காமல் போகிறது படம்.

அழகான நடன கலைஞராக லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமன்னா மீது காதல் கொண்டு பிறகு, சில தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக சித்தம்மரை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாராவை மணம் முடிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்.ஆங்கிலேயர்கள் துவங்கிய கிழக்கிந்திய கம்பெனியால், மக்கள் படும் கொடுமையிலும் துயரத்திலும் இருந்து விடுவிக்க கிச்சா சுதீப் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து போராடுகிறார்கள். இருப்பினும் இந்த போராட்டத்தை எதிர்க்கும் சில சொந்த நாட்டு மக்களையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது. நரசிம்ம ரெட்டியின் இந்த போர் 1857 புரட்சிக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

பல வரலாற்று திரைப்படங்கள் போலவே உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டாலும், திரைக்கதையை வியக்கத்தகு முறையில் மிகவும் பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சில கூடுதல் சுதந்திரங்களுடன் படத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ராம் சரண்.சிரஞ்சீவியின் தோற்றம் சாத்தியமில்லாதது என்று எதுவும் இல்லை என்ற அளவிற்கு சாத்தியப்படுத்தியுள்ளார். அமிதாப் பச்சன் சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் மிக சிறப்பாக நடித்துள்ளார். சுதீப் தனது முழு திறமையையும் சிரஞ்சீவிக்கு சமமாக வெளிப்படுத்தியுள்ளார்.நயன்தாரா மற்றும் தமன்னா இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக சிறப்பாக எல்லை மீறாமல் வரையறைக்குள் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள். நயன் தாரா மற்றும் தமன்னா இணைந்து நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

ஓளிப்பதிவாளர் ஆர். ரத்தினவேல் கைவண்ணத்தில் காட்சிகள் ஒவ்வொன்றும் நம் கண்முன்னே தெரிகின்றன. சண்டை காட்சிகள் அற்புதமாக இருப்பினும் சில காட்சிகள் ரியாலிட்டி மிக தொலைவில் உள்ளது. அமித் திரிவேதி இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்கு கம்பீரத்தை கொடுத்தாலும் இசையோடு பாடல் வரிகள் ஒட்டவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.ட்ரைலரும், டீசரும், சயீரா படத்திற்கான விளம்பரங்களும் படத்தை பற்றின ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரித்தன. கதை மிக பெரிய அளவில் தேசபக்தியை தூண்டுதவதாக இல்லை. இருப்பினும் வரலாற்று கதையை படமாக மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற தயாரிப்பாளரின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

ஒரு புனைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாகுபலி திரைப்படமே மக்களிடம் பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படமோ உண்மை நிகழ்வுகளை வைத்து உருவாக்க பட்ட படம். இது நிச்சயம் ரசிகர்களின் பாராட்டை பெரும். பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *