கோடநாடு வழக்கு: ‘குற்றவாளியை நெருங்கிய காவல்துறை’ – அதிர்ச்சியைக் கிளப்பும் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி

பட மூலாதாரம்,KODANAD ESTATE

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு’ எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய நபராகக் கருதப்பட்ட கனகராஜ் என்பவர் சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தார். மற்றொரு குற்றவாளி எனக் கூறப்படும் சயான் தனது குடும்பத்தினருடன் கேரளா செல்லும் வழியில் சாலை விபத்தை எதிர்கொண்டார். இதில், சயானின் மனைவியும் குழந்தையும் உயிரிழந்தனர்.

தொடர்ந்து, கோடநாடு எஸ்டேட்டின் சி.சி.டி.வி கேமராக்களைக் கையாண்டு வந்த தினேஷ் என்ற நபரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. உடல்நலக் கோளாறு காரணமாக அவர் இறந்ததாகவும் கூறப்பட்டது.

நீலகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க அரசு பதவிக்கு வந்த பின்னர், இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சயானிடம் நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத் 3 மணி நேரம் விசாரணையை நடத்தினார்.

இதையடுத்து, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடமும் விசாரணை நடைபெற்றது. இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னை இந்த வழக்கில் சேர்க்க சதி நடப்பதாகக் கூறினார். மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக உள்ள கோவையைச் சேர்ந்த அனுபவ் ரவி என்பவர், இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். கோடநாடு விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.கவினர் தொடர்ந்து அரசியல் செய்யவே,` அரசியல் காரணங்களுக்காக விசாரணை நடக்கவில்லை. இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியவே விசாரணை நடைபெற்று வருகிறது’ என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து, திங்கள்கிழமையன்று சட்டமன்றத்தில் நடந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கையின் பேசிய முதலமைச்சர், ` கோடநாடு வழக்கை தொடர்ந்து நடத்துவோம். உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது’ என்றார். தி.மு.க அரசு காட்டும் உறுதியையடுத்து, அ.தி.மு.க தரப்பில் சட்டரீதியிலான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

“கோடநாடு கொலை வழக்கை ஐந்து தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றன. காவலாளி ஓம் பகதூர் கொலை விவகாரம் மற்றும் காணாமல் போன காவலாளி கிருஷ்ண பகதூரை தேடுவதற்கு ஒரு குழுவும் சாலை விபத்துகள், கொலையாளிகள் தப்பித்த வழித்தடங்கள் என மற்ற படைகள் துரித விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்திருக்க வேண்டிய பணிகள். இந்த வழக்கில் ஒவ்வொரு தடயங்களாக காவல்துறை தேடிப் பிடிக்கத் தொடங்கிவிட்டது” என்கிறார் அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி.

 “கோடநாடு எஸ்டேட் அருகில் உள்ள டவரில் இருந்து சென்ற அலைபேசி அழைப்புகளையெல்லாம் போலீஸார் எடுத்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. கொலை, கொள்ளை நடந்த அன்று கொலையாளிகள் சென்ற வாகனத்தை கூடலூர் அருகே உள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தி போலீஸ் சோதனையை நடத்தியுள்ளனர். அப்போது, ‘அவர்களை விட மாட்டோம்’ என அங்கிருந்த காவலர்கள் கூறியபோது ஒரு முன்னாள் அமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

‘அவர்கள் நம்முடைய ஆள்கள்தான், விட்டுவிடுங்கள்’ என அந்த அமைச்சர் கூறியுள்ளார். இது தற்செயலாக நடந்ததா எனத் தெரியவில்லை. அடுத்ததாக, அரசுத் தரப்பு சாட்சிக்கு அரசுதான் ஆதரவாகப் பேசுவது வழக்கம். எந்த வழக்கிலும் சாட்சி தடை கேட்டதாக வரலாறு இல்லை. கோவையைச் சேர்ந்த அனுபவ் ரவி தடை கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த சாட்சி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு யார் காரணம்? எங்கேயாவது தடை கிடைக்குமா என இந்த வழக்கில் அவர்கள் அவசரப்பட வேண்டிய அவசியம் என்ன?” என்கிறார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும், “ சட்டமன்றத்தில் சபாநாயகரின் அனுமதியில்லாமல் இந்த விவகாரத்தை சபையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். பேரவையின் விதிகளை எடப்பாடி நன்கு அறிந்தவர். சபாநாயகரின் அனுமதியில்லாமல் பேசியது என்பது சபை விதிகளுக்கு முரணானது. ‘இந்த வழக்கை சந்திக்கத் தயார்’ எனக் கூறாமல், ‘என் மீது பழிபோடப் பார்க்கிறார்கள்’ என்கிறார். ஜெயலலிதா இறந்து நான்கே மாதங்களில் எஸ்டேட்டில் காவல்துறையின் பாதுகாப்பை அகற்ற வேண்டிய அவசியம் என்ன?

எடப்பாடி பழனிசாமியே பொறுப்பு

எஸ்டேட்டின் உரிமையாளரான சசிகலா சிறையில் இருந்தார். அங்கு ஜெயலலிதாவின் உடைமைகளும் இருந்தன. அவரது பொருள்களை நினைவுச் சின்னமாகவும் பயன்படுத்தலாம். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் 2 பேர் இருந்திருந்தால்கூட கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்திருக்காது. அப்போது போலீஸ் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிதான் இந்தச் சம்பவத்துக்கு முழுப் பொறுப்பு.

கோடநாடு எஸ்டேட்டை நான் முழுமையாக சுற்றிப் பார்த்திருக்கிறேன். பெங்களூருவில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்தபோது அட்வகேட் ஜெனரலாக இருந்த நவநீத கிருஷ்ணனை அழைத்துச் சென்றேன். அங்கே ஜெயலலிதாவுக்கு எனத் தனியாக அலுவலம் ஒன்றும் உள்ளது. கோடநாடு எஸ்டேட் தேயிலை தோட்டத்துக்கு எனத் தனி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதனை ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியது சசிகலாதான். அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.

பட மூலாதாரம்,EDAPPADI PALANISWAMY TWITTER

அவர்களையெல்லாம் அப்புறப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும். கொலை, கொள்ளை நடந்ததற்கு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் எடப்பாடி இருக்கிறார். அதனை அவ்வளவு எளிதாக கைகழுவிவிட முடியாது. இந்த வழக்கில் எடப்பாடி சிக்கியிருக்கிறார் என்பதுதான் உண்மை. பல ஆதாரங்களும் தடயங்களும் காவல்துறைக்குக் கிடைத்துள்ளதாக எனக்குத் தகவல்கள் வந்துள்ளன” என்கிறார்.

எடப்பாடி பழனிசாமி மீது தொடக்கத்தில் இருந்தே நீங்கள் முரண்பட்டு நிற்கிறீர்கள். அதன் வெளிப்பாடாக உங்கள் வார்த்தைகளைப் பார்க்கலாமா? என்றோம். `

“அவர் மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் அவர் மீது எந்தவித வருத்தங்களும் கிடையாது. அவரை முதலமைச்சராக பதவியில் அமர்த்திவிட்டு இன்று சசிகலா வருந்துகிறார். அவர் கையில் உள்துறை சிக்கிக் கொண்டுவிட்டது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இந்த வழக்கில் சந்தேகம் தெளிவாகிறது. யார் உயிர் பறிபோனாலும் அது உயிர்தான். விபத்து என்கிறார்கள். விசாரணையில்தான் அது விபத்தா, மரணமா என்பது தெரியவரும். இது தொடர் கொலையாக ஏன் இருக்கக் கூடாது. அப்படியிருக்கும்போது குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வாய்ப்புள்ளது” என்கிறார்.

Related posts:

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது.!
யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !
"சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் இருக்கும்" - நடிகை மடோனா செபாஸ்டியன்!
பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் 'ஜமா' திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறது!
மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் ?
ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில்'மான்குர்த்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. !
வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் வியந்து பாராட்டியுள்ளார்.!
'லவ் டுடே' மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்