தேர்தல் தொடங்கிவிட்டால் தனக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கும் இந்த தொகுதி வேண்டும் அந்த தொகுதி வேண்டும் என மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் காய் நகர்த்துவார்கள். அந்த வகையில் அதிமுகவில் கொங்கு மண்டலத்தில் அதிலும் குறிப்பாக திருப்பூருக்குள் நடக்கும் மல்லுக்கட்டு குறித்து பார்க்கலாம்.அதிமுகவுக்கு கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றியை அள்ளிக் கொடுத்ததில் கொங்கு மண்டலத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால்தான் ஜெயலலிதா இந்த மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வாரிக் கொடுத்தார். அதன் விளைவாகவே அந்த மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தற்போது முதல்வராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கொங்கு மண்டலம் தமக்கு கை கொடுக்கும் என அதிமுக சீனியர் நிர்வாகிகள், அமைச்சர்கள் கணக்கு போட்டுவருகின்றனர்.
கொங்கு மண்டலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் யாரை நிறுத்துவது என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முடிவைப் பொறுத்து அமையும். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் செங்கோட்டையன் எடுக்கும் முடிவுக்கு தலைமை செவி சாய்க்கும் என்று கூறப்படுகிறது. கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில் எந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முடிவைப் பொறுத்தது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
எஸ்.பி.வேலுமணி இந்த மூன்று மாவட்டங்களிலும் பல்வேறு பிரமாண்ட பிரசாரக் கூட்டங்கள், அரசு வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழாக்கள், விளையாட்டு விழாக்கள், நலத்திட்ட உதவிகள், ஜல்லிக்கட்டு என பம்பரமாக சுழன்று வருகிறார். கோவையில் உள்ள 10 தொகுதிகள், நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த தொகுதியை கொடுக்கலாம் என்பதை வேலுமணி முடிவு செய்துகொள்வார் என்றாலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் யாரை நிறுத்துவது என்பதில் அதிமுகவுக்குள் கடும் போட்டி நிலவுகிறது என்கிறார்கள்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பெயர் அடிபட்டது. மேலும் அவருக்கு நெருக்கமான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்த வழக்கில் கைதாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் அதிமுகவின் இமேஜை டேமேஜ் செய்த இந்த வழக்கு காரணமாக ஜெயராமனை திருப்பூர் மாவட்டத்துக்கு மாற்றினார் எஸ்.பி.வேலுமணி. திருப்பூர் மாநகர் மாவடட்ச் செயலாளர் என்ற பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனால் அவர் திருப்பூர் வடக்கில் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
பொள்ளாச்சி ஜெயராமன் மட்டுமல்லாமல் சீனியர்களான சிவசாமி, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் ஆகியோரும் திருப்பூர் வடக்கு வேண்டும் என மல்லுக்கட்டுகின்றனர். அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ விஜயகுமாரும் அதே தொகுதியை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை உடுமலைக்கு அனுப்பி வைக்க திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது
உடுமலை தொகுதி வீட்டு வசதித் துறை அமைச்சராக உள்ள உடுமலை கே.ராதாகிருஷ்ணனின் தொகுதி. ஆனால் அமைச்சருக்கு இந்தத் தொகுதியில் செல்வாக்கு சரிந்துள்ளதாக அதிமுக தலைமைக்கு உளவுத் துறை மூலம் தகவல் சென்றுள்ளதாக கூறுகின்றனர். இதனால் அவருக்கு இந்தத் தொகுதி மட்டுமல்ல எந்தத் தொகுதியும் இந்த முறை கிடைக்காது என காது கடிக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். எனவே விஜயகுமாருக்குத் தான் உடுமலையில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.