கொரோனா வைரஸை உடனடியாக கண்டறிய 70 லட்சம் பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்தக் கருவிகள் எந்த நேரத்திலும் இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது.11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 400 பேர் வரை பலியாகி இருக்கிறார்கள்.கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பரிசோதனைகள் மிகவும் ஆமை வேகத்தில் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. போதுமான பரிசோதனை கருவிகள் இல்லாததால் சோதனை முடிவுகள் தாமதமாகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்ய பி.சி.ஆர். ( பாலிமரேஸ் செயின் ரியாக்சன்) சோதனை நடத்தப்படுகிறது. இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை,மூக்கில் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு தொற்று உள்ளதா என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த சோதனை முடிவை அறிய 48 மணி நேரம் ஆகும்.நாடு முழுவதும் தற்போது இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் ‘ஆன்டிபாடி’ எனப்படும் விரைவு பரிசோதனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அறிமுகம் செய்கிறது.
இது ரத்தத்தை அடிப்படையாகக் கொண்ட சோதனை. ரத்தத்தில் உள்ள செல்களை நீக்கிய பிறகு ‘சீரம்’ எனும் திரவம் கிடைக்கும். அதில் ‘ஆன்டிபாடிகள்’ இருக்கிறதா என்று சோதித்து அறியப்படும்.அதாவது யாருக்காவது நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்கள் ரத்தத்தில் ஆன்டிபாடிகள் உருவாகி இருக்கும். இதன் மூலம் அந்த நபர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார் என்பதை கண்டறியலாம். இந்தப் பரிசோதனையில் 30 நிமிடத்தில் முடிவை அறிந்து கொள்ள முடியும்.ஆனாலும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்திய பிறகு கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யமுடியும். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை உடனடியாக கண்டறிய 70 லட்சம் பரிசோதனை கருவிகளை மத்திய சுகாதாரத்துறை கொள்முதல் செய்கிறது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸை உடனடியாக கண்டறிய 70 லட்சம் பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் 37 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகளாகும். இந்தக் கருவிகள் எந்த நேரத்திலும் இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைகள் கடந்தவாரம் வரவேண்டியது. தற்போது இன்று அல்லது நாளை வந்து சேரலாம் என்று எதிர்பார்க்கிறோம். லும் 33 லட்சம் பி.சி.ஆர்.பரிசோதனை கருவிகளும் விரைவில் இந்தியா வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.