இதுவரை நமக்கு அறிமுகமான சமையல் செய்யும் ரோபோக்கள் எல்லாம் வெறும் உதவியாளர் ரகங்கள் தான். அதிகபட்சம், மது காக்டெயில்கள், காபி, தேனீர் பானங்களை கலந்து தரும் அளவுக்குதான் அவற்றுக்கு அறிவு உண்டு. ஆனால், பிரிட்டனை சேர்ந்த, ‘மோலி’ என்ற ரோபோ வித்தியாசமானது.ஆறு ஆண்டுகளுக்கு முன், உணவகங்களுக்கான ரோபோவாக மோலியை உருவாக்கி வருவதாக அதன் படைப்பாளிகள் அறிவித்தனர்.
தற்போது, ஒரு குடும்பத்திற்கு தேவையான சமையல்களை செய்யும் திறனுடன், வீடுகளுக்கு செல்ல மோலி தயாராகியிருப்பதாக, ‘மோலி ரோபோடிக்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. மோலிக்காகவே மாடுலர் சமையல் அறை உருவாக்கப்படும். அந்த சமையலறையின் உத்தரத்தில் மோலியின் ஆக்டோபஸ் போன்ற ரோபோ கரங்கள் பொருத்தப்படும். அந்தக் கரங்கள் இடமும், வலமுமாக வேகமாக நகருவதோடு, நாலா பக்கமும் லாவகமாக அசையும் திறன் கொண்டவை.
மோலியின் செயற்கை நுண்ணறிவு மூளை, கேமரா வழியேயும், அதன் விரல்களில் உள்ள உணரிகள் வழியாகவும் உணர்ந்து, உரிய இடத்தில் வைத்துள்ள பாத்திரங்கள், கரண்டிகள், உணவுப் பொருட்களை கையாளும் திறன் கொண்டது. அனுபவம் மிக்க சமையல் கலைஞர்கள் சமைப்பதை முப்பரிமாண கேமரா மூலம் பார்த்து, அதேபோல, உடல் அசைவுகள், கை மற்றும் விரல் அசைவுகளை பின்பற்றி மோலியால் ருசியாக, பதமாக சமையலை செய்ய முடியும். விரைவில், 5 ஆயிரம் வகை உணவுகளை மோலி சமைக்கக் கற்றுக் கொள்ளும் என, மோலி ரோபோடிக்சின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். மோலி ரோபோவின் விலை என்ன தெரியுமா? ரூ.2.48 கோடி!