முதல்முறையாக இரணியல் பேரூராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2 சுயேட்சைகளும், ஒரு நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். அங்கு போட்டியிட திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 55 பேரூராட்சிகளுக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு சாதகமான முடிவுகள் அனேகமாக இருக்கும். அதாவது ஆளும் கட்சி தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவது வழக்கம். இதற்கு முன் நடைபெற்ற பல தேர்தலின் முடிவுகள் அதை தான் உணர்த்துகின்றன.
அதேநேரத்தில் சில இடங்களில் ஆளும் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலையும் ஏற்படுவது உண்டு. அந்தவரிசையில் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சியின் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12ல் பாஜக வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியது. மீதமுள்ள மூன்று வார்டுகளில் 2 சுயேட்சைகளும், ஒரு நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.