நடந்து முடிந்த தமிழக தேர்தலில் பாஜக ரூ.260 கோடி கறுப்புப்பணம் செலவிட்டதா?: நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்ட பரபரப்பு தகவலால் அரசியல் வட்டாரங்கள் அதிர்ச்சி..!!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 260 கோடி ரூபாய் வரை கறுப்புப்பணத்தை செலவிட்டிருக்கலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. பாஜக வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று அக்கட்சியை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்ட தகவல் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்விக்கான காரணம் குறித்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் அறிமுகமாகியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் எனும் வசதியில் விவாதம் ஒன்று நடந்துள்ளது. பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் நடந்த உரையாடலில் பேசிய பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர், பாஜகவில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் 13 கோடி ரூபாய் கொடுத்திருக்காங்கனு நான் கேள்விப்பட்டதாக கூறியுள்ளார்.
தேர்தலில் தோற்றவர்களும், வெற்றி பெற்றவர்களும் கட்சிக்கு முறையாக கணக்கு கொடுத்துள்ளார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் எஸ்.வி. சேகரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. பாஜக-வை சேர்ந்த முக்கிய பிரமுகரான எஸ்.வி.சேகரே பாஜக சார்பில் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 13 கோடி தரப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டிருப்பதால் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சியில் 260 கோடி ரூபாய் செலவிட்டது அம்பலமாகியுள்ளதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். கறுப்புப்பணத்தை ஒழிக்கப்போவதாக கூறிக்கொள்ளும் பாஜக-வின் உண்மை முகத்தை எஸ்.வி.சேகர் தோலுரித்து காட்டியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடப்பட்டு வருகிறது.
எஸ்.வி.சேகர் பேச்சுக்கு பாஜக சார்பில் இருந்து யாரும் கண்டனம் தெரிவிக்காததால் அவரது பேச்சு உண்மையானதாக இருக்கும் என்பதும் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. தேர்தலின் போது எதிர்க்கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடு வீடாக சென்று சோதனையிட்ட வருமானவரித்துறை, எஸ்.வி.சேகர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னரும் பாஜக தலைவர்கள், வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.