லாக் டவுன் முடிந்ததும் 15 ந் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுமா? ரயில்வே பதில் !

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் லாக் டவுன் வரும் 14-ம் தேதி முடிந்தபின், ரயில் சேவை தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு ரயில்வே துறை பதில் அளித்துள்ளது.
கரோனா வைரஸைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் 21 நாட்கள் லாக் டவுன் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 25-ம் தேதி கொண்டு வந்தரர். இதனால் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்களும் வேலையிழந்து வீட்டுக்குள்ளே இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

கடந்த 25-ம் தேதி முதல் சரக்கு ரயிலைத் தவிர அனைத்துப் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. வரும் 14-ம் தேதி லாக் டவுன் முடிவதால், அதன்பின் எப்படி ரயில்கள் இயக்கப்படும், முக்கியமான வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து இயக்கப்படலாம், ஒவ்வொரு கட்டமாக இயக்கப்படலாம் என்று ஊடங்களில் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்தன.

இந்த ஊகச் செய்திகள் அனைத்துக்கும் விளக்கம் அளித்து ரயில்வே துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “ஏப்ரல் 15-ம் தேதி முதல் ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே துறை சார்பில் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு இயக்க ரயில்வே தயாராகி வருகிறது என்ற செய்திகள் தவறானவை.அனைத்துத் தரப்பினருடன் கலந்தாய்வு செய்து, ஆலோசித்து, பயணிகளின் நலனுக்கு ஏற்றார் போல் நல்ல முடிவை, பயணிகள் ரயில் இயக்குவது குறித்து சரியான நேரத்தில் ரயில்வே அறிவிக்கும். சில ஊடகங்களில் வரும் செய்திகள், சமூக ஊடகங்களில் வரும் ஆதாரமில்லாத செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்’’ எனத் தெரிவித்துள்ளது.ரயில் போக்குவரத்து ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து தொடங்கினால் பயணிகள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்தல், ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்த அறிவுறுத்தல், முகக் கவசம் கட்டாயமாக அணிதல் போன்றவை ரயில்வே துறை சார்பில் வலியுறுத்தப்படும் எனச் செய்திகள் வெளியாகின.

மேலும், பயணிகள் தீவிர தெர்மல் ஸ்கேனிங்கிற்குப் பின்பே பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதலில் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் ஒவ்வொரு ரயில் போக்குவரத்தும் தொடங்கப்படும் எனச் செய்திகள் வெளியாகின.லாக்டவுனுக்கு முன் நோயாளிகள்,மாணவர்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவில் சலுகை தரப்படும். சில ரயில் நிலையங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் பயணிகள் கூட்டத்தைக் குறைக்க சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் அனைத்தையும் ரயில்வே மறுத்துள்ளது.